உண்மை நண்பன்

Filed under , by Prabhu on 6/16/2009 08:35:00 AM

1

"உண்மை நண்பன்? உண்மை நண்பன்னா சொல்ற? உண்மை நண்பன்னா என்னன்னு நினைக்கிற? உன் மேல பாசத்த கொட்டுறவன்தான் நண்பன்னா, அப்ப அம்மா யாரு? உனக்கு நல்ல புத்தி சொல்றவந்தான் நண்பன்னா, அப்பா யாரு? நீ கஷ்டப்படறப்போ உனக்கு தோள் குடுத்து ஆதரவு சொல்றவந்தான் நண்பன்னா, அப்ப மனைவிய என்னன்னு சொல்றது? இதெல்லாம் நட்புன்னு நினைச்சுட்டிருக்கயா?..ச்சு...ச்சு... இல்ல, இது இல்ல. உண்மையான நட்பு என்ன தெரியுமா? நீ செய்யறது ஒத்துவராதுன்னு தெரிஞ்ச பிறகும் உன்னை இப்படி போகவிட்டேனா பின்னாடி வருத்தப்படுவ." எனக் கூறிய அஜய், சிறிது இடைவெளிவிட்டு, "என்ன நான் சொல்றது புரியுதா?", என்றான். எதிரே அமர்ந்திருந்த வெங்கடேஷ் கண்ணாடிக்கு பின்னிருந்த விழிகளைக் கண்டபோது அவன் தன்னோட பேச்சை ஏத்துக்கிட்டது மாதிரி அஜய்க்கு தோணுச்சு. அவனும் யோசனையுடன் மெல்ல தனது தலையை அசைத்தபோது என்னவோ பிசைவது போல இருந்தது.


அஜய் அவனைப் பார்த்த பார்வையில் ஒரு கழிவிரக்கம் இருந்தது. அவனுக்கும் வெங்கடேஷுக்குமான உறவு என்றுமே இப்படிதான். முடிவெடுக்கும் நிலையில் அவன் தான் இருக்கிறான். அவனுக்கு சில சமயம் குற்ற உணர்ச்சி தோன்றினாலும், அது நிலைப்பதில்லை.

இவர்கள் இருவரும் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாகவே படித்தார்கள். எப்பவும் ஒன்றாகவே இருப்பார்கள். எப்பொழுதும் வகுப்பில் வெங்கடேஷ் படிப்பில் முதல் இடத்திலும் அஜய் இரண்டாவது இடத்திலுமாக இருப்பார்கள். ஆனால் இருவர்களில் அஜய் தான் எல்லாருக்கும் பிடித்தவன். அவன் எப்பொழுதும் சிரித்த முகமாக எல்லோரோடும் பேசிக்கிட்டு இருப்பான். கொஞ்சம் அறிவும், கொஞ்சம் அழகும் இருந்தால் வெற்றி நமக்கு இவ்வுலகில் உறுதி செய்யப்பட்டு விடுகிறது. அவனது விஷயத்தில் முதலாவதை வளர்த்துக்கொண்டான், இரண்டாவதை இயற்கை கவனித்துக் கொண்டது.

ஆனால் வெங்கடேஷின் நிலையோ நேரெதிரானது. அவன் ஒரு அதிக பவர் கண்ணாடியுடன், எந்த வித உணர்ச்சியும் வெளிப்படுத்தாத முகத்துடனும் வகுப்பில் அமைதியாக உட்கார்ந்திருக்கும்போது யாரும் அவனை பெரிதாக பொருட்படுத்தாதது பெரிய விஷயமில்லயே. அதுவும் இவன் நட்புருவாக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில் இது ஆச்சரியப் படவேண்டிய விஷயமாக தோன்றுவதில்லை. ஆனாலும் இவனிடம் அஜய் நட்பாக இருப்பதன் காரணம் யாருக்கும் விளங்குவதில்லை. கேட்டால், "அவனுக்கு என்ன விட்டா யாரு இருக்கா?", எனக் கூறுவான்.

