விண்ணைத் தாண்டி வருவாயா

Filed under , , by Prabhu on 2/27/2010 04:53:00 PM

18


பொதுவாக விமர்சனம் எழுதுவது என்ற விஷயத்தை பல காலமாக செய்யவில்லை. அதற்கு பல காரணம் இருந்தாலும், எல்லாரும் எழுதி பதிவுலகம் முழுக்க ஒரே சரக்காக பார்க்கும் பொழுது சுட வைத்த பால் போல எரிச்சல் பொங்கி வழிகிறது. ஆனால் இந்தப் படத்திற்கு யாரும் இன்னும் நிறைய எழுதாத காரணத்தால் நான் எழுதுகிறேன், விமர்சனம் அல்ல. சொந்தக் கருத்துக்கள்.

விண்ணைத்தாண்டி வருவாயா - முழுக்க முழுக்க காதலாகி கசிந்துருகி....

படம் ஆரம்பிக்கும்பொழுதே காதலும் ஆரம்பித்து விடுகிறது. பிறகு படம் முழுக்க காதல், காதல், காதல். எந்த வித சிதறல்களும் இன்றி காதலையே காட்டுகிறார்கள். இப்படி வெறுமனே காதலை மட்டும் எடுத்த படம் இதுவாகத் தான் இருக்கும். படம் முடிந்ததும் கனத்த மனதுடன் செல்ல வைக்கிறார், கௌதம். இஞ்சினியரிங் முடித்துவிட்டு துணை  இயக்குனராகும் ஒருவன், மாடி வீட்டு மலையாள கிறிஸ்டியனைக் காதலிக்கும் கதை.  வழக்கம் போல கௌதம் ஷார்ப்பான வசனங்களாலும், சிம்புவின் வாய்ஸ் ஓவர் மூலமும் இட்டுச் செல்கிறார். இப்படி சுத்தமான, கலப்படமில்லாத, அக்மார்க் காதல் கதை எடுக்க எப்படித் தோன்றியது எனத் தெரியவில்லை. பெரும்பாலும் தொய்வில்லாமலே செல்கிறது. ’அவனவன் காதலுக்காக அமெரிக்காவுக்கே போறான்’ என்பதும், கௌதமிடம் துணை இயக்குனாராக சேரவேண்டுமெனும் பொழுதும், ‘ஏன், தமிழ் படத்துலயே இங்கிலீஷ் பேசி படம் எடுக்க போறயா?” என்றும் தன்னையே கலாய்த்துக் கொள்கிறார்.

பாடல்கள் காட்சியமைப்பிலும் அருமை. சிம்பிளான நடன அமைப்புகள், அசைவுகள் என சிம்பு கலக்குகிறார். நடிப்பிலும் உதறுகிறார். காதலினால் அவர் படும் அவஸ்தைகளைக் உணரவைக்கும் நடிப்பு. எப்பொழுதுமே நண்பர்களிடம் சொல்வதுண்டு, ‘சிம்பு செம டேலண்ட். ஆனா மாஸ் ஹீரோ நினைப்பில் கொல்கிறார்’ என. நிரூபித்து இருக்கிறார். த்ரிஷாவும் அழகாக அலைவதோடு அல்லாமல் நன்றாக நடித்து(உருகி) இருக்கிறார். ஆனால் சிம்புவே மேலோங்கி இருக்கிறார். கணேஷ் என்ற ஒளிப்பதிவாளராக வருபவர் நல்ல சுவாரஸ்யம். பல சமயங்களில் நகைச்சுவை அவர் டிபார்ட்மெண்ட். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குனராகவே வந்து இயக்குனர் பொறுப்பின் கண்டிப்பைக் காட்டியிருக்கிறார்.

சிம்பு, த்ரிஷா இருவருமே படத்தில் செம அழகு என்பதை போஸ்டர்கள் சொல்லியிருக்கும். மனோஜ் பரமஹம்ஸா படத்திற்கு அழகுணர்ச்சி சேர்த்திருக்கிறார். ரஹமான், படத்தில் விளையாடியிருக்கிறார். என்னைப் பொறுத்த வரை ரஹ்மான் படத்தில் ஒரு கேரக்டராகவே தெரிகிறார். கதாநாயகியை முதன்முதலில் பார்க்கும் பொழுது அவள் வழிகேட்டு மாடிவரையிலும் போகும்வரை குடுக்கும் சிம்பொனி ரக இசை அருமை. ஒவ்வொரு பிண்ணனியும் சிறப்பாக இருக்கிறது. இருவரும் கேரளாவில் பேசும் காட்சியில், ’ஆரோமலே’ வின் ஆரம்பத்தில் வரும் இசையை மெல்லிய பிண்ணனியாக விட்டு இருப்பது வாய்பே இல்லை.

படம் கொஞ்சம் நீளமோ? த்ரிஷா கடைசியில் பிரியவேண்டும் என முரண்டு செய்யும் போது பெரிய காரணம் இல்லையென்றாலும், இது கொஞ்சம் இயல்புதான். இப்படியான கதைகளை நிறைய நாம் பார்த்திருப்போம். சில குறைகளும் இருக்கத் தான் செய்கிறது, படத்தில். படம் எல்லோருக்கும் பிடித்து விடாது. நிறைய பேருக்கு பிடிக்கும்.
எந்த கவர்ச்சி உடை எதுவும் இல்லாமலேயே, ’ஓமனப் பெண்ணே’ பாடல்  காட்சியமைப்பு செம sensuous. யப்பா, தாங்கல. :)

பாதி படத்திற்கு பிறகு சத்தம் கொடுத்து தொந்தரவு செய்தவர்களை என்ன செய்யலாம்? படம் இப்படி இருக்குமென அவர்களுக்கு கணிப்பு இருக்காதா என்ன? ஒருவன், ‘என்னடா மணிரத்னம் படம் மாதிரி இருக்கு?’ என சலித்துக் கொள்கிறான். மணிரத்னம், கௌதம் படங்கள் எல்லாம் Urban classics ரகம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

பதின்மம்

Filed under , , by Prabhu on 2/24/2010 11:22:00 AM

18

பதின்ம வயதுகள் - டீன் ஏஜ்.

