தலைப்பு

Filed under , by Prabhu on 6/02/2009 09:04:00 PM

1

பைபிளில் ஒரு கதை உண்டு. ஒரு காலத்தில் உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மொழிதான் வழ்க்கில் இருந்ததாம். அதனால் அனைவருக்கும் தகவல் பரிமாற்றத்தில் எவ்வகை இடர்களும் இன்றி வாழ்ந்தனர். அப்பொழுது இந்த மனிதனுக்கு ஒரு தேவையில்லாத ஒரு ஆசை (ஆப்பிளானு கேட்டுடாதிங்க, இது அதெல்லாம் முடிந்து ரொம்ப நாள் கழிச்சு). நாம் தான் சொர்கத்தையே பார்த்தில்லையே, அதை சென்றடைய நாம் ஒரு கட்டிடத்தை எழுப்பினால் என்னவென்பது தான் அது. எல்லா மக்களும் பாபிலோனில் கூடி இத்திட்டதை ஒப்புக்கொண்டு கட்டத் தொடங்கினர். அதற்கு பேபெல்(Babel) என்ற பெயரும் முடிவு செய்ப்பட்டது (நுழைவு கட்டண்ம், சிறப்பு தரிசனக் கட்டணம் எல்லாம் முடிவானதா என தெரியவில்லை). வேகமாக வளர்ந்த அக்கட்டிடதைக் கண்ட கடவுள், இது வரவேற்க்கத் தக்கதல்ல என்று முடிவு செய்தார்(பூமியை மனிதன் படுத்தும் பாடு அவரை சற்று யோசிக்க வைத்திருக்கும்). உடனே அவர் கூடியிருந்த மக்களின் மொழிகளை ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொன்றாக மாற்றினார். ஒரு மொழியை சேர்ந்தவர்களே ஒன்று கூடி வேலை செய்வது கடினமாக உள்ள நிலையில் திடீர் மொழி மாற்றம் பெருங்குழ்ப்பத்தை உண்டாக்கியது. அதனால் Babel கைவிடப்பட்டது. இது நமக்கு சொல்வது என்ன? சொர்கத்திற்கு படி கட்டுவது கடினம் என்று கூறினால், நான் அந்த இடத்திலே தோற்றுவிட்டதாக எண்ணுகிறேன். ஏனென்றால், இது திறமையான தகவல் பரிமாற்றத்தை(effective communication)யும் மொழியின் அவசியத்தையும் குறிப்பதாக கூற வந்த நானே சரியாக தகவலை தெரிவிக்க இயலாத பரிதாப நிலையில் இருப்பதாக உணர்த்தும் அது. அவ்வாறான அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.

மேலே கூறப்பட்ட கதை மாற்றங்களின் கட்டாயதையும், சூழ்நிலைக்கேற்ப்ப மாறிக்கொள்வதின்(adaptation) அவசியத்தையும் உணர்த்துகிறது. இது மொழிகளுக்கும், நமக்கும் சேர்த்தே கூறுவது, 'மாற்றங்களை எதிர்கொள்ள தயாரில்லாதவன் பிழைப்பதில்லை. தகுதியுள்ளது தப்பிக் கொள்ளும்(survival of the fittest)' என்பவையே. யோசித்தால் உலகமயமாக்கல்(globalization) கொள்கையும் புலப்படும் (ஓவரா யோசிக்காதடா என நீங்கள் கூறுவது என் காதில் விழுகிறது). ஐயோ, இவனும் ஆரம்பிச்சிட்டானே என்று நினைக்காதீர்கள். அந்த மாதிரியான எண்ணம் எதுவும் இப்பொழுதைக்கு இல்லை. நான் சொல்ல வந்தது, தமிழ் மொழியை பற்றி.

எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு, தமிழனே தமிழுக்கு ஆதரவளிக்க இயலாத நிலையில் இருக்கின்ற நிலையில் தமிழ் என்னவாகுமென்று. இந்த மாதிரியான பதிவுலகமும் அதற்கான வாசகர்களையும், நாள்தோறும் என்னை போன்று புதிதாக இவ்வுலகில் அடியெடுத்து வைக்கும் புதிய இளம் பதிவர்களையும் காணும் பொழுது தமிழ் பிழைத்துக் கொள்ளும் என்றே தோன்றுகிறது. இது ஒரு நல்ல வளர்ச்சி என்றே எண்ணுகிறேன்.

ஒரு மொழி தன்னை மாற்றிக்கொள்ளவோ வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளவோ முற்படுகிறதோ அப்பொழுது அது பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இம்மொழியில் பிறமொழிச் சொற்களை சிறிது கலக்கவிடுதல் நலம் என்றே எண்ணுகிறேன்(தமிழ் காவலர்கள் இச்சிறுவனின் கருத்தை பொறுத்தருல்வார்களாக.). இதை எதிர்ப்பவர்களுக்கு சாவி, திறவு கோல் என்ற இரு சொற்களை நினைவுகூற விரும்புகிறேன். இவை இரண்டில் எதை பயன்படுத்துவதை நாம் விரும்புகிறோம் என்பதை யோசிக்க வேண்டும். 'சாவி'யே நமக்கு பயன்பாட்டில் உள்ளது. திறவு கோல்- தமிழ் சொல், சாவி-பிறமொழி சொல். இப்பொழுது தமிழ் காவலர்கள் தங்கள் எதிர்ப்பைப் பரிசீலிப்பார்கள் என நம்புகிறேன். இப்பொழுதும் கூட நான் 'எழுது கோலையே' பயன்படுத்துகிறேன், என்று விதண்டாவாதம் செய்பவர்கள் தலையில் சீத்த்லைச்சாத்தனார் தனது 'எழுது கோலால்' குத்துவாராக!


இவண்,
அழகிய தமிழ் மகன்.

பின் குறிப்பு: கண்டிப்பாக விஜய் படம் அல்ல.

Comments Posted (1)

பிறமொழிச் சொற்களை உள்வாங்குவது தான் வளர்ச்சியா... !
மிக ”நல்ல” ”சீரான” வளர்ச்சி.. ! வாழ்க !

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!