Filed under
என்னன்னே புரியல
,
கவிதை
,
by
Prabhu
on
3/01/2010 10:55:00 AM
பூமியின் நிழலில் நிலா ஒளிந்த
அந்த வேளையின் இருளில்
தொலைத்த உன்னை,
ஒவ்வொரு தேய்பிறையிலும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
மெல்ல கரைந்து இருளில் கலக்கும் முன்
மங்கிய ஒளியில் உன் கை பிடித்து
சூரியன் உறையும் உலகை நோக்கி செல்வேன்.
கொஞ்சம் அறிவியல் பிண்ணனி - இது சந்திர கிரகணம் வைத்து எழுதியது. பூமியின் நிழலுக்குள் முழுதாக எப்போதாவது வரும் வேளையில் மட்டுமே முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. உபயம் - விக்கி
Filed under
என்னன்னே புரியல
,
கவிதை
,
by
Prabhu
on
2/20/2010 03:25:00 PM
வட்டம்
யாரோ இட்ட வழியில்
ஒவ்வொருவருக்காகவும்
வாழ்ந்து வழக்கொழிகையில்
எனக்கான ஒரு நாளில்
கடற்கரையோரம்
நிர்வாணமாய் நான்
இலக்கு
எட்டும் தொலைவில்
புரியாத ஆசை,
பிரம்ம பிரயத்தனங்கள்
வட்டத்திலிருந்து வெளியே வர.
பிரசவ குடத்தில் இருந்து மீள
முடியாத ஊனம்
என் நெஞ்சில் அழுத்தி நிற்க,
அந்த இலக்கு எட்டிக்காயானது.
உணவு
எதற்கு உழைக்கிறோமென்றால்
வாழ்க்கையில் சாதிக்கப் பிறந்தவனாம்
நாட்டை முன்னேற்றுகிறான் ஒருவன்
ஒருவன் கடனுக்காக.
தாய், தங்கை, லட்சியம், கனவு, வசதி, வறுமை
இத்யாதி இத்யாதி
நாளைய உணவின் ருசியைத்
தேர்ந்தேடுக்கும் பிரயத்தனம் எனக்கு
Filed under
என்னன்னே புரியல
,
சிறுகதை
,
by
Prabhu
on
12/13/2009 02:32:00 PM
மாலை ஆகி இருள் கவியத் தொடங்கியது. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு வீட்டிலும் மனைவிக்கு சமைக்க வேண்டிய கவலையுடன் செல்லும் கண்வனைப் போல கலையிழந்த சூரியன் மேற்க்கில போய் பொத்தென விழுந்தான். இருள் நேரம். திருடர்களுக்கும் கருப்பு உலக ஆசாமிகளுக்கான நேரம். அவர்கள் எல்லாத்துக்கும் இப்பொழுதுதான் பொழுது விடிந்திருக்கும். இதுதான் எங்களின் நேரம். இரவு வந்ததும் நானும் ராஜுவும்னும் கெளம்பிடுவோம். நாங்க இருக்கிற ஏரியா ரொம்ப முன்னேறிய இடமில்லைன்னாலும் ஒரு நகரத்தோட எல்லையில இருக்கிற இடம்ங்கிறதால கொஞ்சம் கட்டுப்பாடு அதிகம்தான். இரவானால் ரோந்துக்கு வரும் வாட்சுமேனில் இருந்து இரவுநேர வேலைக்கு செல்பவன் வரையிலும் எங்களைக் கண்டால் சிறிது பயப்படுவதுதான் எங்களுக்கு சவுகரியம். ஆனால் டாஸ்மாக்கில் இருந்து வெளியில் வருபவன் கடவுளுக்கு என்ன, பொண்டாட்டிக்கு கூட பயப்பட மாட்டான் என்பதால் அவனிடம் யாரும் வம்பு வைத்துக் கொள்வதில்லை.
எங்களுக்கு தொழில் முறை போட்டியாளர்கள் என்று யாரும் கிடையாது. ஆனால் எதிரிகள் உண்டு. ஒரே ஏரியாவுல பல பேரு இருந்துக்கலாம். ஆனா ஒருத்தன் ஒரு ஏரியாவில் இருந்து அடுத்த ஏரியாக்கு போக கூடாது. அப்படி போயிட்டா கேங் வார் தவிர்க்க முடியாததா ஆகிடும். இல்ல ரெண்டு குரூப்பும் ஒரு கூட்டம் போட்டு முடிவெடுக்கிறேன்னு சொல்லிட்டு நடு ரோட்டில காட்டு கத்து கத்திட்டு ஓரமா ஒண்ணுக்கு அடிச்சிட்டு போயிருவானுங்க.