சொல்லும்போதே பெருமூச்சு தான் வருகிறது. அந்தப் பருவம் முடிந்து ஒன்பதாவது மாதம். எனக்கென்னவோ டீன் - ஏஜ் முடிந்ததும் ஒரு மாதிரி உடைந்துவிட்டேன். சின்னப் பையன் என்ற சாக்கில் அனுபவித்த சலுகைகள் கிடையாது. ஏன் என்னை நானே இன்னும் வயசு இருக்கு, என்ன அவசரம் என்று சமாதானப்படுத்திக் கொள்ள முடியாது. என்ன தான் என் அப்பா நான் செய்யும் விஷயங்களுக்கு, ‘சின்னப்பையன் தானே’ என்றாலும், உலகம் அவ்வாறு பார்க்கப் போவதில்லை. ம்ஹூம்.

டீன் - ஏஜின் அருமை புரியாதவர்கள் பல. இழந்தபிறகு வருத்தப்படுவர். நான் நிகழும் போதே அதன் அருமை புரிந்து கொண்டேன். ஆனால் சரியாக பயன்படுத்தவில்லை. நான் தெரிந்தே இழந்துவிட்ட சில விஷயங்கள் பல. இன்னும்  50-100 புத்தகங்கள் உபயோகமானவையாக படித்திருக்க வேண்டும் அந்த வயதிற்குள். இன்னும் அதிக அளவில் பலவிதமான இசை தொகுப்புகளைக் கேட்டிருக்க வேண்டும். விளையாண்டிருக்க வேண்டும். எட்டாம் வகுப்பில் அறைகுறையாக பயின்ற டேபிள் டென்னிஸைத் தொடர்ந்திருக்க வேண்டும். நன்றாக அடுத்தவரிடம் பேசும் கலையை கற்றிருக்க வேண்டும். இது போல இன்னும் பல எனக்கு வேண்டியிருக்க, நான் மட்டும் வருடங்களுக்கு வேண்டாதவனாகிப் போய் விட்டேன். அவை என்னை விட்டு உருண்டோடி விட்டன.

அட, இழந்ததை ஏன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். நான் பெற்றதும் பலவே. அனுபவித்த தருணங்களின் அருமையும் இனிப்பவையே. 

பதிமூன்றாம் வயதில் தவளையின் இனப்பெருக்க உத்தியைப் படித்த பொழுது ‘சைக்கிள் பம்ப்’ போன்ற அதன் முறையை கிண்டல் செய்து சிரித்தது நினைவில் இன்னும் இருப்பது என் ’அபார’ ஞாபக சக்திக்கு ஆச்சரியம்தான். 
முதன்முதலாக ஆங்கில புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து, Nancy Drew, Hardy Boys என ஓடிக் கொண்டிருந்த வருடம்.

ஒன்பதாம் வகுப்பில் எதேச்சையாக சொல்லிய வார்த்தையில் இருந்து ‘ப்ரீத்தி’ என்ற பெயரை வைத்து என்னை நண்பர்கள் ஓட்டியதும், நிஜமாலுமே அப்படி ஒருத்தி வேறொரு வகுப்பில் இருந்ததும் நினைவில் இருக்கிறது. அதன் பிறகு அந்த பெண் எந்த ஆசிரியரையாவது காண எங்கள் வகுப்பிற்கு வந்தால் என் பெயரைக் கூவி நாராசமாக்குவார்கள். என்னவோ, கடைசி வரை அந்தப் பெண்ணுக்கு நான் ஒருவன் இருந்ததே தெரியாது. நான் கவலைப்பட்டதில்லை. நான் அப்ப எல்லாம் சைட் அடிச்சதில்லைங்கிறது உண்மைன்னாலும் நம்பவா போறீங்க?

ஒன்பதாம் வகுப்பு சரித்திர வகுப்பின் போது கூரையில் இரண்டு அணில்களின் சில்மிஷம் கண்டு சிரித்து மாட்டிய பொழுது, எழுந்து பேந்த பேந்த முழித்தோம். அப்பொழுது என்னுடன் திவாகர் என்று ஒரு நண்பன் உண்டு. எங்கள் தீம் சாங் ஊமை விழிகளில் வரும் ஒப்பனிங் பாடலான ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ தான். இது இப்படியானதுக்கு ஒரு பெரும் காரணமொன்றுமில்லை. அந்தப் படத்தின் முன்பாதி கதை நான் அதுவரை பார்த்ததே இல்லாத காரணத்தால் அதைக் கூறுகையில் அந்த பாட்டுக்கு ’நங்கன நங்கன’ ஒரு வித்தியாசமான பிண்ணனி இசை கொடுத்துக் கொண்டே பாடுவான். அதனாலே பலமுறை வகுப்பில் அந்த சத்தத்தைக் குடுத்து சிரித்து மாட்டியிருக்கிறோம்.


பத்தாம் வகுப்பில் கவலையின்றி இருந்தது மார்க்கில் பளிச்சிட, அந்த மதிப்பெண்களை நான் கேரளா சுற்றுலாவை சுசீந்திரத்தில் துவக்கும் சமயத்தில் தொலைபேசியில் கேட்டுக் கொண்டேன். பிறகு சுற்றுலா முடிந்து வந்து நிதானமாக பள்ளி தேட முற்பட்டேன். கால தாமதம் காரணமாக பெரிய பள்ளிகளில் கிடைக்காத போதும் வருத்தப் படவில்லை. காலத்துடன் வந்திருந்தாலும் என் மதிப்பென்களுக்கு கிடைத்திருக்கப் போவதில்லை.

