ஞாயிற்றுக் கிழமை, ஆறு மணி

Filed under , by Prabhu on 6/20/2009 06:04:00 PM

0

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை. சென்ட்ரல் ரயில் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அங்க்கிருப்பவர்களை வைத்து நாம் எந்த மாநிலத்தில் இருக்கிறோம் என்று முடிவு செய்துவிட இயலாது. அந்த கூட்டத்தில் சோலங்கிகளும், ராவ்களும், ஜெயின்களும், செட்டிகளும், ஷெட்டிகளுமாக ஒரு குழப்பமான மொழிகளின் கலவைகளாக இருந்தது. சென்னை சென்ட்ரலில் எப்பொழுதுமே இப்படித்தான், பேபல்(Babel) கட்டக் கூடிய பாபிலோனியகள் பல மொழிகளின் கூச்சல்களாக இருக்கிறது. அதுவும் மும்பை ரயில் வரும் நேரமானால் சொல்லவே தேவையில்லை.


நேரம் 17.50. உள்ளே நுழையும் பாதையில் மெடல் டிடெக்டர் காரணமாகவும் என் கையில் எந்தவித பயணச் சுமையும் இல்லாத காரணத்தாலும் வெளியேறும் வழியில் என்னை உள்ளே செல்ல அனுமதித்தார்கள். அதுவும் நல்லதுதான், இது தெரிந்துதான் வந்தேன். நான் ரயில் நிலையத்தினுள் நுழையும் போது அந்தப் பெண்ணின் குரல் ஒலி பெருக்கியில் பயணிகள் கவனத்தை கடன் கேட்டுக் கொண்டிருந்தது. மும்பை ரயில் கிளம்ப இன்னும் 10 நிமிடங்கள் இருப்பதையும் அது உணர்த்தியது.

எனது சிவந்த கண்களும், கலைந்த கோலமும் எதையும் காட்டிக் கொடுத்தவிடக் கூடாதென்பதில் கவனமாக இருந்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் நிகழவில்லை. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. அங்கிருந்த கூட்டத்தின் மேல் என் கண்களை ஓட்டினேன். இதுவே எனக்கு கடைசியாக கிடைக்கக்கூடிய வாய்ப்பாக இருக்கலாம். எனது கணக்குப் படி எல்லாம் தவறாமல் நடக்கனும்.

எனது கால் சராயின் பையில் புடைப்பு வெளிப்படையாக தெரிந்தது. எனது கையை பையில் நுழைத்து துப்பாக்கியை கைகளால் வாஞ்சையுடன் தடவினேன். நேராக சென்று அவனது நெஞ்சில் எல்லா தோட்டாக்களையும் காலியாக்க கைகள் துடித்தது. எனது கைகளை வெளியெடுத்துக் கொண்டேன். காவலர்கள் யாரும் சந்தேகப்படும் படியாக நடந்து கொள்ளக் கூடாது. தவறான நேரத்தில் செய்த செயல் எப்பேர்பட்டவனையும் கடைசியில் சிறையில் கொண்டு நிறுத்தியதை நானே கண்டிருக்கிறேன்.

நேரம் 17.55. அவனெங்கே? அவன் இங்குதான் எங்கோ இருக்க வேண்டும். அப்பொழுது தற்செயலாக நினைவிற்கு வந்தது. அவன் எப்பொழுதுமே முதல் வகுப்பிலேயே பயணம் செய்வான். கூட்டத்தில நீந்திக் கொண்டு சென்று பயணிகள் பட்டியலைக் கண்டேன். அதில் அவன் பெ...ய்ய..ர்ர்........ஆங்.. இதோ! சிக்கட்டான். தீபக் ஜெயின் 48 இருக்கை எண்.57. இருக்கை பெட்டியின் நடுவில் இருக்கிறது. உள்ளே இடித்துக் கொண்டு சென்றேன். அங்கே அவன் குனிந்து பெட்டியில் ஏதோ தேடிக் கொண்டிருந்தான். துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டி, "“தீபக் இது உனக்குதான்”". அவன் திரும்பினான். என்னை திடீரென்று பார்த்ததால் ஒரு நொடி திகைத்தான். திகைப்பை கலைத்துவிட்டு உற்றுப் பார்த்தான்.

"“நீ அஜய் தான?”" , கழற்றிய கண்ணாடியால் என்னை சுட்டியவாறே.