போன மாசம் தான் ஒரு சின்ன தகராறு ஆயிடுச்சு. பக்கத்து தெரு மணி கசாப்பு கடைக்காரர் கிட்ட சின்னதகராறில அந்தாள கீறிட்டான். அதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு அந்தாளு மருத்துவமனைல படுத்துக்க, அவ பொண்டாட்டி ஊரெல்லாம் ஒப்பாரி வச்சிட்டாள். உடனே அந்த ஏரியாகாரனுங்க எல்லாம் ஒண்ணு கூடி போய் புகார் கொடுத்துட்டானுங்க. ராஜா மாதிரி இருந்த எங்க நிலைமை இப்ப பரிதாபகரமா போச்சு. எப்ப வருவானுங்கன்னே தெரியல. திடீர்னு காக்கிக்காரனுங்க ரெய்டு வந்திடறானுங்க. பக்கத்து ஏரியாவுல இருந்த கரிவாயனோட கேங்க மொத்தமா ரவுண்டு கட்டித் தூக்கிட்டு போயிட்டாங்க.
கசாப்பு கடைக்காரன், தெருமுக்கு அம்பிகா ஹோட்டல்காரன், இன்னும் சில கடைக்காரன்களால தான் பொழப்பு ஓடிகிட்டு இருந்துச்சு. இந்த மணியால அது கெட்டுப் போனதுதான் எனக்கு ஆத்திரம். ஓட்டு வீட்டுல தனியா குடியிருக்கிற ராமு தாத்தா தான் இன்னமுமம் ‘நான் பாத்து வளந்ததுக’ என அடைக்கலம் குடுக்கிறார். அதுவும் ஏரியாக்காரர்களுக்கு தெரிந்தால் பிரச்சனை என்பதால் ரகசியமாக நடக்கிறது.
வழக்கம் போல தூக்கிட்டு போயிட்டு எல்லாம் முடிஞ்சதும் வெளிய விட்டுருவானுங்கன்னு நினைச்சிட்டிருந்த என் பொழப்புல மண் விழுந்தது. இந்த தடவை எல்லாமே எண்கவுண்டர்தான் எனக் கேள்விப் பட்டேன். மூணாவது தெருவில இருக்கிற ஜான்சிய வேற பாக்க முடியல. என் பழக்கத்தால அவளயும் தூக்கிட்டு போயிருந்தா? சேசச்சே... நம்மள மாதிரி அநாதையா அவ? குடும்பம் இருக்கு. ராஜுகிட்டயும் சொல்லிவச்சேன். எப்பவும் தயாரா இரு, வாய்ப்பு கெடைச்சா ஓடிரலாம்னு. அவன், அப்ப ஜான்சி எனக் கேட்கிறான். அவளையும் கூட்டிட்டுதான்.
இதெல்லாம் நடக்கும் போதுதான் அன்னைக்கு எங்க தெருவுக்கு காக்கி சட்டைக் காரனுங்க வந்திருப்பது தெரிந்தது. போதாக்குறைக்கு தெருக்காரனுங்க லஞ்சம் குடுத்திருக்கானுங்க. சிக்கினா சோலி முடிஞ்சது. நான் வேகமா வந்து சந்துல பதுங்கிக் கிட்டேன். பின்னால் திரும்பினால் ராஜுவைக் காணோம். கொஞ்ச நேரம் கழித்து காலி ரத்தத்துடன் ஓடி வந்தான். அடிச்சிருக்காங்க. மறைவிடத்துக்கு வரும் முன்ன சொத்தென ஒரு அடி அவன் முதுகில் விழுந்தது. அவன் துள்ளித் துடித்தான். திமிறினான். அவனைப் பிடித்தவன் ராமு தாத்தாவைப் பார்த்து கேட்டான், ‘என்ன சார், உங்களுக்கு பழக்கம்னு சொன்னாங்க. நீங்க சொன்னீங்கன்னா விட்டுடறேன். ஃபார்மாலிட்டீஸ் வேணாம்”. ராமு தாத்தா, ‘பழக்கம் தான். அதுக்காக என்ன செய்வது. தூக்கி வச்சு கொஞ்சவா முடியும். தெரு நாய்தானே?’ என்றார். என் கண் முன்னே அவனைத் தூக்கிச் சென்றார்கள். தெரு நாய் தானாமே? இனி இங்க இருக்க முடியாது. ஜான்சி? இருக்கிற பிரச்சனைல அவ வேறயா? போற எடத்துல பொட்ட நாய் கிடைக்கிறதா கஷ்டம். போதாததுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு. பக்கத்துல இருக்கிற கிராமத்துல பைரவர் கோயில் கட்டி நாயிக்கெல்லாம் கறி வைக்கிறாய்ங்களாமே? அந்த ஊருக்கு வழி சொல்லுங்களேன்.
பின் குறிப்பு : இதை என்ன கேட்டகரில வகைப்படுத்தன்னே தெரியல. என்னவோ எழுத ஆரம்பிச்சு ஆறு ஏழு மாற்றங்கள் அடைஞ்சு, சில மாதங்கள் கிடப்பில் கிடந்து, உள்ளயே ஏன் வைத்திருப்பானேன், படிக்கறவங்க கஷடம் என வெளியிட்டுட்டேன்.