நித்ய’ஆனந்த’ அனுபவம்

Filed under , by Prabhu on 3/28/2010 05:11:00 AM

16

இதை ஒரு ஓட்டத்தில் சொல்லிவிடத்தான் எண்ணினேன். ஆனால் இது பலராலும் தொடப் படாத பகுதி என்பதாலும் இதற்கு தனி பதிவு பெற தகுதி இருப்பதாலும் தனியாக வெளியிடுகிறோம்.

அரிப்பு, சொறிதல் - இரண்டுமே பிரித்துப் பார்க்க முடியாத படி பின்னியிருக்கும் வார்த்தைகள். ஆங்கிலத்திலும் கூட. ஒரு வார்த்தையை பயன்படுத்திவிட்டு அடுத்ததைத் தவிர்க்க இயலாது. ’அவனுக்கு அரித்தது. அவன் சொறிந்து கொண்டான்’ என்ற உதாரணம் உங்களுக்கு இதை எளிமையாக விளக்கும்.

அறிவியல் கூறுவதுபடி அரிப்பும் வலியும் தூரத்து உறவாம். இரண்டுக்குமான உடல் வேதியியல் மாற்றங்கள் பல விதங்களில் ஒற்றுமையுடன் இருக்கிறது. வித்தியாசங்களும் உண்டு. இரண்டுமே தானியங்கிச் செயல்களைத் தூண்டுபவை. ஆனால் நான் பேசவந்தது அறிவியல் அல்லவே.

சொறிவது சுகமான அனுபவம். அதில் சில பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருக்கின்றன. சொறிவது நோயினால் மட்டுமல்ல படபடப்பு, பதட்டம் போன்றவற்றாலும் நிகழுகிறது. நான் சொறிவதை வைத்தே என் அம்மா என் எண்ணங்களைப் படிக்கிறார். சாப்பிடும் போது விழி பிதுங்க சொறிந்தேன் என்றால் சாப்பிட முடியல என புரிந்து கொண்டு அனுப்பிவிடுவார்.  NSS முகாம் சென்ற பொழுது ஒரு பேராசிரியர் சாப்பாடு விஷயத்தில் மிகக் கெடுபிடி. நாலு பருக்கை இருந்தால் கூட கூச்சப்படாமல் ’உள்ளே போய் இருப்பதை வழித்து தின்னுட்டு வா’ என விரட்டி விடுவார். வந்தவர்களோ வீணாக்குவதில் வள்ளலாக இருந்தார்கள். அதனால் குதிரை கொள்ளைத் தின்பது போல தட்டிலிருப்பதை அப்படியே வாயில் திணித்து விட்டுதான் எழுந்திருப்பார்கள். பொங்கலன்றும் அங்கேயே இருக்க நேர பொங்கல் நிறைய செய்து எல்லோர் தட்டிலும் கொட்டிவிட, நான் முக்கால்வாசி தின்னுவதற்குள் முழிபிதுங்க, நெளிந்து, தலையை சொறியும் கண்றாவியை காணச் சகிக்காமல் கொட்ட அனுமதித்தைக் கண்டு முகாமே மூக்கைச் சொறிந்தது.


’ ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. பக்கத்திலிருக்கும் ராணியை நோக்கி ராஜா தன் பார்வையை வீச, ராணி ராஜாவின் பின்னால் வந்து வசமாக சொறிந்து விடுவார். என்ன தான் ராஜாவாக இருந்தாலும் இது கொஞ்சம் அதிகம் என்று என் நண்பர்கள் கூறினார்கள்.ஆனால் அதை கண்கூடாக பார்க்கிறேன். வீடுகளிலேயே நடக்கிறது, மனைவி கணவனுக்கு முதுகு சொறிந்து விடுவது. அதில் ஒரு அசால்ட்டான feudalism தெரிகிறது. அதே சமயம் ஒரு ஆசையும் தெரிகிறது. சுஜாதாவிடம் ஒரு புதிதாக மணமான வாலிபன் ஒருவன் கூறியதாக அவர் எழுதியது : ”கல்யாணம் செய்துகிட்டாலே இம்சைதான். ஆனால் என்னதான் சொன்னாலும் மனைவி முதுகு சொறிந்துவிடும் சுகத்துக்காக கண்டிப்பாக கல்யாணம் செய்துக்கலாம் சார்”. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.

சிலசமயம் சொறியும் போது அது எரிச்சலின் வெளிப்பாடாக இருக்கும்.அப்படியே பிச்சுக்கலாம் போல இருக்கு என்போமே அந்த வகை.  ஆனால் விரைவில் மண்டை குளோபல் வார்மிங்கால் பாதிக்கப்பட்ட பூமி உருண்டையாக ஆகும் வாய்ப்பு அதிகம்.

