Showing posts with label கடவுள்?. Show all posts
Showing posts with label கடவுள்?. Show all posts

கடவுள்?

Filed under , , by Prabhu on 11/15/2009 03:05:00 AM

21

கடவுள் என்ற வார்த்தையை எடுத்தாலே பிரச்சனை ஆகிவிடுகிறது. பிறகு கடவுள் இருக்கிறாரா என்ற தத்துவ விசாரணையை பேசுவதென்றால் எல்லாரும் அவரவர் கருத்தைக் கிட்டதட்ட திணிக்கும் தொனியில் பேச ஆரம்பிக்கின்றார்கள். கடவுள், மதம் போன்ற விஷயங்களைப் பேசுவதில் பெரும் பிரச்சனை என்னவென்று யோசித்தால், நாம் எப்பொழுது அதைப் பற்றி கூறினாலும் நமது தொனி நமது கருத்தை அடுத்தவர் மீது திணிப்பதாகவே தோன்றுகிறது. அடுத்தவரிடம் இருந்து நமது கருத்துக்கான பிரதியை எதிர்பார்க்கும் வகையில் நாம் அவர்கள் நம்பிக்கையில் கை வைப்பதாகத் தெரிகிறது. அதிலும் அதற்கு பதில் சொல்பவர்களைப் படிக்கும் போது அவர்கள் சிறிது சண்டை செய்வது போலவே 'தோன்றும்'. ஏனென்றால் அவரவருக்கு அவரவர் நம்பிக்கையில் பெரும் நம்பிக்கை.

கடவுளை நம்புவர்கள்தான் நல்லா சண்டை போடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு நிகராக சண்டை போடுகிறார்கள் கடவுள் மறுப்பாளர்கள். அதுவும் தமிழ் நாட்டு கடவுள் மறுப்பாளர்களின் 'கொள்கை பிடிப்பு' புல்லரிக்கிறது. நம்ம ஊரில் கடவுள் மறுப்பிற்கு பெயர் போனவர்கள் திராவிடக் கட்சியினர். அவர்களில் புகழ் பெற்ற தலைவரை எடுத்துக் கொள்வோம். அவர் கடவுளை மறுக்கிறார். மிக நல்லது. இந்து மதத்தையும் அதன் மூட  நம்பிக்கைகளையும் சாடுகிறார். சரிதான். ஆனால் எனக்கு குழப்பம் நேருவது எவ்விடத்தில் என்றால், அவர் ரம்ஜானுக்கு கஞ்சி குடிப்பதும், கிருஸ்துமஸுக்கு கிருஸ்துவப் பாடல்கள் கேட்பதும் எவ்வகையில் சேத்தி எனத் தெரியவில்லை. அதற்கு அவருக்கு உரிமை இருந்தாலும், கடவுள் மறுப்பு இங்கே எங்கு வெளிப்படுகிறது என புரிபடவில்லை. ஒருவேளை இந்து மதம் பல மதங்களின் கலவை என்பதால் அதற்கு மத நம்பிக்கை அற்றவனைப் பற்றி பேச நேரமில்லாமல் போனதும், மைனாரிட்டி ஓட்டென்று வந்தால் கடவுள் என்ன, சாத்தானென்ன, வா, 60:40 வைத்துக் கொள்ளலாம் என்பதோ காரணமாக இருக்கலாம்.

கடவுள் எனப் பேசும் போது மதம் என்ற ஒன்று உள்ளே வந்து விழுகிறது. இது என்ன சொல்லுகிறது? ஆணுறை பயன்படுத்தாதே, மின்விசிறி பயன்படுத்து, புற்று நோயை குணப்படுத்து, ஆனால் விஞ்ஞானத்தை நம்பாதே. 2000 வருடங்கள் முன்னாலே அவர் இதைக் கூறினார், நடந்தது என்பதை நம்புகிறீர்களா? என்னைக் கேட்டால் நம்பும் போது நம்புகிறேன். யோசித்து பார்த்தால், கஷ்டம். அதிலும் இப்பொழுது வரும் விஞ்ஞான விஷயங்களை பைபிளில்அப்பொழுதே கூறியிருக்கிறார்கள் எனும் பொழுது, அடடா, அவங்கள விட்டுட்டு தேவையில்லாம கலிலியோவையும், கோபர்நிகஸையுமல்லவா கொன்னுட்டோம் எனத் தோன்றுகிறது.

