Vigilante Movies

Filed under , , by Prabhu on 12/02/2010 07:48:00 AM

5

கொஞ்ச காலம் கழிச்சு வந்து எழுதும் போது, ஏதோ புதுசா யாரு வீட்டுக்குள்ளயோ போய் சீட்டு நுனியில் உட்காருவது போலான ஃபீலாக இருக்கிறது. பதிவு ஏத்திட்டு செக் செய்கிறப்போ முன்ன அளவு மக்கள் வந்து பாக்குறதுமில்லங்கிறப்போ, ‘சரி, நியாயம் தான்’ எனத் தோன்றுகிறது. திரும்பவும் இங்க வந்து நிலைநிறுத்திக்க கொஞ்ச நாளாகும். நமக்கே இப்படி இருக்கே, குப்ரிக் மாதிரி ஆசாமிகள் எப்படி 50 வருஷத்துக்கு 12ஏ படம் எடுத்துட்டு இப்படி நிலைத்து இருக்கிறார்கள்?

இது ஒரு சின்ன பதிவுதான். ஒரு அப்சர்வேஷன் அல்லது ‘ஒ’ப்சர்வேஷன் ;).
 தமிழில் சூப்பர் ஹீரோ படங்களே எடுப்பது இல்லையே என்ற நினைப்பு உண்டு. ஆனால், அந்த மாதிரி படங்களுக்கு முக்கிய தேவையான தாவுவதற்கு உயரமான கட்டடங்களும் ஆக்சிடண்ட் ஆகி வில்லனாவதற்கு தேவையான அதிநவீன ஆராய்ச்சிக் கூடங்களும் இல்லாமல் போனதாலோ என்னவோ படங்கள் வரவில்லை. முக்கியமாக காமிக் படிக்கும் வழக்கம் வேறு இல்லை. அங்கோ ஒரு 60 வருட பாரம்பரியம் இருக்கிறது. இன்னும் ஓவ்வொரு கதையும் revamp ச்செய்தால் வாங்கிப் படிக்கிறார்கள். மாதாமாதம் இழுவையாய் செல்லும் கதைகளையும் படிக்கிறார்கள்.


இதிலும் ஒவ்வொரு காலக்கட்டக்களிலும் ஒவ்வொருவிதமான மனநிலை மக்களின் இடையில் நிலவும் போது காமிக்குகளிலும் அதே நிலை இருக்கும். 50களிலும் 60களிலும் உலகப் போரின் தாக்கம் அதிகம் இருந்தது. உதாரணம் - Marvelன் Captain America. அதன்பின் எல்லா கதைகளிலும் குளிர் போரின் தாக்கம் இருந்தது. கதைகளில் சோவியத் சூப்பர் வில்லன்கள் இருந்தார்கள். இதே போல DC comicsம் Golden Age, SIlver Age, Modern என கதையை புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள். மார்க்கெட்டும் அவ்வப்பொழுது விழுந்து எழுந்திருத்துக் கொண்டே இருக்கும்.

இதே போல போன decade ல் காமிக் மற்றும் அதன் சார்ந்த படங்களும் விழுந்தபின் மறுமலர்ர்ச்சியை SpiderMan மூலம் கண்ட பொழுதுதான் நம் மக்களுக்கும் டப்பிங்கில் அவற்றை பார்க்க ஆரம்பிக்க, அந்த படம் ஓடிய தைரியத்தில் இன்ன பிற காமிக்களும் திரைக்கு வர ஆரம்பித்தன.

இப்படியே அங்க வெட்டிவிட்டு நம்ம ஊருக்கும் வருவோம். நம்ம ஊரிலும் காமிக் தீவிர ஃபாலோயிங் இருந்தது. அதுவும் இப்பொழுது டப்பிங் படம் போல டப்பிங் காமிக்குள் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தன. எனக்கு இவைப் பற்றி நேரடி அனுபவம் அதிகம் இல்லை. தமிழ் காமிக்குகளின் இறுதிகாலத்தை ஒட்டியே என் சிறுவயது இருந்தது. அதனால் என்னதான் காமிக்குகள் படித்திருந்தாலும் பின்புலன் தெரிய வாய்ப்பில்லை. ’கருந்தேள்’ க்கு அதிகம் தெரிய வாய்ப்புண்டு. இங்கே ப்ளாக்குகளிலேயே இதற்கு அதிக மக்கள் உலவுகிறார்கள். நிறைய பழைய வரலாற்றை எழுதுகிறார்கள்.