 இதே போல கோபம், பொறுமை இனமை என எல்லாவற்றிற்கும் ஒரு வகை சொறியும் விதம் இருக்கிறது. சந்தோஷமாக இருந்தாலும் நிதானமாக வயிற்றில் சொறியும் ஒரு பழக்கம் இருக்கிறது - கடற்கரை அருகே காற்று வாங்கும் அனுபவம் போல. இது நிஜமாலுமே சொறிவது போல அல்ல. சாப்பிட்டுவிட்டு மெலிதாக உறக்கம் வரும் நேரம் வயிற்றை மென்மையாகத் தடவிக் கொடுத்தல் போன்ற நித்ய ஆனந்த அனுபவம்.  

போன வருடம் ரிசஷனின் பொழுது ஒருவனை வேலை விட்டு நீக்கிவிட்டார்கள் என்று அவன் விரக்தியில் தற்கொலை முடிவுக்கு வந்தான். பாலத்தின்  சுவர் மேல் நின்று குதிக்க இருக்கையில் கீழே ஆற்றங்கரையில் இரண்டு கைகளுமே இல்லாத ஒருவன் குதித்து குதித்து ஆடிக் கொண்டிருந்தான். அட, இரண்டு கை இல்லாதவனே சந்தோஷமாக இருக்கும் பொழுது நமக்கென்ன குறை வந்தது என்று தற்கொலை முயற்சியை கைவிட்டான். கீழே போய் அவனுக்கு நன்றி தெரிவிக்க சென்றான். இவனது நன்றியை கேட்ட அவன், ’ஆடிக்கொண்டிருக்கேனா? யோவ், நீ வேற கடுப்பேத்தாதே. முதுக்கு அரிக்குது. அதை சொறிய முடியாமல் தவிக்கிறேன். வந்துட்டான்’.மதிய தூக்கம்

Filed under , by Prabhu on 3/15/2010 10:52:00 PM

11

உலகமாய் இலக்கின்றி சுழலும் காற்றாடி
பிரபஞ்சத்தின் தகவல் குப்பைகளை திரையில்
ஹார்மோன் கழிவுடன் தூசு அப்பிய சட்டை
கட்டிலின் காலடியில் மன்றாட
விட்டத்தின் நூல் வலையை காற்றாடி தொட்டிலாட்ட
சூரியன் மேலான கான்கிரீட் கூரையின்  கோபம் என்னிடம்
காமத்துடன் கீழிமையை மேலிமைத் தழுவ முயல
கடலில் தத்தளிப்பவன் கரமாய்,
முழுகி எழும் மூளை,
அறை வாங்கினமா என கன்னம் தடவி எழும் நான்
நாற்காலி முதுகை வளைத்து சோம்பலுடைத்து
வெளியே தள்ள, மீண்டும் முதுகில் வேதாளாமாய் அது

டாப்பு அடிக்கலாம் - 8

Filed under , , by Prabhu on 3/12/2010 01:41:00 PM

10

ரொம்ப நாள் ஆயிடுச்சுல, டாப்பு அடிச்சு. அதனால் இதோ வந்துட்டேன்.

ட்விட்டர் என் நேரத்தை அதிகமாக சாப்பிடுகிறது. பல சமயங்களில் சுவையான விஷயங்களை அளிக்கிறது.நிறைய மனிதர்களின் நட்பையும். இங்கே பேசியத விட @iamkarki, @ikarthik_, @athisha, @nchokkan, @orupakkam, @venkiraja, @antonianbu  என நீளும் லிஸ்டில் பல பேருடன் குலாவ சமயம் கிடைத்தது. இது போக ட்விட்டரிலேயே பல புது நட்புகள் ஓடுகிறது. 140 எழுத்துக்களில் என்னவெல்லாம் செய்யலாம் என்று சொல்லிக் கொடுக்கிறது. எடுத்துக்காட்டு கீழிருக்கும் விஞ்ஞானப் புனைவு.

காலம் அர்த்தமற்ற நாளில் தூவானம் கண்டு ஒதுங்கினான் - கையில் நீர் தெறித்த கொப்பளம். வானத்தில் காப்பி நிற மேகம். #கதை #விபு

கால வெளியின் இழைகளில் பிழைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். அதனூடே செல்லும் காலம் புரியாத புதிதாய் இருக்க விழைகிறேன் #sci-fi உளறல் 

அல்லது கீழிருப்ப்பது போல மொக்கைகளாகக் கூட இருக்கலாம். 

