Everyday

Filed under , by Prabhu on 10/25/2009 06:56:00 PM

10

வரவர நான் ரொம்ப பிஸி ஆகிட்டு வர்றேன். பரிட்சைகள் நெருங்குது. படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. அதானால பதிவு எழுதுவது கொஞ்சம் கஷ்டம். அது எழுதும் நேரத்துல என்ன ஆயிரம் பேரு தேர்வுல முந்திகிட்டு இருப்பான். அதனால், நான் எழுதுவது நிறுத்திடலாம்னு......... சொல்லல. கிட்டதட்ட நிறுத்திக்கிறேன். ஆனா இடைவெளியில உங்களுக்கு டார்ச்சர் கொடுக்கனுமேன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தேன். கரப்பான் பூச்சிய பாத்தேனே, அதே மேஜையில் உட்கார்ந்து படிக்கும் முயற்சியில் புத்தகத்தில் நட்சத்திரங்களாக கிறுக்கிக் கொண்டிருந்த போது கண நேரத்தில் தோன்றியது இந்த யோசனை. மடமட வென்று அங்கயே உட்கார்ந்து செல்லில் ஒரு கவிதைய வடிச்சிட்டேன். எல்லாரும் அதை வடியாம, சிந்தாம, சிதறாம, பதறாம பருகி மகிழுங்கள். ஆனால், ஆங்கிலத்தில் எழுதி இருக்கேன். அப்பதான் என்ன எழுதினாலும் தப்பு ரொம்ப கண்டுபிடிக்க மாட்டாங்க. பல பேரு படிக்காம கூட நல்லாருக்குனு சொல்லுவாங்க. அதனால கோச்சிக்காம இங்கே(கிளிக்குங்க.. கிளிக்காம போறீங்க?) வந்து படிச்சிடுங்க!




                                ஆண்டவா இன்னும் இவ்வளவு இருக்கா படிக்க?

நேற்றைய நினைவுகள்....

Filed under , by Prabhu on 10/22/2009 11:33:00 AM

16

நேற்றும் வழக்கம் போல படித்துக் கொண்டிருந்தேன், வேறு வழியில்லாத காரணத்தால். நான்  படிக்க பயன்படுத்தும் மேஜை ஜன்னலின் அடியில் இருக்கும். காலையில் வெயிலும், இரவில் காற்றும்(இருந்தால்...) வர வசதியாக அந்த அமைப்பு எனக் கூறினாலும் எனது வித்தியாசமான பழக்கத்திற்காக அப்படி அமைத்திருந்தேன் என் அறையை. படிக்கும் போது சோர்வடைந்தால் கால்களை மேஜைக்கடியில் நன்றாக நீட்டி, நாற்காலியில் உடம்பை சரித்துக் கொண்டு, கழுத்தை நாற்காலி முதுகின் விளிம்பில் முட்டு கொடுத்து மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருப்பேன். அஜய் அப்ப செல்லில் அழைத்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் எனக் கேட்டால், விட்டத்த(விட்டத இல்ல) பாத்துட்டிருக்கேன்னு சொல்வேன். அவனுக்கு புரியும். அப்படிஓய்வாக உட்கார்ந்து நம் எண்ணங்கள் எங்கெங்கல்லாம் ஓடுதுன்னு பார்கிற சுகம் இருக்கே....ஹும்.... வார்த்தை இல்லை. கொஞ்ச நேரத்தில மூளை ரிசார்ஜ் ஆகி நேரமானதை உணர்த்தும் போது நிமிர்ந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்பேன்.

நேற்றும் அவ்வாறே ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கையில் நான் சன்னலிற்கு சிறிது மேலே பார்வையை செலுத்திக் கொண்டிருந்தாலும், பார்வையின் எல்லைக்குள் இருந்தாலும், அது என் பார்வை குவியிலின் வெளியே (Out of focus) இருந்திருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து தான் கண்ணில் தட்டுபட்டது. கறுப்பாக நார் போன்ற இரண்டு நீட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் என் முகத்தின் அடியில் நம்பியார் போல் சிவப்பு விளக்கு எரியாத குறைதான். நான் சொன்னதில் இருந்து அது கரப்பான் பூச்சி எனக் கண்டுபிடித்திருந்தால் நீங்கள் 'யார் மனசுல யாரு' நடத்த போகலாம். என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆனால் எங்க வீட்டுல கரப்பானை 'மிளகா பூச்சி'னு கூட சொல்லுவாங்க. பார்க்க மிளகாய் போல இருப்பதால் இருக்கலாம்.