எனக்கு எட்டாம் முதல் பத்தாம் வகுப்பு வரை வகுப்பில், ‘பருப்பு’ என்பது பட்டப் பெயர். அப்பவே நான் பெரிய பருப்பு எனத் தெரிந்திருக்கிறது என்று பொய் சொல்லாமல் சொல்ல வேண்டுமென்றால், என் பெயரை வேகமாக சொன்னால் ‘பருப்பு’ என திரிகிறது என்று புது இலக்கண விதியை கண்டுபிடிக்க என் பெயர் பயன்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் அசிங்கமான பெயர்களை நான் இன்னும் யாருடன் பகிர்ந்ததில்லை. போவதில்லை.

பதினோராம் வகுப்பில் புதிதாக சேர்ந்த பள்ளியில் அப்போழுதே பிரசவித்திருந்த எலியைக் காணும் அரிய சந்தர்ப்பம். ரோமம் ஏதும் இன்றி அம்மா தேங்காய் கொழுக்கட்டை செய்யும் போது மீந்து போன மாவை குட்டியாக பிடித்து வைத்து வேக வைக்கும் கொழுக்கட்டையை போன்று இருந்தna மூன்று குட்டிகளும் . சிறிது ரத்தத்துடன் பிறந்து கிடந்த அவற்றில் ஒன்று இறந்தது, எப்படி என இப்பொழுது நினைவில் இல்லை.

பன்னிரண்டாம் வகுப்பில் முடிந்த பொழுது என் வீட்டிலேயே, அப்பொழுதுதான் தயாநிதி மாறன் அறிமுகப் படுத்திய அகலவரிசை(Broadband)யில் பார்த்து, குறைந்த மதிப்பெண்கள் தான்(76% - ரொம்ப மட்டமில்லை) என்று பார்த்ததும் காரணமின்றி எனக்கு சிரிப்பு. தொலைபேசியில் அதை என் அப்பாவிடம் கூற, அவரும் அதே போல சிரிக்க, நானும் சேர்ந்து சிரித்த விந்தையான தருணம் யாருக்கும் அமைந்திராது.

இதன் பிறகு என் வாழ்க்கையில் நான் எடுத்த முக்கிய, நல்ல முடிவு, அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தது. உயிரியலுக்கு விண்ணப்பம் போட்டு கிடைத்த பிறகு இயற்பியலுக்கும் விண்ணப்பம் போட்டு இயற்பியலில் சேர்ந்தேன். பிறகு 10 நாளுக்கு பிறகு உயிர்தொழில்நுட்பவியலின் ஆர்வம் காரணமாக உயிரியலுக்குத் தாவினேன். அது மட்டுமல்ல இயற்பியல் படித்தால் நமக்கு வெவ்வேறு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எம்.பி.ஏ தவிர பிற வாய்ப்புகள் எதுவும் இருந்து திசை மாறவிடக் கூடாது என்றும் உயிரியல் படித்தால் எம்.பி.ஏ படிக்க முடியாதா என்றும் தெனாவட்டுடன் உயிரியல் எடுத்தேன். அதன் பிறகு என்னைப் பார்தது இந்தியாவிற்கு ஒரு ஆறு, ஏழு விஞ்ஞானிகள்(அ) இழப்பாகிவிட்டது.

கல்லூரி வாழ்க்கையில் அனுபவித்தற்கே தனிப் பதிவு போடலாம். ஷான்சி க்ளப்(இப்பொழுது இல்லை), கல் பெஞ்சுகள் [இதற்கும் அதே கதி :( ] , மரத்தடி வட்ட சுவர், காண்டின், டி.பி.எம் நூலகம், நிறைய மரங்கள், மாணவர்-ஆசிரியர் நட்புறவில் ஒரு வித்தியாசமான துறை என அனுபவித்தது ஏராளம், தாராளம். நான் கல்லூரியில் சேர்ந்த பொழுது ஹாரி பாட்டரில் வரும் பள்ளி போல் புரியாத பாதைகளாக காடு போல இருக்கும். இதை சிறிது அழித்த கோபம் இன்னும் எங்களுக்கு அபரிமிதமாக உண்டு. இப்பொழுது இந்தக் கல்லூரியில், என் துறையில் தலைவராக இருந்தவரை இவ்வளவு சாதாரணமாக, பேசி, கிண்டல் செய்து சிரிக்கும் அளவுக்கு ப்ளாக்கர் ஆக்கியிருக்கிறது. அவர் தருமி(link).

அதன் பிறகு கல்லூரியில் ஸ்ட்ரைக் நடந்து அதிலும் நாங்கள் கவலைப் படாமல், கடலையும் கூத்துமாக நன்றாக பொழுது கடத்தினோம். வருடத்திற்கு ஒரு பெண்ணாக கடமையாக சைட் அடித்தோம். நாங்கள் எல்லோரும் ஏக பத்தினி விரதனோட முன்னோடிகள். ஒரு பெண்ணை குறித்துக் கொண்டு அவளை மட்டுமே சைட் அடிப்போம். கடைசி வரைக்கும் அவளிடம் சரியாக பேசவில்லை என்ற வருத்தத்தைத் தவிர ஹார்மோன் விளையாட்டுகள் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் நகக்கடிப்பு வெற்றியடையும் இந்திய கிரிக்கெட் போல சுவாரஸ்யமாகவே இருந்தது. 