நம் ஊர் பெண்களுக்குத் தான் என்னருமை தெரியவில்லை. அங்கே என்னை பெண்கள் பார்க்கிறார்கள். மூடாத ஜிப் கூட காரணமாக இருக்கலாம்... #சிரிப்பு 

 இப்படியாக பொழுது ஒடுகிறது. யாராவது ட்விட்டரில் சேர விரும்பினால், க்ளிக் 
ட்விட்டரில் பலரின் கெட்ட பழக்கம், celebrity chasing. 'I'm your big fan' பப்பராசித் தலையனுங்களுக்குள்ள நான் வர விரும்பவில்லை

----------------------------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளைக்கு முன்ன ‘கொல்லிமலை சிங்கம்’ என்று சிரஞ்சீவி நடித்த டப்பிங் படமொன்று சிறிது நேரம்  பார்த்தேன், கலைஞரில். ஒரு வகையாக நல்ல ப்ளாட் தான். இந்திய இண்டியான ஜோன்ஸ் போல. கொல்லிமலை சிங்கம் - தி கிரேட் கொல்டி காவியம்... பாருங்கய்யா.. ஆனால் அநியாய மசாலா நெடி. அட, ஹீரோ வில்லனிடம் சிக்கிய பிறகு அவனைக் காரில் கூட்டிச் செல்கிறார்கள். ஒரு இடத்தில் நிறுத்தும் பொழுது ரீமா சென் தண்ணீர் கொடுக்க வர, ஒரு குத்து பாட்டு தொடங்குகிறது. எப்பேற்பட்ட படங்களிலும் வில்லனை சந்திக்கும் முன் அவசரகதியிலும் கவர்ச்சி நடனம் ஆடுவதை அவர்கள் விடவில்லையா? கிராஃபிக்ஸ் சுமார். பட், அடிப்படை கரு எந்த ஆங்கில சாகச படங்களுக்கும் குறை இல்லை. எடுத்தது தான் நம் பழைய தெலுகு இஸ்டெயிலு!

அவரது மகன் நடித்த ‘மகதீரா’ கூட பார்த்தேன். ’மகதீரா’ புறநானூற்று வீரத்தைக் கண் முன் நிறுத்துகிறது... புல்லரிப்பு தான்! 
------------------------------------------------------------------------------------------------------------------

எல்லோரும் நித்யானந்தாவைப் பற்றி பேசுகிறார்கள். எனவே, நான் பேசப் போவதில்லை. Pass!

------------------------------------------------------------------------------------------------------------------
 கல்யாணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வோர் சதவீதம் நகரத்தில் 10ஆகவும், கிராமங்களி 17ஆகவும் இருக்கிறது. இதற்கும் மத்தியில், சிட்டி ரொம்ப மோசம், பீச்சு அப்படி இருக்கு, பார்க் இப்படி இருக்கு என மக்கள் சலித்துக் கொள்கிறார்கள். இப்ப என்ன சொல்கிறீர்கள்? இங்கே நகரத்தில் நாம் social networking site களில் வீணாக்கும் நேரங்களை அவர்கள் வேறு விதமாக செலவு செய்கிறார்கள் போல!
------------------------------------------------------------------------------------------------------------------
லிட்டில் ஜான்
ஜானோட அம்மா மேக்கப் பண்ணிகிட்டிருந்தாங்க. அப்போ ஃபேஸ் பேக் போட்டுக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த ஜான்,


ஜான் - அம்மா என்ன பண்றே?
அம்மா - இருக்கும் அழகை கூட்டுறதுக்காக இந்த க்ரீம் பூசறேன் டா, கண்ணா.

பிறகு முகத்தில் அப்பியதை உரித்து எடுக்கத் தொடங்க.

ஜான் - என்னம்மா, முடியலையா?

------------------------------------------------------------------------------------------------------------------
காதலங்கிறது தலையில் விழுந்த காக்காபீ மாதிரி. வழித்துப் போடுவதும் எடுத்து நக்குவதும் அவரவர் கைகளில் இருக்கிறது.

சில பயணங்கள் - 5

Filed under , , by Prabhu on 3/09/2010 08:05:00 AM

5

சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4


பொங்கலுக்குப் பிறகே இரண்டு முறை பெங்களூர் சென்றுவிட்டேன். சினிமா பற்றி சிறிதாக முதல் பதிவில் பேசியிருந்தேன். சினிமா பற்றி மீண்டும் தொடருவோம். மதுரைக்காரன் - சினிமாப் பைத்தியம் என என் ஊருக்கு பட்டம் கட்ட முயற்சி வேண்டாம். பெங்களூரின் ஆச்சரியம் என்ன வென்றால் கன்னட படம் ரிலீஸாவது தெரியவில்லை. ஆனால் தமிழ் படம் ஜோராக ரிலீஸ் ஆகிறது. நான் பொங்கலுக்கு போன பொழுது ஊர் முழுக்க , ;குட்டி’, ‘கோவா’ பட போஸ்டர்கள் தான். அந்தப் படங்களுக்கும் பொதுவாக ஒட்டப் படும் போஸ்டர்கள் தவிர எங்கள் ஊரில் பல காலங்களுக்கு முன் ஒழிந்த மல்டிகலர் போஸ்டர்களும் ஒட்டுகிறார்கள். இது அஜய் அவன் சோனி செல் பேசியில் பிடித்தது.