அதை அடிக்க விளக்குமாறை எடுக்க கிளம்பிய பொழுது மதன் கூறியது நினைவுக்கு வந்தது, கரப்பான் பூச்சி தான் பயப்படும் உயிராகவும், அதுவும் பறக்கும் வகை என்றால் துண்டை தூக்கிக் கொண்டு கத்தி சுற்ற வைத்து விடும் என கூறியி்ருக்கிறார். விளக்குமாறை எடுத்து அடிக்குமுன் எந்த கோணத்தில் அடிக்கலாம் என கோணம் பார்த்த பொழுது கூட அந்த பூச்சி அசையவில்லை. என்ன நெஞ்சழுத்தம்! அடித்து துவம்சம் செய்து வெளியே தூக்கி எறிய முடிவு செய்தேன்.

அடித்த பொழுது சனியன் எப்படியோ தப்பியது மட்டுமல்லாமல் பறந்து வேற காட்டியது. அது சரி, அணு குண்டு போட்டாலும் தப்பி பிழைத்து மீசையை முறுக்கிவிட்டுக் கொள்ளும் இனமாச்சே! கணிணி மேஜைக்கடியில் இருக்கமென சென்றால் யுபிஎஸ் அடியிலிருந்து வெளியேறி வித்தை காட்டி விட்டு தப்பித்தது. ஒரு வழியாக அதை ஒரு முட்டு சந்தில் மடக்கி அடித்துவிட்டு அதை அவ்விடமிருந்து அகற்றும் பொழுது ஜங்கென்று குதித்து ஓடியது. கொலை வெறியோடு மேலும் மூணு போட்டதில் ஒரு கால் பிய்ந்து விழுந்தது. அப்படியும் ஆட்டம் குறைய வில்லை. அது ஒரு உண்மையான survivalist. தலையை எடுத்தாலும் முண்டமாக 13 நாள் வாழும். இதற்கு மேலும் 20 அடி தேவைப் பட்டது அதன் கதையை முடிக்க. கடந்த 25 கோடி வருஷமா கொஞ்சம் கூட மாறாமல் இருக்கும் ஒரே உயிரினம் கரப்பான் தானாம். ஒரு முழுமையான உயிரினமாக இருக்கும் போல. பரிமாண வளர்ச்சி தேவைப்படவில்லையே! அடித்து கொன்று வெளியே தூக்கி எரியும் போது ஏனோ சம்பந்தம் இல்லாமல் 'உன்னைப் போல் ஒருவன்' நினைவுக்கு வந்தது :).


பிறகு அஜய் வர, 'முருகா மன்னச்சிடு செய்யப் போற இந்தக் கொலைக்கு', என கூறிவிட்டு சிக்கன் க்ரில் சாப்பிட கிளம்பினேன்.  நேற்று சஷ்டி.