இவ்வளவையும் சொல்லிவிட்டு அஜய்(link) பற்றி சொல்லவில்லை என்றால் சாமி கண்ணைக் குத்தாவிட்டாலும் அவன் குமட்டில் குத்துவான் என்பதால் சொல்லிவிடுகிறேன். மேற்கூறிய அனைத்து சமயங்களிலும் என் உற்ற தோழன். என் குடும்பத்திலொருவன் போல என்றெல்லாம் ஓவராக சொன்னால் அவனுக்கு அரிப்பு ஏற்படுமென்ற காரணத்தால் மேற்கொண்டு விளக்கம் வேண்டியதில்லை.

மூன்றாம் ஆண்டின் இறுதியில் அஜயால் ப்ளாக்கர் எனக்கு அறிமுகமாகிய ஒரே வாரத்தில் எழுத நுழைந்து விட, அந்த ப்ளாக்கை சரியாக எனது பிறந்த நாளுக்கு சில நாட்கள் முன்பு ப்ளாக்கர் பிடுங்கிவிட்டது. எனது டீன் - ஏஜ் முடிந்தது, ப்ளாக்கரின் மூடு விழாவுடன் தான். அது நடந்து இப்பொழுது ஒன்பது மாதமாகி இதை கிஷோரின்(link) அழைப்பிற்கிணங்கி எழுதிக் கொண்டிருக்கிறேன். பொதுவாக எனக்கு தொடர் பதிவுகளில் நம்பிக்கை இல்லை. இதை கிஷோருக்காகவே எழுதுகிறேன். அப்புறம், சூர்யாவுக்கு(link) ஒரு தொடர் பதிவு கடன்பட்டிருப்பதை மறக்கவில்லை என்பதை கூறிக் கொள்கிறேன். யாராவது இதற்கு முன்னர் என்னை தொடர் பதிவிற்கு கூப்பிட்டு நான் எழுதவில்லை என்றால் மன்னிக்கவும், ஒருவேளை அந்த தலைப்பில் நான் வறண்ட கருத்துக்களுடையவனாக இருந்திருக்கலாம்

ஐயா, யாரு இந்த மாதிரி தொடர் பதிவுகளைத் தொவக்குபவர்?நான் யாரையும் அழைக்கவில்லை. ஒரு அளவுக்கு மேல் இதே மாதிரி சரக்கை எல்லாரிடமும் படித்தால் சலிப்பு தட்டிவிடாது?

சில பயணங்கள் - 2

Filed under , by Prabhu on 2/23/2010 11:20:00 AM

10

மடிவாலாவில் இறங்கியதும் ஆட்டோவாலாக்கள் மொய்க்கிறார்கள். எல்லோருக்கும் தமிழ் தெரிகிறது. நீங்கள் அங்கே இறங்கி, ’ஐயா நான் சிரம பரிகாரம் செய்து கொள்ள ஒரு நல்ல விடுதிக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்றால் கூட புரிந்து கொள்வார்கள். சிறிதே தடுமாறும் தமிழ் பேசவும் செய்கிறார்கள். மீட்டருக்கு மேல் பத்து கேட்கிறார்கள். நான் நான்கு வருடங்களுக்கு முன் முதன்முதலில் போன பொழுது மீட்டரே வேத வாக்கு. சமீப வருடங்களாக சென்னைக் காரர்களைப் பார்த்துக் கற்று கொண்டிருக்கிறார்கள. மீட்டருக்கு மேல் பத்து கேட்டார், ஐந்தைக் கொடுத்து சமாளித்தோம்.

கோரமங்களாவில் என் அண்ணன் வீட்டுக்கு போய் கதவைத் திறக்கவும் ஓடி வந்து எட்டி கண்ணை உருட்டிப் பார்த்துவிட்டு பின்வாங்கினவள், என் அண்ணன் மகள் சுகிதா. சுகிதா  என்றால் ஒளி கீற்று என்பது போன்ற அர்த்தம் வரும். என்னடா புதுசா வாயில் வராதபடி வச்சிருக்கீங்கன்னு எங்க அத்தை கூட கேட்டாங்க. வாயில் நுழையுற மாதிரி வைக்கனும்னா வாழைப்பழம்னு தான் வைக்கனும் என கவுண்டமணி சொல்வார். பெயர் வைக்கும் போது யாரும் அதிகம் பயன்படித்தாத பெயராக இருக்க வேண்டும் என்பது எனக்கு ஒரு obsession. என் பெயரை சொல்லி அடுத்தவனைக் கூப்பிடும் போது ஏற்படும் அசூயைக் கூட காரணமாக இருக்கலாம்.

அண்ணன் வீட்டிற்குப் போனதும் கடமையாக கொட்டிக் கொண்ட பிறகு குசல விசாரிப்புகளும் குழந்தையுடன் விளையாட்டும் தொடர்ந்தது. சுகிதா துறுதுறுவென வருகிறாள். அவளுக்கு உட்காரத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன். உட்கார்ந்து பார்த்ததில்லை, ஒரே ஓட்டம் தான். ஒரு வயது தான் ஆகிறது. அதற்குள் அநியாய அடம். அம்மா, ப்பா என்று எப்பயாவது பாசம் பொங்கும் போது மட்டும் வருகிறது. நான் சொல்லச் சொல்லி சொன்னால் வாயில் விரல் வைத்துக் கொண்டு கேவலமாக நம்மை பார்க்கிறாள், ‘வெட்கமாயில்ல’ என்பது போல். நான் அவளைத் தூக்கி வெளியே வந்த பொழுது, bbaa, bbaa என சத்தம் எழுப்பி கையை அழைத்தாள். அந்த திசையில் பார்த்தால் மாடு. மாடி வீட்டு நாய் ராமு வந்தால் ட்டா,ட்டா என அழைக்கிறாள். காதைப் பிடித்து இழுக்கிறாள். நான் நாய் இருக்கும் தெருவில் நடக்க ஆரம்பித்ததே காலேஜ் வந்த பிறகு தான். அதற்கு முன் சித்தப்பா வீட்டிற்குக் கூட சுத்தி தான் செல்வேன், அந்த குட்டி பொமரேனியன் நாய்க்காக.