இன்னுமா?

கன்னட படங்களைப் பற்றி பேசவில்லை என்றால் எப்படி? கன்னட பட ஹீரோக்கள் கவர்ச்சியாக இல்லை. ‘முங்காரு மலே’ கணேஷ் ஓ.கே என என் அண்ணன் சொல்வான். கன்னட பட போஸ்டர்கள் மிக அரிது. சமீபத்தில் போன பொழுது ‘ஆப்த ரக்‌ஷகா’ ரிலீஸ். விஷ்ணுவர்தன் கடைசியாக நடித்த படம். பாவம், போஸ்ட் புரொடக்‌ஷன் சமயத்தில் இறந்து போனார். ’ஆப்த மித்ரா’(சந்திரமுகி) வின் இரண்டாம் பாகம் எனப்  பரபரப்பாக பேசப்பட்ட படம். பண்பலையில் ‘விஷ்ணு வர்த்தன், விமலா ராமன் போன்றோர் நடித்த ஆப்த ரக்‌ஷகா’, ‘சூப்பர்ஹிட் பாடல்கள் கொண்ட படம் ஆப்த ரக்‌ஷகா’ என ’வாங்கிவிட்டீர்களா’ ரக விளம்பரங்களைப் போல கூவி விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். இன்னும் அந்த விளம்பரங்கள் நம் ஊரோடு ஒப்பிடும் பொழுது பத்தாண்டுகள் பின்னாடி இருந்தன போல் இருந்தது.


’நீ  ஒரு வயசா இருக்கும்போது பெங்களூர் முழுக்க சுத்திப் பார்த்தோம்’ என என் அம்மா சொல்வாங்க. எனக்கு நினைவிலில்லை. நான் விவரம் தெரிந்து நான்கு வருடம் முன் தான் பெங்களூர் சென்றேன். அப்பொழுது என் அண்ணன், அண்ணனின் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றினேன். ஒருவன் காலையில் எழுந்ததும் மணி அடித்து சாமி கும்பிடும் அளவு பக்தி பழம். இன்னொருவன் அப்பொழுதே இரண்டு செல்பேசிகள் வைத்துக் கொண்டு செல்பேசியின் ஸ்பீக்கர் வலிக்கும் வரை பேசுவான்; எந்நேரமும் ‘ஹி.. ஹி..’ என ஃபோனில் ஒரு சிரிப்பு; எப்படி பாஸ் இவ்வளவு நேரம் கடலை போடுறீங்க?

அவர்களுடன் BTM Layout  செல்லும் வழியில் ஏதோ தியேட்டரில் ஷகீலா படம் ஓடியது. அதில் ஆச்சரியம் என்னவென்கிறீர்களா. அந்த பக்திப் பழம் சொன்ன தகவல் தான் ஆச்சரியம். அந்த ஷகீலா படம் நூறு நாள் ஓடி குத்து விளக்கு ஏற்றிக் கொண்டாடியிருக்கின்றனர் பெங்களூர் தியேட்டர் பெருமக்கள். கேரளாவிற்கு பிறகு இந்தியாவிலேயே அதிக அளவிலான கவர்ச்சி படங்கள் வெளியாகும் மாநிலம் கர்நாடகாதானாம். ரொம்ப starvation போல. அதே போல நான் முதலில் பெங்களூரு சென்ற பொழுது ஊர் முழுக்க ஒரே நமீதா காய்ச்சல். நமீதா அப்போ தான் கன்னட எண்ட்ரி. ஹீரோ ஏதோ டி.ஆர்., மாதிரியான நடிப்பு மற்றும் இயக்கம் கேஸ் போல. கன்னட சினிமான்னு சொல்லிட்டு எனக்கு பிடிச்ச நடிகை ‘திவ்யா ஸ்பந்தனா’ என சொல்லாமல் போனா என் மனது சாந்தி அடையாது.