டாப்பு அடிக்கலாம் - 4

Filed under , by Prabhu on 10/13/2009 01:02:00 PM

25

அலாதீன் நினைவிருக்கா? அந்த விளக்கு பிடிச்சுக்கிட்டு திரியுற பையன்தான். அந்த கதைய இப்போ இந்தியில மாடர்ன் வெர்ஷன்ல எடுக்குறாங்க! ரிதேஷ் தேஷ்முக்(பழைய மகாராஷ்டிர முதல்வர் மகன்) தான் அலாதீன். பூதம் யாராக இருக்கப் போகுது, நம்ம Big B தான். ரொம்ப் பொருத்தம் தான் நினைக்கிறேன். வேற யாரு இந்த பாத்திரத்துக்கு இன்ஸ்டண்டா கிடைக்க போறாங்க? ஒரு நல்ல contemperory, stylish, rocking genie வேணும் என தான் எல்லாரும் நினைப்பாங்க இல்லையா? Right choice.
-------------------------------------------------------------------------------------------------
கொரிய படங்கள் எல்லாம் ஒரு மாதிரியாக நன்றாக இருக்கும் என்று என் நண்பன் கூறுவான். சின்ன பசங்க டுர்ர்ர்ர்ன்னு வண்டி ஓட்டுற மாதிரி ஒரு பேரு இருக்குமே....ஆங்.... இயக்குனர், கிம் டு கிக், (பாம்பே டூ கோவா மாதிரி இருக்கு பேரு!), அவரோட படம். ஒரு ஓடையின் ஓட்டம் போல் சலனம் இல்லாமல் சன்னமாக ஓடும்னு சொல்லுவான். ஆனா, ஒரு படத்துல தவளைய நிதானமா கொன்னு உருளைக்கிழங்கு போல தோலை உரிச்சு சாப்பிடுறது மாதிரியான சீன் இருக்காம், கொஞ்சம் ரியலா, கொடூரமா, அமெரிக்காக்காரனே கட் செய்யுற அளவு. இது எல்லாம் ஏன் tabooவா இருக்கனும் என்கிற சென்ஸில எடுத்திருப்பதா சொல்லுவான் என் ஃபிரண்டு. ஏன் இந்தக் கொலவெறி?

-------------------------------------------------------------------------------------------------
அதை விடுங்க. நான் ரொம்ப காலமா பார்க்கனும் என்று நினைத்த 'My sassy girl' படத்தை பார்த்தே விட்டேன். சமீபத்தில் இப்படி நன்றாக சிரித்து பார்த்த ரொமாண்டிக் காமெடி இதுதான். அதுவும் CAT கலக்கத்தில் இருந்த என்னையே சிரிக்க வைத்துவிட்டதால் உங்களுக்கு செம ட்ரீட் தான். அந்த படத்தின் ஹீரோயின் தான் show stealer. அந்தப் பெண் கதாநாயகனை அடித்த அடி ஒவ்வொன்றும் இன்னும் என் கன்னங்களில் வலிக்கிறது. ஜூன் ஜி ஹ்யூன் ஏற்று நடித்திருக்கும் கதாநாயகி பாத்திரத்துக்கு பெயர் படத்தில் குறிப்பிடப்பட்டதாக நினைவில்லை. இன்னமும் கண்ணை மூடினால் நினைவுக்கும் வரும் கொரிய அழகி. முடிய கோதுகிற அழகுக்கே இன்னொரு தடவை படம் பார்க்கலாம்... ஹும்...

-------------------------------------------------------------------------------------------------
பதிவுலகில் பதிவுகளைப் படிக்கிறேன் என்ற பேரில் எனது ப்ளட் பிரஷரை 'பம்ப்' செய்து கொண்டிருக்கும் வேளையில் எனக்கு சட்டென்று தோன்றியது இந்த விஷயம். எங்க ஊர்க்காரரு விஜயகாந்த் பத்திதான். அவர பத்தி பேசுனா பெரிய ரீச் ஆகுமே. ஆனா அவர் படங்களுக்குள் இருக்குற குறியீட கண்டுபிடிச்ச முதல் ப்ளாக்கர் நான் தான். வாசிம் கான், அந்த கான், இந்த கான், பாப்கார்ன் எனவெல்லாம் வில்லன்களுக்கு பெயர் சூட்டி அவர்களை வானத்தில் பறந்து பறந்து சுழட்டி சுழட்டி அடிக்கும் அவரின் பின்னால் இருக்கும் அந்த மறைமுக எண்ணங்கள் என கட்டுடைத்த முதல் பதிவர் நான் தான். மி த ஃபர்ஸ்ட். Catக்கு படிக்கும் வேளையிலும் இந்த கேடுகெட்ட வேலை உனக்கு எதுக்கு என ஒரு நண்பன் கேட்கிறான். பாலாண்ணே கூல்! (இது ஹாலி பாலா காண்டில் இருந்தப்போ எழுதிய மேட்டர்)

