என்னிடம் ஓட்டு கேக்க வந்த அழகிரி - என்ன கொடும சார்

Filed under , , by Prabhu on 6/20/2009 06:05:00 PM

1

மதுரை தேர்தல் முடிவுன்னு சொன்னதுமே எல்லாத்துக்கும் அது என்னவா இருக்கப் போகுதுன்னு. இன்னைக்கு காலையில்தான் ஓட்டு போடப் போறேன். ஆனால், அதுக்குள்ள தேர்தல் முடிவு சொல்லக் கூடிய நிலைமை இருக்கு இங்க. மதுரையப் பொறுத்த வரைக்கும் தேர்தல் முடிவு என்பது வேட்புமனுத் தாக்கல் அன்றே எல்லாருக்கும் தெரிந்தது தான். இதை தனியே வேறு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்போ நான் பேச வந்த விஷயமும் அது அல்லவே.

மதுரையோட தேர்தல் நிலைமை மற்ற தொகுதிகளை ஒப்பிடும் போது சற்று வேறு்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் நாம் அனைவரும் அறிந்த படி மதுரையின் முடிசூடா மன்னன், தமிழகத்து இளவரசன் மாண்புமிகு அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரிதான்னு சொல்லவா வேணும். அட, பேருக்கே ஒரு பதிவு ஒதுக்கலாம் போலயே. என்னதான் மக்களுக்கு அழகிரியப் பத்தி ஒரு உயர்வான எண்ணம் இல்லைன்னாலும் இவர்தான் ஜெயிக்க வாய்ப்பிருக்கு.


அழகிரியோட அரசியல் வாழ்க்கை என்னைக்குமே நேர்முக அரசியலா இருந்ததில்ல. எப்பவுமே அவரு பிண்ணனி வேலைகள்தான். அதாவது தேர்தலில நிக்க மாட்டாரு. ஆனா கட்சி பணியில இருப்பாரு. சாமில வில்லன் பண்ணுவான் பாத்துருக்கீங்களா? அது மாதிரி. இந்த அஞ்சாநெஞ்சன், அண்ணன் போன்ற பட்டங்கள் எல்லாம் இப்ப ரெண்டு வருஷமாதான். இதுக்கு முன்னடியே அழகிரியோட அதிகாரம் மதிரையில இருந்திருந்தாலும் தா..கிருட்டிணன் கொலை வழக்குல சிக்கி கொஞ்சம் பெயரிழந்திருந்தாரு. ஆனா, இந்த தி.மு.க. ஆட்சி தொடங்கினதில இருந்து அழகிரியோட அதிகார மையமாவே ஆயிருச்சு. அண்ணே ஆ...ன்னு கொட்டாவி விட்டா அடிக்கிறதுக்கும், ச்சூ.......ன்னு சொன்னா சூச்சூ போறதுக்கும் ஆளுங்க வந்திட்டாங்க. மதுரையில சித்திரைத் திருவிழாதான் பெரிய திருவிழான்னு சொல்லுவோம். ஆனா, இத விட பெரிய திருவிழாவா கடந்த ரெண்டு வருஷமா அழகிரியோட பிறந்த நாள் நடக்குது. இந்த தடவ ஒரு படி மேல போய் ஐம்பத்தி எட்டாவது பிறந்த நாள ஐம்பத்தி எட்டு நாள் நடத்தியிருக்காங்க. ரெண்டு ஊரு முழுக்க லைட் போட்டுதிருவிழாவா கொண்டாடிருக்காங்க, இந்த கரண்ட் பஞ்சத்தில. இதுக்கு மட்டும் எங்க இருந்துதான் க்ரண்ட் கிடைக்குதோ? படத்தில வர்ற வில்லன் கணக்கா மதுரையில ராஜா மாதிரி , அந்தாளுக்கு ஏழரையா எம்.பி சீட்டு வந்து சேர்ந்துச்சு.

இதுவரைக்கும் அடுத்தவனுக்காக வேலை பார்த்தது வேற, இப்ப தனக்கே பிரச்சாரம்ங்கிறப்போ பல்வேறு பிரச்சனைகள். இந்த லட்சணத்தில அவரு சும்மா இல்லாம எங்க ஊருக்காரய்ங்கள போய் நம்பி மூணு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில ஜெயிக்கிறேன்னு சொல்லி சவால் விட்டிருக்காரு. சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்த கதையா அவங்கதான் முதல்ல மதுரை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 1000மும், அப்புறம் திருமங்கலம் இடைத்தேர்தல்ல ஐயாயிரமும் குடுத்தானுங்க. அதனால இப்ப மக்கள் பணம் எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. படிப்பறிவில்லாதவங்க காசு கொடுத்தா அவங்களுக்கே ஓட்டு போட்டுருவாங்க. எங்கள மாதிரி படிச்சவங்க காச வாங்கிட்டு பிடிச்சதுக்கு குத்திக்குவோம், முடிஞ்சவரைக்கும் காசு குடுத்தவனுக்கு குத்தாம பாத்துக்குவோம். எங்கள இன்னுமா நம்புறாய்ங்க. ஆனா, ஒரு அநியாயம் நடந்து போச்சு. நாட்டுல ஜனநாயகம் செத்துக்கிட்டிருக்கு. பின்ன? முதல் முறையா ஓட்டு போட வர்ற என்ன மாதிரி இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையா குடுக்க வேண்டிய சன்மானத்த கொடுக்கனுமா இல்லையா? எனக்கு மட்டும் வரவே இல்லைங்க. என்ன கொடும சார் இது?