என் பெங்களூர் சினிமா அனுபவம் PVR cinemas பற்றி சொல்லாமல் முழுமை அடையாது. நான் 'Pirates of the Carribean Sea - At the world's end' அங்குதான் பார்த்தேன். படம் முழுக்க புயல் மழையென இருக்க, ஏதோ தியேட்டரில் என் பிடறிக்குப் பின்னால் நீர் விழுவது போலாக ஒலி அமைப்பு மிரட்டலாக இருந்தது தியேட்டரில். இந்திய அளவிலான இந்த திரையரங்கு சங்கிலி பெங்களூரில் Forumன் மூணாவது மாடியில் உள்ளது. அந்த மூணாவது மாடியிலேயே 11 ஸ்கிரீன் வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் போன பொழுது அமிதாப் நடித்த 'Rann’ பார்த்தேன். வழக்கமான ஒரு நல்ல RGV படம். அந்தத் தியேட்டரில் மொக்க படம் பார்த்தால் கூட சுவாரஸ்யமாக இருக்கும் போலத் தோணியது. இதே தியேட்டருகில் காலேஜ் முயற்சி செய்து, ஆனால் அதே காலேஜின் வேறு கேம்பஸ் கிடைத்த சோகம் எனக்கு. ம்ஹூம்.

கன்னடத்தில் பெங்களூர் என்று வைத்து விட்டார்கள். நியாயமாக தமிழில் ’பெண்களூர்’ என்று வைத்திருக்க வேண்டும். கொடைக்கானலுக்கு பிறகு இயற்கையை வியந்த இடம் பெங்களூர் தான்.

இப்படியாக இந்தப் பயணத் தொடர் நிறைவடைகிறது. சுபம்!

சில பயணங்கள் - 4

Filed under , by Prabhu on 3/06/2010 09:37:00 AM

8

சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4
சில பயணங்கள் - 5
Forumல் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை முக்கியமானவை இரண்டு விஷயங்கள்தான் : உணவு, பெண்கள். இரண்டிற்குமான ஒற்றுமையை நான் சொன்னால் ஆபாசமாகிவிடுமென்பதால் விட்டுவிடுவோம். அங்கே எல்லோரும் மிகச் சுதந்திரமாக இருக்கிறார்கள். பொதுவாகவே சாலையில் பெண்கள் ஆண்கள் கைகளைப் பிடித்து செல்வது சகஜமாகவே இருக்கிறது. அங்கே ஷோகேசில் ஒரு பொம்மை இருந்தது. ஆனால் குட்டையாக, கொஞ்ச அதிகமான சதைப்பிடிப்புடன் யாரு ஷோகேஸ் பொம்மை செய்கிறார் என யோசிக்கும் நேரத்தில்தான் தெரிந்தது அது ஒரு வெள்ளைக்கார பெண்மணி என்று. ஏன் இப்படி கண்ணாடிகிட்ட நின்று குழப்புகிறாள்? இந்த ஊருக்கு எந்த எந்த ஊரில் இருந்தெல்லாம் வருகிறார்களென இங்கு தெரிகிறது. வடகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பது போல தெரிகிறது. அல்லது அவர்களுடைய ‘சங்கி மங்கி’ தன மூஞ்சி காட்டிக் கொடுக்கிறதோ என்னவோ.
மெக் டொனால்ட் - சீச்சீ புளிக்கும்...
PVR Cinemasன் 11 திரையரங்குகள் மூன்றாவது மாடியில் இருக்கிறன. அவற்றைப் பற்றி வேறு ஒரு பதிவில் எழுதி வைத்திருக்கிறேன். பிறகு வெளியிடுகிறேன். MCDonald burger(பாலாவின்Food Inc., பதிவு படித்திருந்தால் இது நடந்திருக்காது) உடன் கிளம்பும் நேரத்தில் Landmark நினைவிற்கு வந்தது. அங்கே சென்று புத்தகங்கள் இருக்கும் பகுதியில் ஒரு ஒரு மணிநேரம் செலவானது. ராமானுஜன் என்று ஒருத்தரைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால், தேடின பொழுது கைக்காசு இடித்ததால், தாகூர் ‘கீதாஞ்சலி’யில் அப்படி என்ன எழுதியிருக்கிறார் எனப் பார்க்க வாங்கினேன். ஆனாலும் ராமானுஜன் புத்தகத்தை அங்கேயே உட்கார்ந்து சிறிது தேய்த்துவிட்டுதான் வந்தேன். Sachin Garg என ஒருவர் எழுதிய ‘A sunny shady life' எடுத்தேன். சேத்தனின் FPS ரகத்தில் எழுதியிருப்பார் போல. படித்துவிட்டு சொல்கிறேன். 