மத அடிப்படைவாதத்தின் அர்த்தமும் என் சிறுவயது மூளைக்கு விளங்க மாட்டேங்கிறது. கருத்தடை, உயிர்தொழில் நுட்பவியல், காண்டோம், மிக்கி மவுஸ் இதெல்லாம் ஏன் மதங்களிடம் இந்தப் பாடுபடுகிறது எனத் தெரியவில்லை.  கேட்டால், கடவுள் மீது அநியாயமாக பழி போடுகிறார்கள். ஒரு சின்ன குட்டி கதை. ஒரு பாதிரியார் புதிதாக சர்ச்சில் சேருகிறார். பின்னால் அவருக்கு கல்யாணமும் நடக்கிறது. சம்பள கூட்டப்படுகிறது. குழந்தை பிறக்கிறது, கூடுதல் சம்பளம். இரண்டாவது பிறக்கிறது, மீண்டும் கூட்டப் படுகிறது. இப்படியே குடும்ப உறூப்பினர் எண்ணிக்கையும் சம்பளமும் கூடிக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் சர்ச் ஒன்று கூடி ஒரு கூட்டம் நடத்தி அவரை எதிர்கொள்ளுகிறது. அதற்கு அவர், "குழந்தை மழையைப் போல கடவுள் கொடுத்த பரிசு. அதை மறுக்க நாம் யார்?" என்கிறார். கூட்டத்திலிருந்த ஒருவன் எழுந்து, "சாமி, கடவுள் கொடுத்த மழைதான். ஆனால் செருப்பும், குடையும் பயன்படுத்தறதில்ல? அதுமாதிரிதான். பாத்து இருந்துகங்க சாமி." என்றான்.

இன்னும் நான் கடவுளைப் பற்றி நான் பேசவில்லை என்று நினைக்கிறேன். இதுவரைப் பேசியது கடவுள் என நாம் பின்பற்றும் மதங்களின் நம்பிக்கைகள்.
இவ்வளவு பேச ஆரம்பித்த பிறகு நான் எதை நம்புகிறேன். கடவுளை நம்புவதா, கடவுளை நம்புவதை மறுப்பதை நம்புவதா என யோசிக்கும் பொழுது, இரண்டும் விவகாரமான விஷயம், இரண்டுமே வேண்டாமென நினைக்கிறேன். நம்புவதற்கென்ன? நம்புகிறேன். ஆனால் என் கேள்விகளுக்கு கடவுளிடம் இடமிருக்கிறதென்றாலும் மதங்களிடம் இடமில்லை. தமிழில் தெரியவில்லை. ஆங்கிலத்தில் சொல்கிறேன். Im an Agnostic. Agnostic? அடுத்த பதிவுல.

-தொடரும்

பின்குறிப்பு - ஒவ்வொருவருக்கு ஒரு நம்பிக்கை. நான் என்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். இதை நான் யாரையும் ஏற்கச் சொல்லவில்லை. உங்களுக்கு சுவையாகப் பட்டால் படிக்கலாம் என்கிறேன். இது ஓடும் எண்ண ஓட்டங்களும், சில சேகரித்த விஷயங்களுமே. அதப் படிச்சியா, இதப் படிச்சயான்னு கேக்கும் முன்னே அடுத்த பாகத்த பாத்து என்ன சொல்ல வருகிறேன்னு தெரிஞ்சுக்கோங்க.