இப்படிபட்ட சாகச வீராங்கனை பயப்படும் விஷயம் உணவு. ம்ஹூம்.. ஒரு வாய் உண்ணேன் என்கிறாள். அதனாலேயே வத்தலாக இருக்கிறாள். மடியில் போட்டு பாலோ அரைத்த உணவோ கொடுக்கும் முன் நடு விரல் இரண்டை சூப்பிக் கொண்டு வெளியே எடுக்க மாட்டாள். மேஜையில் இருக்கும் பொருளை எல்லாம் சூறையாட அவள் ஓடி வந்தால், ஒரு புட்டி பாலை வைத்து அவளை விரட்டி விடுவேன்.  இந்த தடவை அவளுக்கு டயாபர்  அண்ணன் பெரிதாக வாங்கி விட அவள் டெண்டுல்கர் போல அதை அப்பப்போ அட்ஜெஸ்ட் செய்து கொண்டே ஒரு முழி முழிப்பாளே பார்க்கனும். சிரிப்பாக இருந்தது. அவள் தத்தக்க தத்தக்க என நடந்து விழும் அழகு... வாய்ப்பே இல்லை.

அன்று ட்வீட்டில் நான் பெங்களூர் வந்ததை கேட்காதவர்களுக்கும் கூவி சொல்லிவிட்டு தூங்கச் சென்றேன். அடுத்த நாள் ஊர் சுற்ற வேண்டி இருந்தது. அதிகபட்ச அலம்பல்களுடன் பெங்களூர் வாழ் நண்பன் என்னுடன் வர ஒப்புக் கொண்டான். வேறு எங்கு செல்லத் தெரியாமல் என் நண்பன் கூப்பிட்ட இஸ்கான்(ISKCON) செல்வதற்காக மெஜஸ்டி பேருந்து நிலையத்தில் சந்திக்க முடிவு செய்யப்பட்டது. போகும் வழியில் இருக்கும் லேண்ட்மார்க்குகளைப் மனப்பாடம் செய்யும் முயற்சியில் அயற்சியடைந்து FM கேட்கத் துவங்கினேன். சென்ற முறை போல இந்த முறை நெடுக கன்னடம் கேட்கப் பிடிக்கவில்லை. தண்டவாளத்தின் நடுவே ஓடி மின்சார ரயில் பிடிப்பவனைப் போல நடுவிலிருந்த கன்னடத்தைத் தாண்டி இந்தி மற்றும் ஆங்கில ஸ்டேஷன்களில் ஓடிக் கொண்டிருந்தேன்.

மெஜஸ்டியில் நண்பனுக்காக காத்திருக்கும் சமயத்தில் இயற்கை ’அன்னை’ ’ஃபோன் போட’, சேலம் பேருந்து நிலையம் நினைவுக்கு வர, தயக்கத்துடன் சென்றால், கழிப்பறை இலவசம். கழிப்பறை சுத்தமாகதான் இருந்தது. பிறகு எங்கிருந்துதான் அப்படி முக்கைத் தட்டிக் குடலை வாய் வழியே வெளியே கூப்பிடும் நாற்றம் வருகிறது எனப் புரியவில்லை. வெளியேறிய சிறிது நேரத்தில் சொன்னபடி ஒன்றாம் நடைமேடையில் சந்தித்தோம். ’இஸ்கான்’ செல்லும் பஸ்ஸைப் பிடித்து நடத்துனரிடம், ‘இஸ்கான் வந்தா சொல்லுங்க’ என தமிழில் சொல்லிவிட்டு ஒரு நாள் சீட்டு வாங்கினான். 32 ரூபாய்க்கு டிக்கட் வாங்கினா வோல்வோ பஸ் தவிர எல்லாவற்றிற்கும் ஒரு நாள் முழுக்க எங்கு வேணுமென்றாலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம். ’இங்க தைரியமா தமிழில பேசு. நிறைய பேருக்குத் தெரியும்’, என விளக்கினான். அவனிடம், ‘நீ முதலில் தமிழில் பேசு’ என்றது அவனுக்கு புரியவில்லை. நான் அதன் பிறகு சில பல சமயங்களில் தமிழ்  பேசியிருக்கிறேன். நிறைய புரிந்து கொள்கிறார்கள்.

 இஸ்கானுக்கு இங்கு இறங்கி நடக்கனும் என்று சொன்னதும் இறங்கி நடந்த எங்களுக்கு நீண்ட வரிசையில்லாத இஸ்கானைக் கண்டதும் புத்துணர்வுடன் சென்றால், ‘சூரிய கிரகணத்தின் காரணமாக மாலை வரை இஸ்கான்’ மூடப்பட்டிருக்கும் என்ற பலகை எங்களைப் பார்த்து பல் இளித்தது. சரி Forum போகலாம் என முடிவு செய்த பொழுது, எனக்கு என் வேலை தோன்றியது. போகும் வழியில் ஒரு காலேஜில் இறங்கி எவன் வாயையாவது பிடுங்கிவிட்டு செல்லலாம் என சொல்ல பேருந்து நிறுத்ததிற்கு கிளம்பினோம். எந்த பேருந்தில் வந்தோமோ அதே பேருந்தே கிடைத்தது. போதும், தொடர விடுவோம். அடுத்த பதிவில் எனக்கு பெங்களூர் பற்றித் தெரிந்த கொஞ்ச விஷயங்களை வளவள என்று பேசுவோம்.