K.R.Marketஅருகே ஒரு மசூதி
K.R.Market என்று ஒரு ஏரியா பெங்களூரில் இருக்கிறது. கோரமங்களாவில் இருந்து 340 வரிசையில் பல பஸ்கள் Forum வழியாக மார்க்கெட் செல்கிறது. மார்க்கெட் பகுதியை பார்க்கும் பொழுது இதுதான் பழைய பெங்களூரோ எனத் தோன்றுகிறது. அந்த வீதிகளைக் காணும் பொழுது இப்பொழுது பெங்களூரில் இருக்கும் அந்த வெளிநாட்டுத்தனம் சிறிதும் இல்லாத ஒரு சாதாரண இந்தியக் கடைத்தெரு போன்று இருக்கிறது. எனக்கு அந்தக் கடைத்தெருவைப் பார்த்ததும் மதுரை டவுன்ஹால் ரோடு போன்று இருந்தது. பல வருடங்கள் வெளிநாட்டில் இருந்து மதுரையை சிறிதே மறந்துவிட்டவனைக் கொண்டு வந்து நிறுத்தி டவுன்ஹால் ரோடு என்று சொன்னால் சிறிது நேரத்திற்கு நம்பியே விடுவான் போலிருந்தது எனக்கு. உள்ளே நடக்கும் பொழுது என் சொந்த ஊரில் நடப்பது போல உரிமையுடன் நடந்தேன். அங்கே இலியாஹூ.எம்.கோல்ட்ராட் எழுதிய, ' The Goal’ என்ற மேலாண்மை கோட்பாடுகள் கலந்த நாவல் வாங்கினேன்.  இது சில காலம் முன்பு ஆனந்த விகடனில் தமிழாக்கப்பெற்று தொடராக வெளிவந்தது. இதை வாங்கிய சில நாட்களில் படித்தாகிவிட்டது. இன்னும் சில விஷயங்கள் விளங்கவில்லை. மற்றபடி சுவாரஸ்யமான நாவல். தமிழாக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவிட்டார்கள். அதற்கு மேல் இருப்பவைகளைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்கு தாவு தீர்ந்துவிடும் என்பதால் கூட இருக்கலாம்.  ஆங், சொல்ல மறந்துவிட்டேன், இந்த மார்க்கெட் அருகே பெங்களூர் கோட்டை என்று ஒன்று இருந்தது. அது திப்பு சுல்தான் கோட்டை என்று சொன்னாலும், ஆரம்பத்தில் அது கெம்ப கவுடா என்னும் விஜயநகர பிரதிநிதியால் கட்டப்பெற்றது என்பதும் பின்னால் பிரிட்டிஷார் வயிற்றுக்குள் போகும் முன் வரை ஹைதர் அலி-திப்புவின் கைகளில் இருந்தது என்பதும் விக்கிபீடியாவின் வாக்கு. அந்த கெம்ப கவுடா பெயரில் பெங்களூரில் ஒரு பகுதி கூட இருக்கிறது.Qutub Minar
மேலே இருக்கும் இரண்டு படங்களும் லால் பாக்கில் எடுத்தது. நல்ல பெரிய பார்க் அது. எக்கசக்க மரங்கள். எங்கள் ஊரில் ஒத்த மரம் நிற்க வக்கில்லை. நகரத்திற்குள் இவ்வளவு பெரிய பார்க் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, தமிழகத்தில்.

 எல்லா வேலைகளும் முடித்துக் கிளம்பும் போது எண்ண ஓட்டங்கள் வேறு விதமாக இருந்தது. Introspection. வெளியூர் பயணங்கள் அதை உண்டாக்க வல்லது. பிற ஊர்களில் பயணம் செய்கையில் வெவ்வேறு மக்களைப் பார்க்கையில் எண்ண ஓட்டங்கள் சீராக ஓடுகின்றன; நம்மை சுய மதிப்பீடு செய்கின்றன. எனக்கு, இது எண்ண ஓட்டங்களுக்கான பயிற்சி என்பது போன்ற உணர்வு. இப்படி சென்ற எண்ண ஓட்டங்கள் என் பிரச்சனைகளை அலச உதவியாய் இருந்தது.

இன்னும் ஒரு பதிவு மிச்சம் இருக்கிறது. அதை இரண்டொரு நாட்களில் வெளியிட்டுவிடுகிறேன். சென்னை போனதையும் சேர்த்து எழுதுவதற்குத் தான் சில பயணங்கள் என்று தலைப்பிட்டேன். ஆனால் இதற்கே ரொம்ப நாட்கள் எடுத்துக் கொண்டதால் நிறைய தகவல்கள் மறந்து விட்டன. சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

அண்ணா ‘சாலை’ என்று சொல்கிறார்கள். ஆனால் அது, கோச்சடையில் ஆரம்பித்து விரகனூர் சுற்றுச்சாலையை தாண்டும் போலிருக்கிறது.(இவ்வளவு தான் மதுரையின் குறுக்களவு அளவு என்பதனை கொள்க!).  சென்னையில் இரவு நேரத்தில் பேருந்தில் ஏறினால் ஒரு தீர்த்தம் உண்டவரையாவது  (மோந்து) பார்க்காமல் இறங்க மாட்டீர்கள். இந்த இரவு நேரம் என்பது ஏழு மணியிலேயே தொடங்கிவிடுகிறது. நல்ல ஊருய்யா. என்ன தான் இருந்தாலும், நம்ம ஊரோட பிரதிநிதியா நம்மை நினைத்துக் கொண்டு அடுத்த ஊரை கிழிப்பதில் உள்ள சுகமே தனி.

