ஹாரி பாட்டரும் மாயாபஜாரும்
Filed under Harry Potter , Parody , நகைசுவை , by Prabhu on 12/06/2009 12:33:00 AM
24

ஒரு தடவ சென்னை வந்திருந்தாங்க J.KRowling. அப்போ அவங்களுக்கு ஒரு கதை எழுதுற ஐடியா வந்திருந்ததே தவிர பேரு கூட முடிவு செய்யல. பொழுது போகாமல் ஹோட்டல் டிவி ரிமோட்டுக்கு உடல் நோவோ என்னவோ அந்த அமுக்கு அமுக்கி விட்டு கொண்டியிருந்தார். அந்த யோசனையுடன் சும்மா சானல் விட்டு சானல் ரிமோட் குரங்கு தாவும் பொழுது ஒரு காட்சி கவர்ந்துவிட்டது அவரை. அதன் கிராஃபிக்ஸால் பிரமித்து போன அவர் அதைத் தழுவி ஒரு கதை எழுதுனாங்க. அதில் அந்தப் படத்தில் இருந்து ஒரு சில காட்சிகளை சுட்டு வச்சுகிட்டாங்க. கண்ணாடி ஒன்று Harry Potter ல் 'The Mirror of Erised' (desire பின்னாலிருந்து erised) என்று ஒரு முக்கியமான, சுவாரஸ்யமான விஷயமாக கதையில் (முதல் பாகம்) காட்டப்பட்டிருக்கும். நாம் ஆசைபட்டதைக் காட்டும். இந்த கண்ணாடியை 60 வருடங்களுக்கு முன்னால் நம்ம ஊரு படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
‘மாயா பஜார்’ என்ற படமொன்று 1957ல் கருப்பு வெள்ளையில் வந்தது. தெலுங்கர்கள் எடுத்த இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப் பட்டு அடுத்த மாதம் தமிழ் நாட்டில் வெளிவந்து சக்கை போடு போட்டது வரலாறு. அதுவே ஆங்கிலத்தில் ‘ஹாரி பாட்டராக’ உரு பெற்றிருக்கிறது. அந்தப் படத்தில் இந்த கண்ணாடி போன்ற ஒரு விஷயத்தை பயன்படுத்தியிருப்பார்கள்.
அப்புறம் அந்த கடோத்கஜன் சாப்பிடும் காட்சியெல்லாம் நாம் மறக்க கூடிய விஷயமா? எல்லாம் அந்த காலத்திலே அதிகப்படியான கிராஃபிக்ஸ் காட்சிகள், State of the art என்று சொல்வார்களே, அது போல. அந்த கண்ணாடி மேடர சுட்டது போதாதுன்னு ரங்காராவ் ‘கல்யாண சமையல் சாதம்’ சாப்பிடும் முறைய காப்பி அடிச்சு அவங்க மொழிக்கு மாற்றும் போது அடையாளம் தெரியாமல் இருக்க லத்தின் மொழியில் 'Wingardium Leviosa', 'Liberocorpus' எனக் கூறி பொருட்களைப் பறக்கவிட்ட போது லவட்டினது நம்ம கோவணத்த தான் என்பது கூட தெரியாமல் வாயில் ஈ முட்டை போட இடம் கொடுத்து உட்கார்ந்துகிட்டு கை தட்டிகிட்டு இருக்கோம்.
(தெலுங்குப் பதிப்பே கிடைத்தது. தமிழில் கிடைக்கவில்லை. கிடைத்தால் சொல்லுங்க. எனக்கு பிடித்த பாட்டு. ஃபுல் மீல்ஸ் எஃபக்ட்.)
நம்ம கதையில் கிருஷ்ணர்தான் எல்லாமே தெரிந்தவர். என்னவெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுகிட்டு அதற்கேற்றாற் போல மற்றவர்களை இயங்க வைப்பார். ஒரு சில சமயங்களில் ஏன் இப்படி பண்றாருன்னு கூட இருக்கவங்களே வெறுத்தாலும் நம்பிக்கைக்குரியவர். கிருஷ்ணருக்கு இன்னொரு பேரு தாமோதர்னு தெரிஞ்சா ’Albus Dumbledore’ பத்தி உங்களுக்கு விளக்கத் தேவையில்லை.
கம்ஸன் பொதுவா நல்லவன்தான். ஆனால் தங்கையோட மகனால சாவு என அசரீரியால் தெரிந்த பிறகு அதை தடுக்கிற முயற்சியில் கெட்டவனாகிப் போய் அவர் கையால் சாகிறான். மூடிகிட்டு அவன் பாட்டுக்கு இருந்திருந்தா எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. அரைகுறையாக கேட்ட தீர்க்கதரிசனத்த வச்சு தனக்கு சாவு ஹாரி கையால எனக் குருட்டுத்தனமாக முடிவு செஞ்சு செத்தத படிச்சவங்க மறந்திருக்க முடியாது. இப்படியெல்லாம் இங்கிருந்து கொண்டு போன சரக்கை மறைக்க அவங்க கலாச்சாரத்த கொண்டு மழுங்கடிச்சது மட்டுமில்லாமல் இந்திய கதாபாத்திரங்கள் இரண்டை கேவலமாகப் படைத்திருக்கிறார்.
இதற்கு மேலும் என்னால் பல விஷயங்கள் கூற இயலும். ஆனால் அதையெல்லாம் தக்க ஆதாரங்களுடன் விரைவில் சுப்பிரமணிய சுவாமியை சந்திக்க உள்ளேன்.
பின்குறிப்பு - அடுத்து நமது குழந்தைகள் படமான ‘கந்தசாமி’யை உல்டா செய்து அவர்கள் ஊர் குழந்தைகளுக்கு ஏற்றாற் போல வெளியிட்டு நம்மையும் ஏமாற்றிட உள்ளதாக நாம் அறிகிறோம். இது போன்ற காரியங்களை இதற்கு மேலும் நடக்காமல் தடுக்க தாக்கரே, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., ராமதாஸ் போன்ற நம் கலாச்சாரத்தை கழிவறையில் சுருட்டி வைத்து காப்பாற்றும் (பயன்படுத்தும்) காவலர்களை அழைக்கிறேன். இது மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அறைகூவல்!