தமிழ் காமிக்குகளின் முன்னோடி அம்புலிமாமாவாகத் தான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. சின்ன வயதில் வெளியூர் போகும் முன் பழைய புத்தகக் கடையில் இருந்து அம்புலிமாமா வாங்கிக் கொடுப்பார் அப்பா. திடீர் பயணமென்றால் பேருந்து நிலைய தமிழ் காமிக்குகள். அதிலும் இரண்டு பதிப்பகங்கள்தான் எனக்கு தெரியும். ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ். நான் படித்தது பெரும்பாலும் லயன் தான். கொஞ்சம் கவ்பாய், மாயாவி மற்றும் கருஞ்சிறுத்தை டைப் சரக்குகளைப் படித்திருக்கிறேன். இதில் சூப்பர் ஹீரோக்கள் இல்லை. மாயாவி The Phantomல் இருந்து வந்த விஜிலாண்டி ரகம்.

டைட்டிலுக்கு வந்தாச்சு. எழுத ஆரம்பிச்சதே ஏன் தமிழில் அல்லது இந்தியாவில் சூப்பர் ஹீரோ அல்லது விஜிலாண்டி டைப் படங்கள் இல்லை என்பதுதான். சூப்பர் ஹீரோ உங்களுக்குத் தெரிந்தது தான். பூச்சி கடித்ததில் இருந்து பிற கிரகங்களில் வந்தவன் என்கிற வகையில் பல காரணங்களால் ஆகிறவன். இந்த வகையில் நம் ஊரில் வந்த ஒரே சரக்கு ‘சக்திமான்’ - சூப்பர்மேனின் rip-offஆக இருந்தாலும் இந்தியாவின் ஆகமவிதிகளின் படி அமைந்த கதை. நல்ல ரெஸ்பான்ஸ் பார்வையாளர்கள் இருந்தாலும், ரொம்பவும் நீளுவதாக மக்கள் கருதியதால் தொடர் முடிந்தது. நம் மக்கள் வில்லனை முடித்து சுபம் போட்டுவிட எண்ணுகிறார்கள். அறுபது வருஷமாக ஆனானப்பட்ட சூப்பர்மேன் கண்களிலேயே கண் விட்டு ஆட்டும் Lex Luthor இன்னும் இருப்பதை யாரும் அங்கே கேட்பதில்லை. மக்களின் மனநிலை வித்தியாசம் அந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் இருப்பதே இதற்கு காரணம்.


அடுத்து விஜிலாண்டி(Vigilante). விஜிலாண்டி படங்களும் ஒரு வகையில் நம் ஊரில் இல்லை. விஜிலாண்டி என்பது முகமுடி மாட்டிக் கொண்டு எந்த சூப்பர் பவரும் இல்லாமல் சாதாரண பலத்தாலோ இல்லை உபகரணங்கள் கொண்டோ அநியாயத்து எதிராக சண்ண்டையிடுபவன். சோ, நியாயப்படி பார்த்தால் Batman சூப்பர் ஹீரோ இல்ல. ஒரு vigilante. இதே போல Punisher, Dare Devil என ஒரு லிஸ்ட் இருக்கு.


அங்க one-shot காமிக் எல்லாம் கூட வரும். ஒரே சீரிஸ் போட்டு தனி கதையை சொல்லி முடித்து விடுவார்கள். 'Watchmen' பார்த்தவர்களுக்கு தெரியும் அது. அது ஒரு one-shot. அது ஒரு குழுவாக அமைந்த விஜிலாண்டிகளைப் பற்றிய படம். அதை படமாக எடுத்திருந்தார் ‘300’ பட இயக்குனர்.