"ஆமா”"

எனது கையில் இருந்து வெடுக்கென துப்பாகியை நான் எதிர்பாராத சமயத்தில் பிடுங்கினான். இப்படி ஒரு வேகத்தை நான் அவனிடம் எதிர்பார்க்கவில்லை.
துப்பாக்கியை புரட்டிப் பார்த்த அவன், "”சொல்லு?”"

முச்சைக் கொஞ்சம் இழுத்துக் கொண்டு ஆரம்பித்தேன்.

"“இது ஒரு சாதாரண சுழல் துப்பாக்கிதான்(ரிவால்வர்). எந்த விசேஷ பாதுகாப்புககும் இல்லை. ஆறு தோட்டாக்கள். மறுபடி நிரப்ப, பழக்கமில்லாத கைகளுக்கு, நேரம் பிடிக்கும். சுட எளிது, ஆனால் துல்லியம் இருக்காது. சிறிது தூரத்திற்கு மட்டுமே ஒத்து வரும். சைலன்சர் பொருத்த இயலாது. கண்டிப்பாக உங்கள் தரத்தவற்கு ஏற்றது அல்ல”."

“"இது எனக்கில்ல. நம்ம பசங்களுக்கு தான்”."

“"அப்போ.......என்ன சொல்றீங்க?”"

"எடுத்துக்குறேன். விலை என்ன?”"

“"ஏற்கனவே சொன்னதுதான். குறைக்க முடியாது. ஏற்கனவே குறைச்சு கொடுத்திருக்கேன்”."

“"இந்த செக்கை எடுத்துக்கோ”."

"செக்கை எடுத்துக் கொண்டு வெளி செல்லும் முன் தயங்கியதைப் பார்த்து,”என்ன ஆச்சு?”"

“"இல்ல......... செக்கா குடுத்திருக்கீங்களேன்னு பாத்தேன்”."

“"உஷாரான் ஆளுய்யா நீ"”, எனக் கூறிக்கொண்டே “பணத்தை எடுத்துக் கொடுத்தான்”.

அதன் பிறகும் தயக்கமாக இருந்தது. இருந்தாலும் கேட்டு விடுவது என்று, “"எங்க அப்பா வெங்கடேஷை தெரியுமா உங்களுக்கு?”", எனக் கேட்டேவிட்டேன்.

“"வெங்கடேஷ்........ம்ம்ம......யாரு?”"

"“உங்க சக்கரை ஆலையில்........”"

“"போன வருஷம் சக்கரை கழிவுகளுக்குள் இறந்துகிடந்தது, உன் அப்பாவா?”"

"“ம்”"

"எனக்கும் ரொம்ப வருத்தம்தான். உனக்கு ஏதாவது காவல் துறையால் தொல்லையா? கேஸ் இன்னும் முடியலைல? எல்லா உதவியும் பண்றேன். என்னவானாலும் தயங்காமல் கேள்”."

“"சரி. போகும் நேரம் வந்துவிட்டது."

வெளியே வந்தப் பிறகும் என் மனத்தில் சூடு அடங்கவில்லை. கைகளும் உதடுகளும் துடித்தன. என்ன அப்பா சாவுக்கு காரணம் அவன் தான் என தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத இயலாமை என்னை தின்றுக் கொண்டிருந்தது. என்ன செய்வது? அவன் அரசியல் செல்வாக்கும் பணமும் அப்படி. அவனை எதிர்த்து ஒரு வழக்கு பதிவு செய்தால் கூட நிற்காது. இதில் தண்டனைக்கு எங்கே போவது. எனக்கு வேறு வழி இல்லை. இது இப்படித்தான் முடிய வேண்டுமென்று இருக்கிறது.

உள்ளே தீபக் தனது இருக்கையின் அடியில் திடீரென்று ஒரு வெள்ளை பொட்டலம் இருப்பதைக் கண்டு, அதை எடுத்துக் கையால் எடை பார்த்து என்னவென்று கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தான்.

நேரம் 18.00. நான் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். சுற்றி ஒரு நோட்டம் விட்டேன். அதோ, கண்டுபிடித்துவிட்டேன். நேராக உள்ளே சென்று கதவை நன்றாக அடைத்துக் கொண்டேன். எண்ணை அழுத்தி காத்திருந்தேன். “"ஹலோ, காவல்துறை கட்டுப்பாட்டு அறையா?.......... ஒரு தகவல் சொல்லனும் ........ஆமா........... நான் யாரென்பது முக்கியமல்ல.........எப்படி கிடைச்சதுன்னு சொல்ல முடியாது......... ஒரு பாம் இருக்கு........ ஆமா மும்பை எக்ஸ்பிரஸ்ல ஒரு......”"

Comments Posted (0)

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!