இப்ப இந்த டீடெயில எதுக்கு சொல்றேன்னா, இதனால தான் இப்போ பிரச்சன. இதுல என்னன்னு கேட்டீங்கன்னா, இப்ப நாடாளுமன்றத் தொகுதிகள் பெருசு. அதனால எல்லாத்துக்கும் அளவாத்தான் கொடுக்க முடியும் எல்லாத்துக்கும் ஐநூறு ரூபாய் கவர்கள்தான். ஆனா மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னா, அவரு கொடுக்கறத இவனுங்கதான் ஆட்டய போடுறாங்கனுங்கன்னு. இத்தனைக்கு அந்த கவர் அவரோட நிர்வாகிகள்க கிட்ட இருந்து வர்றப்பவே சீல் பண்ணிதான் வருது. அப்படியும் ஆட்டய போட்டுற கூடாதுன்னு ஒரு நிர்வாகிய கவர் விநியோகத்தப்போ அனுப்பி வைக்கிறாங்களாம். இதுக்கப்புறமும் அங்க நிலவுற அதிருப்திய தடுக்க முடியல. என்ன செய்யவென்று புரியாமல் அவர்கள் சில இட்ங்களில் மறுவிநியோகம் வேற பண்ணிக்கிட்டிருக்காங்க. ஆனா ஆசை யார விட்டது? ஒருத்தரு அவருகிட்ட போய், "ஐயா, திருமங்கலத்தில இருக்குற என் உறவுக்காரங்கள் எல்லா குடிசையில இருந்து ஓட்டு வீட்டு மாறிட்டாங்க.நான் மட்டும் குடிசையில எப்படி இருக்க்கறது? வழி பண்ணுங்க", எனவே கேட்டிருக்கான். என்ன கொடும சார்?

அழகிரி நேத்துதான் எங்க வீட்டு பக்கம் வந்தாரு, ஓட்டு கேக்க. எங்க வீட்டுப்பக்கம்தான் அவர் வீடு. அதாவது, பெரியார் நிலையத்து வழியா வந்தீங்கன்னா, அடுத்து சுப்ரமணியபுரம், ஜெய்ஹிந்த்புரம்(இங்க நான்), ஜீவா நகர், டி.வி.எஸ. நகர்(இங்க அண்ணன்). அட, பாத்தீங்களா எவ்வளவு பக்கமுன்னு.
அதனாலதான் கடைசி நாளா இங்க வந்திருக்காரு. மத்தியான நேரம், கடும்ம வெயில். அளவான மக்கள் வீடு வாசல்ல இருந்தே பாக்குற அளவு கிட்ட வந்தாரு. ஒவ்வொரு முகமா நிதானமா பாத்து கை கூப்பி ஓட்டு கேட்டுக்கிட்டே போனாரு. ஆளு அக்கினி வெயில்ல நல்லா கருத்திட்டாரு. இவ்வளவு காலம் ஏ.சியிலயே இருந்திட்டு இப்ப வெளிய வந்தா? உங்களயெல்லாம் பாத்தா பாவமா இருக்கு. எங்கள நம்பி இவ்வளவு பெரிய மேட்டர கையில எடுத்திருக்கீங்க. நம்மள இன்னுமா நம்புறாய்ங்க! என்ன கொடும சார் இது!


ஆனா சும்மா சொல்லக் கூடாது இந்த கருணாநிதிய. பெரிய தில்லாலங்கடிதான். தன் கடைசி காலத்தில எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்க்கைக்கு வழி செஞ்சிட்டாரே. ஸ்டாலினுக்கு சட்டமன்றம், அழகிரிக்கு நாடாளுமன்றம், கனிமொழிக்கு ராஜ்ய சபான்னு ஏதோ இந்த தமிழ் நாடே தன்னோட சொத்து போலவும், தான் இந்தநாட்டின் ராஜா போலவும் பிரித்துக் கொடுத்து விட்டாரே, இந்த தமிழீனத் தலைவர். என்ன ஒரு வில்லத்தனம்!

அழகிரிக்கு வெற்றி பெரிசில்லைன்னாலும் அந்த மூணு லட்சம் ஓட்டு மேட்டர் ஒரு தன்மானப் பிரச்சனையாவும், ஓட்டுக்கு லஞ்சம் மேட்டர் அவர் பதவி ஆசைக்கே உலை வைக்கிற பிரச்சனையாவும் இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments Posted (1)

ha ha ha very nice)))

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!