வட்டம்

Filed under , , by Prabhu on 2/20/2010 03:25:00 PM

13

வட்டம்
யாரோ இட்ட வழியில்
ஒவ்வொருவருக்காகவும்
வாழ்ந்து வழக்கொழிகையில்
எனக்கான ஒரு நாளில்
கடற்கரையோரம்
நிர்வாணமாய் நான்

இலக்கு
எட்டும் தொலைவில்
புரியாத ஆசை,
பிரம்ம பிரயத்தனங்கள்
வட்டத்திலிருந்து வெளியே வர.
பிரசவ குடத்தில் இருந்து மீள
முடியாத ஊனம்
 என் நெஞ்சில் அழுத்தி நிற்க,
அந்த இலக்கு எட்டிக்காயானது.

உணவு
எதற்கு உழைக்கிறோமென்றால்
வாழ்க்கையில் சாதிக்கப் பிறந்தவனாம்
நாட்டை முன்னேற்றுகிறான் ஒருவன்
ஒருவன் கடனுக்காக.
தாய், தங்கை, லட்சியம், கனவு, வசதி, வறுமை
இத்யாதி இத்யாதி
நாளைய உணவின் ருசியைத்
தேர்ந்தேடுக்கும் பிரயத்தனம் எனக்கு

சில பயணங்கள்

Filed under , by Prabhu on 2/05/2010 11:58:00 PM

21

சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4
சில பயணங்கள் - 5
எங்கள் வீட்டில் முடிவு செய்த பொழுது அவர்களுடன் பெங்களூர் போக விருப்பமில்லை. ஆனால், என் அம்மா அப்பாவுக்கு பேத்தியை பார்க்கனும் என பேரார்வம். அவர்கள் முடிவை ஒண்ணும் செய்வதற்கு இல்லை. ஆனால் மூன்று நாட்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வது எனற பிரச்சனையும் இல்லையென்றால் சித்தப்பா வீட்டுக்கு சென்று சாப்பிட வேண்டிய கட்டாயத்தின் பயமும் காரணமாக நான் ஊருக்கு கிளம்ப முடிவு செய்துவிட்டேன். சித்தப்பா வீட்டுக்கு சென்றால் இன்னும் சாப்பிடு என புளிமூட்டை அடைக்கிறாற் போல சாப்பிட வைத்து விடுவார். அத்துடன் அடுத்த வீட்டிற்கு சென்று சாப்பிடும் போது அவர்கள் நேரத்திற்கு நாம் உடன்பட வேண்டும், பசிக்கவில்லையென்றாலும். அதனால் பெங்களூர் சென்று நாலு பெண்களையாவது பார்த்து வரலாம் என கிளம்பிவிட்டேன்.

பொங்கல் அன்று காலை நாலரைக்கே அடித்து எழுப்பி, போய் குளி என விரட்டினார்கள். பயண அவசரம் காரணமாக பொங்கல் குக்கரில் தயாரானது. பொங்கவில்லையென்றாலும் அது பொங்கல் தானா என நான் யோசித்த பொழுது பொங்கல் வந்து விட அந்த எண்ணத்தை உதிர்த்து விட்டு தட்டில் பொங்கலை கொட்டிக் கொண்டேன். அம்மா எனக்காக அளவாகவே சக்கரை கலந்திருந்தாங்க. வரவர ஒரு சில வகை இனிப்புகள் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டால் சரக்கடித்தாற் போல ஒரு மிதப்பு.

ஆரப்பாளயத்திற்கு ஆட்டோவில் சென்று இறங்கினால் சேலம், ஓசூர் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. என் முடிவின் படி ஓசூர் வண்டியில் ஏறி அமர்ந்தோம். பொங்கலன்று பயணம் செய்ய முடிவு செய்த என் அப்பாவின் புத்தி கூர்மையை மெச்சிக் கொள்ள வேண்டும். பஸ்ஸில் பாதியை நிரப்பக் கூட கூட்டமில்லை. நான் ஒரு மூன்று பேர் அமரக் கூடிய இருக்கையில் படுத்து திண்டுக்கல் வரை தூங்கிவிட்டேன். திண்டுக்கல்லில் ஒரு தோசை சாப்பிட்டுவிட்டு வந்து அமர்ந்த பொழுது டீ-சர்ட், ஜீன்ஸுடன் 20+ மதிக்கத்தக்க ஒருவன் வந்தான். தோளில் இருந்த பையும் ஷூவும் அவன் ஏதோ வெளிநாட்டுக் கம்பெனியில் வேலை செய்கிறார் போலத் தெரிந்தது. போனிலும் அலுவல்களை பேசிக் கொண்டே வந்தான். பெங்களூர் செல்கிறான், ஓசூர் வரை இருப்பான் என கணித்தேன்.

திண்டுக்கல் தாண்டியதும் அகன்ற தேசிய நெடுஞ்சாலையை கண்ட ‘ஆழி அகல் வீதி’ என மதுரையை சங்க இலக்கிய நூல்  விளக்குவாதாக சிறு வயதில் படித்தது ஞாபகத்துக்கு வந்தது. மதுரை வீதியில் ஒரே நேரத்தில் இரு தேர் அநாயசமாக செல்லுமாம். இப்பொழுது இரு கார் சென்றாலே அந்தத் தெருவில் வாகனங்களின் ஹெட்லைட் கண்கள் முறைத்துக் கொள்கின்றன. இந்தக் கட்டத்தில் அவ்வளவு அகண்ட சாலைகளைக் காணும் போது ஆச்சரியமே.  Free way, Express way, Autobahn என வெளிநாடு சென்று வந்த நம்மவர்கள் கூறும் சாலைகளுக்கு சிறிதும் குறைந்ததில்லை. சுத்தமாக, சீராக அகலமாக பல லேன்களுடன் இருந்தது. சுங்கச் சாவடிகள் அருகே அதன் பிரம்மாணடம் புரிகிறது. சாவடி அதிகாரிகள் மஞ்சள் சட்டையும் டையுமாக இருந்தனர். தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கலாம் என அப்பா கூறினார்.