சில பயணங்கள் - 3

Filed under , by Prabhu on 3/03/2010 01:08:00 PM

8

சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4
சில பயணங்கள் - 5

171 பேருந்தே மெஜஸ்டியில் இருந்து கோரமங்களா வரும் வழியில் Dairy Circleல் நிற்கும் என தெரிந்ததால் மெஜஸ்டி சென்று 171 பிடித்து செல்லும் வழியில் பேச்சு என் நண்பனின் பிரதாபங்களைப் பற்றி ஆரம்பித்தது. அவனைப் பற்றி முதலில் சொல்லி விடுகிறேன். மதுரையிலிருந்து பெங்களூர் சென்று மேலாண்மை படிக்கும் மாணவன். சௌராஷ்டிரன். சௌராஷ்ட்ரா என்பது மதுரையில் மிகுந்து இருக்கும் மொழி சார்ந்த பிரிவு என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். இவர்களைப் பற்றி பின்னாளில் விஸ்தாரமாக பேசுவோம். எப்படி நான் அண்ணன் இருக்கும் தைரியத்தில் செல்கிறேனோ, அதே போல் அக்கா, பவா(சௌராஷ்டாவில் அக்கா கணவர்) இருக்கும் தைரியத்தில் சென்றவன் அவன். எங்கள் ‘கேங்’கில் சின்ன பையன் இவன் என நினைத்தோம். ஆனால் நாங்கள் தான் சின்ன பையன்களாக இருக்கிறோம். அவனுக்கு சென்னை, பெங்களூர் என மாநிலத்துக்கு ஒரு நண்பி உண்டு. மதுரையில் சந்தித்த பெண் சென்னைக்குப் படிக்கப் போக, இவன் பெங்களூர் சென்றால், அங்கே வகுப்பில் படிக்கும் இரண்டாம் தலைமுறை பெங்களூர்வாசியான ஒரு பெண் என வாழ்கிறான். அடுத்த அக்காவை ஹைதராபாத்தில் கட்டிக் கொடுக்கிறார்களாம். ஒன்று ரிசர்வ் செய்யப்பட்டது. இந்த மாதிரி ஆசாமிகளுடன் பேசுவதில் கடுப்பு என்னவென்றால், ‘அவ இப்படி சொல்றா? ஏண்டா இப்படி?’ , ‘மாப்ள படத்துக்கு போலாம்னு சொல்றா. என்ன செய்யலாம்?’, என்பது போன்ற வயிற்றெரிச்சலைக் குழல் வைத்து ஊதும் கடமையை செவ்வனே செய்கிறார்கள். இவர்களுக்கு தேவை விடையல்ல. என்ன சொன்னாலும் அப்படியல்ல, இப்படியல்ல என ’மன்மதன்’ சத்யன் போல நம்மை வெறுப்பேற்றுவார்கள். நான் என்னவென்றே புரியாத ஒரு பார்வையை குடுத்துவிட்டு பேச்சை திசை திருப்பிவிடுவேன். அது நமக்கும் நம் நட்புக்கும் நலம்.

Dairy circleல் ஒரு ’நந்தினி’ விற்பனை நிலையம் இருந்தது. நந்தினி என்பது ‘ஆவின்’ போல கர்நாடகா அரசின் பால் கொள்முதல்-விற்பனை நிறுவனம். அந்த நிலையத்தின் பின்னாலேயே நந்தினி பால் பதப்படுத்தும் தொழிற்சாலையும் இருந்தது. Dairy Circle பெயரே அதனால் தான் வந்திருக்க வேண்டும். நந்தினியில் ஒரு புட்டி பால் வாங்கிக் குடித்து விட்டுத்தான் மறுவேலை என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். நந்தினியைப் பற்றி பேசும் போது ஆவினைப் பற்றி பேசாமல் விட முடியவில்லை. இரண்டுமே மாட்டின் பெயரினைக் கொண்டு அமைந்தவை. ‘ஆவின்’ என்ற பெயரின் அழகை சில ஆண்டுகளுக்கு முன் தான் அறிந்து கொண்டேன். பல நாளாக அதன் பெயரைப் பற்றி யோசிக்காத என் மூளையுள் தற்செயலாக பொறி தட்ட, யோசித்தால் ஆ என்றால் பசு என்று அர்த்தம். எனவே பசுவின் பால் என்பதுதான் ஆவின் பால் என அப்பொழுதுதான் தோன்றியது. ஆவின் பால், நெய், மைசூர்பா என அனைத்திற்கும் நல்ல பெயர் இருக்க, இன்னும் நட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது ஆவின். உள்ளே ஊழல் அதிகம் என்று கேள்வி. இப்படி நல்ல விஷயங்கள் இருக்கும் அரசாங்க நிறுவனங்களையும் வீணடிக்கிறார்கள்.