இப்போ ஒரு சந்தேகம் வருது. தமிழில் vigilante படங்கள் வந்ததே இல்லையா? ஏன் இல்லை? ராபின் ஹூட் ரகப் படங்களான் பல ஷங்கர் படங்களும் ஒரு வகையில் விஜிலாண்டி படங்கள் தான். ஜெண்டில்மேன் ஒரு உதாரணம். இவை எல்லாம் விஜிலாண்டி பொதுவான குற்றங்களை எதிர்ப்பதாக இல்லாமல் லஞ்சம், ஊழல், அலட்சியம் என ஒவ்வொரு விதமான Red Tapeன்னால் வரும் தீமைகளை தீம்களாகக் கையாண்டாலும் இவைகளை விஜிலாண்டி படங்களாக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அது கெட்டப் போட்டுக் கொண்டு கொள்ளையடிப்பதில் இல்லையென்றாலும் unplanned ஆக போகும் வழியில் எல்லாம் லஞ்சம் வாங்கும் நபர்களை கொல்லும் இந்தியனில் அப்பட்டமாக ஒரு விஜிலாண்டியில் ஸ்டைல் தெரிகிறது. என்னதான் ஜெண்டில் மேன் முதல் இந்தியன் வரை காண்பித்தாலும் அவை எல்லாம் ஒரு முழுமையான vigilante படங்கள் கிடையாது.  ஒரு சில வகைகளில் சில விதிமுறைகள் ஒத்து வரவில்லை. ஒரு பக்கவான விஜிலாண்டி படம் என்றால் நீங்கள் எதிர்பாராத வகையில் ஷங்கருக்கு பதிலாக அவரது குரு எஸ்.ஏ.சி யை தான் குறிப்பிடவேண்டும்.
படம்- நான் சிகப்பு மனிதன்

என்னதான் தங்கச்சி அம்மா செண்டிமெண்ட் வைத்து கதையை ஆரம்பித்தாலும் அவன்  குடும்பம் உருக்குலைந்த பின் பழிவாங்க துப்பாக்கி எடுப்பது, பின் இது மாதிரியாக எத்தனை பேர் கஷ்டப் படுவார்கள் என மற்றவங்களுக்கும் உதவப் போவது என கிளம்பும் அவர், சிகப்பு டீ-ஷர்ட் லெதர் ஜாக்கெட் என ஒரே உடை, ராபின் ஹூட் என்ற ஒரு புனைப் பெயர், இரவில் வீதிகளில் உலா வருவது, வரும் வழியில் தவறுகள் நடந்தால் சுடுவது, அவை எல்லால் அஃபென்ஸிவ் க்ரைமாக இருப்பது, அவர் பெயரில் பத்திரிக்கையில் விவாதங்கள் வருவது, போலீஸ் துரத்துவது, எல்லா கிரிமினல்களும் ஒன்றுகூடி இவரை அழிக்க முயலுவது என பல வகையில் இது விஜிலாண்டி படங்களின் விதிகளை ஒத்து வருவதால் இன்னபிற இந்திய செண்டிமெண்ட்களையும் எஸ்.ஏ சியின் ட்ரேட்மார்க் விஷயங்களையும் புறந்தள்ளிவிட்டு இதை ஒரு முழுமையான தமிழ் விஜிலாண்டி படம் எனலாம் என்கிறேன். கொஞ்சம் பெருசாகிடுச்சுல்ல? ஏதோ யோசிக்க ஆரம்பிச்சு, எந்த ஒரு ஒருங்கிணைப்பும் இல்லாமல். போகிறபோக்கில் நினைவிற்கு வந்த எல்லாம் சேர்த்து எழுதிக் கொண்டு வந்தாகிவிட்டது. அதனால் இந்த நிலை. சோ, தமிழில் சூப்பர் ஹீரோ படங்கள் இல்லை. விஜிலாண்டி படங்கள் உண்டு. சோ...? சும்மாதான், ஒரு ‘ஒப்சர்வேஷன்’.