அஜய் பாடத்தில் எல்லா உதவியும் வெங்கியிடமிருந்தே பெற்றுக்கொள்வான். கணக்கிலிருந்து எல்லாமே இவனிடமிருந்தே கற்றுக்கொள்வது யாருக்கும் தெரியாது. வெங்கி செய்த வேலையையே செய்யும் அஜய் பாராட்டைப் பெற்றுக்கொள்வான். இதே மாதிரி 'Young scientist Research Program"ல் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்து, வெங்கி பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது. வெங்கிக்கும், இன்னொருத்தனுக்கும் கிடைத்தது, அந்த வாய்ப்பு. அப்பொழுது அஜய், "இப்போ எதுக்குடா இதுக்கெல்லாம் போற? போர்ட் எக்ஸாம் வருதுடா. அத விட்டுட்டு இதுக்கு போய் என்ன செய்யப்போற?" எனக் கேட்டான். "பின்னாடி யூஸ் ஆகும்ல, இந்த ரிசர்ச் சர்டிபிகேட் எல்லாம்" எனக் கேட்ட வெங்கியிடம் "அது ஒண்ணுக்கும் தேறாதுடா. 10thமார்கில்லாம அதெல்லாம் வேஸ்ட்." என்றான். வெங்கி, தான் வரவில்லை என ஆசிரியரிடம் கூறிவிட்டான்.

அதன் பிறகு சிறிது நாள் கழித்து, தொடர்ந்து சில நாள் அஜயை காணாமல் தேடிக்கொண்டிருந்தவனிடம், அவன் YSRPக்கு போயிருப்பதாக ஒருவன் சொன்னபோது ரொம்ப வருத்தப்பட்டான். அஜய் வந்ததும், "வெங்கி, நீ போகமாட்டேன்னு சொன்னதும் அடுத்த மார்க் வாங்கின நான் தான் போகனும்னு சொல்டாங்கடா. மறுத்து பேசமுடியாதபடி கண்டிப்பா சொல்லிட்டாங்க" என சொன்னான். ஆறுதலடைந்த அவன், "சரி, விடுடா."என்றான்.

அடுத்து இதே மாதிரி இவர்கள் ஒன்றாக இயற்பியல் Ph.D வரை முடித்தனர். அதிலும் வெங்கி தன்னுடைய வாய்ப்பை இழத்தலும், இவனுக்கு அது எதிர்பாராமல் கிடைத்தலும் தொடர்ந்தது. அவனோட ப்ராஜக்டும் கடைசியில் இவனுக்கு வந்தது. அவன் உதவியிடன் முடித்த இவனுக்கு உடனே IISc.,யில் சயிண்டிஸ்டாக வேலை கிடைத்தது. பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான வெங்கியிடம், அவ்வப்போது ஆலோசனை கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தான். அவனிடம் சில புதிய ஐடியாக்களை வாங்கி அதைக் கொண்டு புது ஆராய்ச்சிகள் செய்த அவன் மிகுந்த புகழை அடைந்தான். இந்தியாவில் நடிகைகள், கிரிக்கெட் வீரர்களையும் தாண்டி பிரபலமான சில விஞ்ஞானிகளில் ஒருவனாய்த் திகழ்ந்தான். இந்திய அரசின் விஞ்ஞான வளர்ச்சித் துறையின் தலைவனாக பொறுப்பேற்கவும் செய்தான்.

ஒருநாள் அவனைத் தேடி உதவி கேட்டு வெங்கி அவன் அலுவலகத்திற்கு வந்தான். அவனிடம் ஒரு திட்டமிருந்தது. கடல் நீரை Reverse osmosis முறையில் சுத்தமாக்கி உப்பை நீக்கி குடி நீராக்கும் திட்டம். அது தனது வாழ்நாள் சாதனையாக கருதினான். மற்ற எல்லா முறைகளைக் காட்டிலும் குறைந்த செலவில் நிறைய நீரை குடி நீராக்கும் திட்டம். அதை செயலுக்கு கொண்டுவர அஜய் உத்வியிருந்தால் எளிதாகுமென நினைத்த வெங்கி அவனிடம் வந்தான். அவன் திட்டத்தை விடாமல் முழுதாகக் கேட்ட அஜய், அதில் உள்ள கஷ்டத்தை விளக்கினான். பொதுவாக இம்மாதிரி திட்டத்தை செயலாக்க அதிக நேரமெடுத்துக் கொள்ளும். அதுவும் குடி நீர் தட்டுப்பாடு வந்தால் மட்டுமே இதைப் பற்றி யோசிக்கும். உன்னைப் போன்ற பேராசிரியருக்கு நிரந்த்ர வேலை இருக்கும்போது இந்த ஆராய்ச்சிகளுக்கு ஏன் நேரத்தை வீணாக்குகிறாய்?இப்பொழுது பண்வீக்கம், உலக பொருளாதார உருக்கம்(Global Economic Meltdown) போன்ற விஷயங்கள் வேறு இருப்பதால் அரசு இத்திட்டத்தில் கை வைப்பது சந்தேகம்தான் எனப் பல காரணங்களை அடுக்கினான். இருந்தாலும் அஜய் கொஞ்சம் முயற்சி செய்தால் இயலும் என்று எண்ணிய வெங்கி, "நீ நினைத்தால் முடியும். எனக்கு ஒரே நண்பன், உண்மையான நண்பன் நீதான். நீயே ஏன் இப்படி பேசுற?" எனக் கேட்டதற்க்குதான் மேலே(ஆரம்பத்தில்) கூறப்பட்ட 'உண்மை நண்பன்' பதிலை அஜய் கூறினான்.