அடுத்து வந்த ஊர் கரூர். பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளைக் காணும் போது அகன்று, கட்டுமான அமைப்புகளும் நன்றாக இருந்தது. தமிழ்நாட்டில் முக்கிய ஊரான மதுரையில் இப்படி இல்லையே வீதிகள் என ஆதங்கம். கரூரில் எல்லா சாலைகளும் இப்படி இருக்கிறது என்றால் அது நல்ல விஷயம் தான். எனக்குத்தான் புகைச்சல். இதைத் தாண்டி செல்லும்போது மீண்டும் ஒரு சாவடி. ஓட்டுநர் என்னவோ பேசினார், தடுப்பை திறந்துவிட்டார்கள். பின்னர் தெரிந்து கொண்டேன் வாராந்திர பாஸ் வசதி உண்டு. ஒரு தடவைக்கு 50 ரூபாயாம். பெங்களூர் செல்வதற்குள் 5,6 சாவடிகள் பார்த்து விடுவோம். ஒரே வழி, அதிலும் இப்படி அதிக சுங்கம் என்பது அநியாயம்.

அதைத் தாண்டி நாமக்கல் பேருந்து நிலையத்தினுள் நுழைந்த பொழுது அருகில் ஒரு மலையும் அதன் மேல் ஒரு கோட்டைச் சுவரைப் போன்றும் இருந்தது. என்னவென்று கேட்டதற்கு கோட்டைடா என்று விளக்க முற்பட்டார். அம்மா இடைமறித்து, ’சும்மா குழப்பாதீங்க. மேலே ஒரு கோவில் இருக்கிறது’ என்றார். அதைத் தான் சொல்ல வருகிறேன் என்ற அப்பா, ‘அந்த காலத்தில் கீழே போர் புரிந்து கொண்டிருக்கையில் பலவீனமடைந்தால் தப்பி ஓடி உள்ளே ஒளிந்து கொண்டு ‘தற்காப்பு போர்’ செய்வார்கள். வெளியே முற்றுகை நடக்கும். யார் அதிகநாள் தாங்குகிறார்களென்பது போரின் முடிவை நிர்ணயிக்கிறது’ எனறு விளக்கினார். அந்த மாதிரியான அரண்களிலெல்லாம் ஒரு கோவில் இருப்பது வழக்கம் என நான் படித்ததுண்டு. தஞ்சையின் பழைய கோட்டையினுள் இருந்த காளி கோவில் இன்னும் உண்டென கேள்வி. சரியான தகவல் நினைவிலில்லை. தமிழனின் வீரம் பற்றி அதிகம் பேசி நம்மை ஏமாற்றும் அளவு நம் ஊரில் வீரம் இருந்திருக்காது, போர்தந்திரம் தான் வெற்றியை நிர்ணயம் செய்கிறது என்பது திண்ணம். புறநானூற்று வீரமெல்லாம் தமிழ் சினிமாவின் கதாநாயகனின் வீரம் போல்தான் என ஒரு எண்ணம் தோன்றுகிறது.

(சில நாட்கள் ஆனதால் ஞாபகங்கள் தப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த பயணக் கட்டுரை எழுதுவதற்குள் பல தடங்கல்கள். 3 வாரங்கள் ஆகப் போகிறது. நினைவிற்கு வந்ததை இட்டு நிரப்புகிறேன்.)

இவ்வாறு யோசித்துக் கொண்டே பராக்கு பார்த்துக் கொண்டிருக்கையில் சேலத்தினுள் நுழைந்தது. முதல் ஆளாக அந்த அந்த டீசர்ட்-ஜீன்ஸ் இளைஞன் இறங்கினான். ஒரு ஆளைப் பார்த்து கணிக்கும் முயற்சியில் அடுத்த தோல்வி. சிறிது நேரம் உண்டு என நடத்துனர் சொன்னதும் கழிப்பறையை தேடத் தொடங்கினேன். பேருந்து புறப்பட்டு விடுமோ என வேகமாக சென்றேன். நுழைய 3 ரூபா கேட்டான். பிஸ்ஸுக்கு இது ரொம்ப அதிகம் தான் என நினைத்துக் கொண்டே கொடுத்து விட்டு போய் வெளியேறும் போது ஒருத்தன் தலைய சொறிந்தான். வெளியே கொடுத்தாகிவிட்டது என்றதற்கு தான் கழுவுபவன் எனக் கூறினான்.  அந்த புண்ணியவானுக்கு ஒரு இரண்டு ரூபாய் அழுதுவிட்டு வந்தேன். இத்தனைக்கும் நடுவில் வந்த விஷயம் ஆகவில்லை என்பது தான் வயிற்றெரிச்சல். வருது ஆன வரலைன்னு போக்கு காட்டிவிட்டு 5 ரூபா நட்டம் தான் மிச்சம். பெங்களூரில் என்னவெல்லாம் வேட்டு வைக்க இருக்கோ. பெங்களூர் செல்லும்வரை தண்ணீர் குடிக்கக் கூடாதென முடிவெடுத்துக் கொண்டேன்.