இது வேற நந்தினி

விசாரித்து பல்கலைக்கழகத்தைக் கண்டுபிடித்து சென்றேன். உள்ளே பல்வேறு மாநிலத்திலிருந்தும் ஒரு சில வெளிநாடுகளிலிருந்தும் வந்து இருக்கும் பலரைக் காண இயன்றது.  அந்தத் தடவையும் அதன் பிறகு தற்பொழுது இருமுறையும் பெங்களூர் சென்ற பொழுதெல்லாம் ஒவ்வொரு முகத்தையும் காணும் பொழுது மூளை இவள் எந்த மாநிலமாக இருப்பாள், இவன் தமிழனோ என தொடர்ந்து கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறது. மூளைக்கு அயற்சியைக் குடுத்தாலும் பிடிவாதமாகத் தொடர்வதால் எண்ணங்களைத் துண்டிக்கும் முயற்சியில் அவனுடன் பேச ஆரம்பித்தேன். அங்கிருக்கும் ஒருவனைத் தோராயமாகப் ஒரு ஒரியாக்காரனைப் பிடித்து கொஞ்ச நேரம் பேசினோம். எனது பேரைக் கேட்டவன் ’typically tamilian’ என பஞ்சாபியிடம் சொன்னான். சிரித்தாலும் இன்னமும் மூளையில் ஒரு குழப்பமும் வெறுப்பும் இருக்கிறது. கலிங்க நாட்டவனுக்கு இவ்வளவு கொழுப்பா? அமைச்சரே...) அதென்ன 'typically'? (பேரைக் கேட்டாலே ஊகித்துவிடலாம் என்பதுதானா இல்லை எதுவும் இளக்காரமாக சொன்னானா?

பிறகு Forum போக பாஸ் இருக்கும் தினவில் பஸ் ஏறி செல்கையில் நடத்துனரிடம் கேட்டால் போகாது என்றார். பக்கத்திலிருந்தவரின் கன்னடத்தை அறைகுறையாக புரிந்து கொண்டு கார்பரேஷன் நிறுத்தத்தில் இறங்கி விசாரித்து செல்லும் முன் ஒரு பானி பூரி சாப்பிட்டோம். நான் பெங்களூரில் சாப்பிட்ட பானி பூரிகளிலே சிறந்தவை கார்பரேஷன் அருகில் சாப்பிட்டவைதான். அங்கே மிளகாய் பொடியெல்லாம் போட்டுக் கொடுக்கிறார்கள். எட்டு பூரி கொடுக்கிறார்கள் (பல இடங்களில் 6 தான்). முடிந்தபின் பானி இன்றி கிழங்கு, சாட் பொடி மட்டும் போட்டு ஒரு பூரி கொடுக்கிறார்கள். சாப்பிட்ட பின் வெத்தலை போடுவது போல விந்தையான பழக்கமாக பட்டது.

Forum பற்றி அடுத்த பதிவில் பேசுவோம். மிகவும் சிறிய பகுதிகளாகப் போடுகிறேனோ? என்ன செய்வது, பதிவர்கள் பெரியவைகளைப் படிக்க மூக்கால் அழுகிறார்கள். ஒரு 16 பக்க கதை இன்னும் என் பதிவில் சீண்டுவாரில்லாமல் இருக்கிறது. சுவாரஸ்யமா கொண்டு போறேனா என்பது தான் கேள்வி . போகுதா இல்லை அடுத்த பதிவை பெரிதாக எழுதி முடிச்சிடவா?

நிலவு கரையும் முன்...

Filed under , , by Prabhu on 3/01/2010 10:55:00 AM

14

பூமியின் நிழலில் நிலா ஒளிந்த
அந்த வேளையின் இருளில்
தொலைத்த உன்னை,
ஒவ்வொரு தேய்பிறையிலும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
மெல்ல கரைந்து இருளில் கலக்கும் முன்
மங்கிய ஒளியில் உன் கை பிடித்து
சூரியன் உறையும் உலகை நோக்கி செல்வேன்.


கொஞ்சம் அறிவியல் பிண்ணனி - இது சந்திர கிரகணம் வைத்து எழுதியது. பூமியின் நிழலுக்குள் முழுதாக எப்போதாவது வரும் வேளையில் மட்டுமே முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. உபயம் - விக்கி