-------------------------------------------------------------------------------------------------
குட்டி ஜான் பத்தி குட்டி ஜோக்
லிட்டில் ஜான் பத்தி ஏற்கனவே ஆங்கிலத்தில் போன டாப்பில் சொன்னேன், பயபுள்ள வெவகாரமான ஆள்னு. ஒரு நாள் கிளாஸில் கிருஸ்மஸ் பண்டிகை வருவதால் கடவுளைப் பத்தி சொல்லி  க்ளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தாங்க டீச்சர். அப்ப கடவுள் எங்க இருக்காங்க எனக் குழந்தைகள் கிட்டயே கேட்டு புரியவைக்க முயற்சி செய்துகிட்டிருந்தாங்க. ஒவ்வொரு குழந்தையும் எழுந்திருச்சு தனக்கு தோணினதை சொல்லிக்கிட்டு இருந்துச்சு. 'கடவுள் ஆகாயத்துல இருக்காரு', 'கடவுள் என் இதயத்தில இருக்காரு', 'கடவுள் சொர்கத்துல இருக்காரு' என பல பதில்கள்; ஏன், ஒரு குழந்தை 'அஹம் பிரம்மாஸ்மி'ன்னு கூட சொல்லுச்சு. நம்ம ஜானாண்ட வந்தப்போ எந்திரிச்ச ஜான் சொன்னான், "கடவுள் எங்க வீட்டு பாத்ரூமில தான் இருக்காரு!". டீச்சரும், க்ளாஸும் அப்படியே மெரண்டு போயிருச்சு. மெல்ல திடமாக்கிட்டு எப்படி கண்ணா எனக் கேட்டாங்க. அதுக்கு அவன் சொன்னான், "எங்கப்பாதான் தினமும் காலையில எந்திரிச்சதும் நேரா பாத்ரூம் போய் கதவை டம் டம்னு தட்டி, 'அய்யோ கடவுளே, நீ இன்னும் உள்ள தான் இருக்கயா'ன்னு கத்துறாறே!"

-------------------------------------------------------------------------------------------------
நரமாமிச உண்ணிகள் இருக்குற காட்டுக்கு சென்று மூன்று இளைஞர்கள் மாட்டிக் கொண்டார்கள். அங்கே அவர்களை வைத்து கபாப், சுக்கா, க்ரில் என ஒரு மெனுவே ரெடியாக, அவர்கள் மூவரும் தலைவன் காலில் விழுந்து கெஞ்சுகிறார்கள். சரி, நீங்கள் மூணு பேரும் காட்டுக்குள் போய் ஏதாவது ஒரு வகை பழத்தை 10 எண்ணிக்கையில் கொண்டு வாருங்கள் என்றான் தலைவன். முதலாமவன் கொய்யாப் பழம் கொண்டு வந்தான். இதை உன் 'பின்'னால் திணிக்க வேண்டும்; பத்தையும் முடிக்கும் வரையிலும் எந்த வகையான உணர்ச்சியும் காட்டக் கூடாது, காட்டினால் அவன் கழுத்தில் ஃபிஷ்க்! அவனும் மூன்றை திணித்துவிட்டான். நாலாவது செல்லும் போது சிறிது வலியில் கத்திவிட அவனைத் தூக்கிட்டாங்க! இரண்டாமவன் செர்ரி பழங்களை கொண்டு வர அவனுக்கு அதே கட்டளை. இவனும் சின்ன பழம்தானே என செய்து கொண்டிக்கும் எட்டாவது முடியும் வேளையில் சிரித்து விடுகிறான். அவனும் ஃபிஷ்க்! சொர்கத்தில் முதல் ஆள் இரண்டாமவனிடம் கேட்டான், "ஒழுங்காதானே பண்ணிகிட்டிருந்த. என்ன கேடு வந்துச்சுன்னு சிரிச்ச?". அதற்கு இரண்டாமவன், " என்ன செய்ய? மூணாவது ஆளு அன்னாசி பழத்தோட வந்ததப் பாத்ததும் என்னால அடக்க முடியல" என்றானாம்.