அடுத்து தர்மபுரியில் ஒருவன் கையில் ஜீன்ஸ் ஜாக்கெட்டுடன் நின்றிருந்தான். இவன் ஏறுவான் என நினைத்தேன். ஓசூரில் மாலை நேரக் குளிருக்கு அது உதவும் என்றெல்லாம் கணக்கு போட அவன் வாளாவிருந்தான். ச்சே, வெத்து வேட்டு என நினைத்துக் கொண்டே க்ரீம் பிஸ்கட் சாப்பிடத் தொடங்கினேன். பக்கத்தில் பாக்கெட்டில் இருந்து தூள் போல ஒன்றை கொட்டி கசக்கிக் கொண்டிருந்தான். புகையிலையோ என்னவோ போல, கணேஷ் போன்ற பிராண்டுகள்(Brands) சொல்வார்களே, அது தான். கான்சரை கையில் கசக்கி வாயில் வைத்துக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்ததும் என் உதட்டில் ஊட்டச் சத்துக் குறைபாட்டினால் வந்த குழிப் புண்ணை பார்த்து ’கஞ்சா அடிப்பயா’ எனக் கொடைக்கானலில் கேட்டவன் நினைவிற்கு வந்தான்.

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து வெளிவரும் இடத்தருகில் ஒரு பிச்சைக்காரன் ஒரு சிறுவனைக் கிடத்தி சாட்டையால் தரையை அடித்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். வருகிறவர்களை கபடி வீரனின் லாவகத்துடன் மடக்கி பிச்சை எடுத்தான். இவனின் வேகத்தைக் கண்டு ரக்பி விளையாட்டைப் போல முட்டித் தூக்கிவிடுவானோ என்று பிச்சை போட்டவர் ஏராளம். இப்படி ஒருத்தனை மடக்கிய பொழுது விரலை ஆட்டி மிரட்டியபடியே ஒருவன் சென்றான். இன்னொருவன் ட்ராஃபிக் போலீசைப் பார்த்த லாவகத்துடன் சுத்தி விலகிச் சென்றான். இத்தனைக்கும் நடுவில் வெயில் சுரீரென உரைக்காமல் அந்தச் சிறுவன் எப்படி உறங்குகின்றான் எனத் தெரியவில்லை.

கடைசி சீட்டில் ஒருவனிடம் சீட்டு கொடுக்க நடத்துனர் சென்றார். அவன் ‘டிக்கட் வச்சிருக்கேன்’ எனக் கூற சொல்ல தகராறாகி விட்டது. பின்னர் தான் தெரிந்தது ஐயா ’உண்மை விளம்பி’யை அளவுக்கு அதிகமாக உட்கொண்டிருக்கிறார் என்றும், இதற்கு முன்பு பயணித்த வண்டியில் சீட்டு வாங்கியிருக்கிறார் என்பதும். முடிவில் அவன் தலையில் ’சொத்’தென அடித்து காசைப் பிடுங்கி சீட்டும் சில்லறையும் கொடுத்தார், நடத்துனர்.

ஓசூரை நெருங்க நெருங்க போகும் வழியிலெல்லாம் மிகவும் சுத்தமாகவும் பராமரிக்கப் பட்டதாகவும் இருந்தது. சாலை நடுவெங்கும் அலங்காரத்திற்கு வளர்க்கப்பட்ட செடிகளின் மேற்பரப்பு வெட்டப்பட்டு சாப்பிடும் மேசை போல அழகாக இருந்தது. சாலையோரங்களில் 'Cafe day' தென்பட ஆரம்பித்தது.

ஓசூர் வந்த பொழுது மாலையாகிவிட்டிருந்தது. இறங்கியதும் ஒரு பஸ் பெங்களுருக்கு கிடைத்தது. ஓசூர் தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கிறது. ஒரு கலப்படக் கலாச்சாரத்தை பார்க்க இயலுகிறது. ’மஞ்சநாதா’வில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘அதூர்ஸ்’ ரிலீஸ். பட போஸ்டர்கள் பார்த்த வரையில் ஒன்றிரண்டு தமிழும், மற்ற படி அதிகப்படியாக தெலுங்கு படங்களே ஓடிக்கொண்டிருந்தன. கன்னட படம் மருந்துக்குக் கூட இல்லை. இந்தக் குழப்பம் தீருவதற்குள் கர்நாடக எல்லைக்குள் நுழைந்தது வண்டி.

அங்கே எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மனஹல்லி எல்லாம் தாண்டி மடிவாலாவில் இறங்க வேண்டியிருந்தது.  ஹல்லி என்பது நம் ஊர் பட்டி போன்ற ஒட்டு போல. பொம்மனஹல்லி, பிலஹல்லி, இன்னபிற ஹல்லிகளையும் உள்ளடக்கி இருக்கிறது பெங்களூர். இப்படி இன்னபிற பகுதிகளை கடந்து மடிவாலாவில் பெங்களூர் மண்ணில் கால் வைத்த பொழுது மதுரை மைந்தர்கள் சென்னையில் வழக்கமாக இறங்கும் போது ஏற்படும் அதிர்வு ஏற்படாததால் ஏமாற்றம். இந்த ஊரில் ரவுடிகள் இல்லை போலும்.
 - பயணங்கள் தொடர்ந்தது. இது?
----------------------------------------------------------------------------------------------------------------------
இதை எழுதவே பல வாரமாகிவிட்டது. இதற்கு மேல் பெங்களூரில் நடந்தது, பிறகு சென்னை சென்றது, மீண்டும் பெங்களுரில் நடந்த சந்தோஷத் தருணங்கள் எல்லாம் இதற்கு வரும் கருத்துக்களைப் பொறுத்து எனக் கூறி வரவேற்பு பெற நான் இளைஞர்களுக்கான எழுத்தாளனா இல்லை பிரபல பதிவரா? இருந்தாலும், நீங்க எவ்வளவு வேகமா கருத்துரைகள் இடுகிறீர்களோ அவ்வளவு வேகமாக அடுத்த பதிவை இது போல் வளவளக்காமலும் இதில் உள்ள ஆயிரக்கணக்கான குறைகளை நூற்றுக்கணக்காக குறைத்தும் வெளியிட உறுதியளிக்கிறேன்.