இதைக் கேட்ட வெங்கி ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டான்.அதன் பிறகு அஜய் சொன்னபடி அவன் தனது பணிக்கு திரும்பி ஒரு வருடம் ஓடிவிட்டது. ஒருநாள் இரவு உணவுக்கு தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிருந்த போது அஜய் போட்டோ காட்டப்பட்டது. அதில் அறிவிப்பு இந்திய அரசு அஜயின் கீழ் செயல்படுத்தவிருக்கும் திட்டத்தின் துவக்க விழா மறுநாள் ஞாயிறு காலை 8மணி கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடக்கவிருப்பதாயும், அது கடல்நீரை குடிநீராக்கும் திட்டமெனவும் சொல்லப்பட்டது. அந்த திட்டத்தை விளக்க விளக்க இவனுக்கு என்னவோ போலானது. அது அவன் அஜயிடம் விளக்கிய திட்டம்!

அவன் உடைந்து போனான். ஒரு மனிதன் மேல் வைக்கும் நம்பிக்கையை பொய்த்தால் மீண்டும் ஒருவரிடம் நம்பிக்கை வைப்பது கடினமான் விஷயம். ஒருவனை வாழ்நாள் முழுதும் நம்பினால், அது நிஜமில்லையென உணரும்போது, அந்த வாழ்க்கையின் பல தருணங்கள் அர்த்தமிழந்துவிடுகின்றன். அவ்வளவு நாள் அவனிடம் பழகிய ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் வேறோர் அர்த்தம் கற்பிக்கப் படுகிறதை அவனால் உணர முடிந்தது. அதுவரை அவன் நிஜமாக நட்புடன் கூறிய விஷயங்களுக்கும் தவறான அர்த்தங்கள் புலப்பட வாய்ப்புகள் உண்டானது அவனுக்கு தெரிந்தது.

இதனால் ஏற்பட்ட குழப்பத்தால் உறக்கம் பிடிக்காமல் மனைவியிடம் புலம்பிக் கொண்டிருந்த அவன், தூக்க மாத்திரையின் உதவியினால் தூக்கத்தைத் தருவித்துக் கொண்டான். காலையில் மிகவும் தாமதமாக 10 மணிக்கு எழுந்த அவன், எதுவும் செய்ய்ப் பிடிக்காமல் டீவி ரிமோட்டை எடுத்து உருட்ட ஆரம்பித்தான். அப்பொழுது ஒரு சில அலைவரிசைகளில் ஒரே காட்சி, என்னவோ அவனது கவனத்தை ஈர்த்தது. அதை நிறுத்திப் வெளிநாடு என நினைத்துப் பார்த்தவனுக்கு ஆச்சரியம், அது நம் நாடு. அறிவிப்பாளர் அறிவித்துக் கொண்டிருந்தார். "..... இது போன்ற நிகழ்வுகள் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சாதாரணமானாலும் நம் நாட்டுக்கு புதிது. இன்று காலை சுமார் 8 மணிக்கு மெரீனாவைத் தாக்கிய போது...."

வலது ஓரத்தில் மின்னிக்கொண்டிருந்தது........"ஞாயிறு 26.12.04 10.00 A.M."


பின் குறிப்பு: இது போன வருஷம் எழுதினது. இங்கிலீஷ்ல எழுதினத தமிழ்'படுத்திருக்கேன்'. 100 கதைகள்ல இருந்து வடிகட்டினப்போ இதுவும் செலக்ட் ஆகி என் மானத்தைக் காப்பாத்தினது.
பின்குறிப்பு: படிச்ச பிறகு கண்டிப்பா இதோட குறை நிறைகளை சொல்லுங்க. அப்புறம் இந்த ஓட்டு.....

Comments Posted (1)

Romba nalla irunthathu !!!

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!