பைரவன் கோவிலுக்கு வழி

Filed under , , by Prabhu on 12/13/2009 02:32:00 PM

13

மாலை ஆகி இருள் கவியத் தொடங்கியது. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு வீட்டிலும் மனைவிக்கு சமைக்க வேண்டிய கவலையுடன் செல்லும் கண்வனைப் போல கலையிழந்த சூரியன் மேற்க்கில போய் பொத்தென விழுந்தான். இருள் நேரம். திருடர்களுக்கும் கருப்பு உலக ஆசாமிகளுக்கான நேரம். அவர்கள் எல்லாத்துக்கும் இப்பொழுதுதான் பொழுது விடிந்திருக்கும். இதுதான் எங்களின் நேரம். இரவு வந்ததும் நானும் ராஜுவும்னும் கெளம்பிடுவோம். நாங்க இருக்கிற ஏரியா ரொம்ப முன்னேறிய இடமில்லைன்னாலும் ஒரு நகரத்தோட எல்லையில இருக்கிற இடம்ங்கிறதால கொஞ்சம் கட்டுப்பாடு அதிகம்தான். இரவானால் ரோந்துக்கு வரும் வாட்சுமேனில் இருந்து இரவுநேர வேலைக்கு செல்பவன் வரையிலும்  எங்களைக் கண்டால் சிறிது பயப்படுவதுதான் எங்களுக்கு சவுகரியம். ஆனால் டாஸ்மாக்கில் இருந்து வெளியில் வருபவன் கடவுளுக்கு என்ன, பொண்டாட்டிக்கு கூட பயப்பட மாட்டான் என்பதால் அவனிடம் யாரும் வம்பு வைத்துக் கொள்வதில்லை.

எங்களுக்கு தொழில் முறை போட்டியாளர்கள் என்று யாரும் கிடையாது. ஆனால் எதிரிகள் உண்டு. ஒரே ஏரியாவுல பல பேரு  இருந்துக்கலாம். ஆனா ஒருத்தன் ஒரு ஏரியாவில் இருந்து அடுத்த ஏரியாக்கு போக கூடாது. அப்படி போயிட்டா கேங் வார் தவிர்க்க முடியாததா ஆகிடும். இல்ல ரெண்டு குரூப்பும் ஒரு கூட்டம் போட்டு முடிவெடுக்கிறேன்னு சொல்லிட்டு நடு ரோட்டில காட்டு கத்து கத்திட்டு ஓரமா ஒண்ணுக்கு அடிச்சிட்டு போயிருவானுங்க.

போன மாசம் தான் ஒரு சின்ன தகராறு ஆயிடுச்சு. பக்கத்து தெரு மணி கசாப்பு கடைக்காரர் கிட்ட சின்னதகராறில அந்தாள கீறிட்டான். அதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு அந்தாளு மருத்துவமனைல படுத்துக்க, அவ பொண்டாட்டி ஊரெல்லாம் ஒப்பாரி வச்சிட்டாள். உடனே அந்த ஏரியாகாரனுங்க எல்லாம் ஒண்ணு கூடி போய் புகார் கொடுத்துட்டானுங்க. ராஜா மாதிரி இருந்த எங்க நிலைமை இப்ப பரிதாபகரமா போச்சு. எப்ப வருவானுங்கன்னே தெரியல. திடீர்னு காக்கிக்காரனுங்க ரெய்டு வந்திடறானுங்க. பக்கத்து ஏரியாவுல இருந்த கரிவாயனோட கேங்க மொத்தமா ரவுண்டு கட்டித் தூக்கிட்டு போயிட்டாங்க.

கசாப்பு கடைக்காரன், தெருமுக்கு அம்பிகா ஹோட்டல்காரன், இன்னும் சில கடைக்காரன்களால தான் பொழப்பு ஓடிகிட்டு இருந்துச்சு. இந்த மணியால அது கெட்டுப் போனதுதான் எனக்கு ஆத்திரம். ஓட்டு வீட்டுல தனியா குடியிருக்கிற ராமு தாத்தா தான் இன்னமுமம் ‘நான் பாத்து வளந்ததுக’ என அடைக்கலம் குடுக்கிறார். அதுவும் ஏரியாக்காரர்களுக்கு தெரிந்தால் பிரச்சனை என்பதால் ரகசியமாக நடக்கிறது.

 
வழக்கம் போல தூக்கிட்டு போயிட்டு எல்லாம் முடிஞ்சதும் வெளிய விட்டுருவானுங்கன்னு நினைச்சிட்டிருந்த என் பொழப்புல மண் விழுந்தது. இந்த தடவை எல்லாமே எண்கவுண்டர்தான் எனக் கேள்விப் பட்டேன். மூணாவது தெருவில இருக்கிற ஜான்சிய வேற பாக்க முடியல. என் பழக்கத்தால அவளயும் தூக்கிட்டு போயிருந்தா? சேசச்சே... நம்மள மாதிரி அநாதையா அவ? குடும்பம் இருக்கு. ராஜுகிட்டயும் சொல்லிவச்சேன். எப்பவும் தயாரா இரு, வாய்ப்பு கெடைச்சா ஓடிரலாம்னு. அவன், அப்ப ஜான்சி எனக் கேட்கிறான். அவளையும் கூட்டிட்டுதான்.

இதெல்லாம் நடக்கும் போதுதான் அன்னைக்கு எங்க தெருவுக்கு காக்கி சட்டைக் காரனுங்க வந்திருப்பது தெரிந்தது. போதாக்குறைக்கு தெருக்காரனுங்க லஞ்சம் குடுத்திருக்கானுங்க. சிக்கினா சோலி முடிஞ்சது. நான் வேகமா வந்து சந்துல பதுங்கிக் கிட்டேன். பின்னால் திரும்பினால் ராஜுவைக் காணோம். கொஞ்ச நேரம் கழித்து காலி ரத்தத்துடன் ஓடி வந்தான். அடிச்சிருக்காங்க. மறைவிடத்துக்கு வரும் முன்ன சொத்தென ஒரு அடி அவன் முதுகில் விழுந்தது. அவன் துள்ளித் துடித்தான். திமிறினான். அவனைப் பிடித்தவன் ராமு தாத்தாவைப் பார்த்து கேட்டான், ‘என்ன சார், உங்களுக்கு பழக்கம்னு சொன்னாங்க. நீங்க சொன்னீங்கன்னா விட்டுடறேன். ஃபார்மாலிட்டீஸ் வேணாம்”. ராமு தாத்தா, ‘பழக்கம் தான். அதுக்காக என்ன செய்வது. தூக்கி வச்சு கொஞ்சவா முடியும். தெரு நாய்தானே?’ என்றார். என் கண் முன்னே அவனைத் தூக்கிச் சென்றார்கள். தெரு நாய் தானாமே? இனி இங்க இருக்க முடியாது. ஜான்சி? இருக்கிற பிரச்சனைல அவ வேறயா? போற எடத்துல பொட்ட நாய் கிடைக்கிறதா கஷ்டம். போதாததுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு. பக்கத்துல இருக்கிற கிராமத்துல பைரவர் கோயில்  கட்டி நாயிக்கெல்லாம் கறி வைக்கிறாய்ங்களாமே? அந்த ஊருக்கு வழி சொல்லுங்களேன்.

பின் குறிப்பு : இதை என்ன கேட்டகரில வகைப்படுத்தன்னே தெரியல. என்னவோ எழுத ஆரம்பிச்சு ஆறு ஏழு மாற்றங்கள் அடைஞ்சு, சில மாதங்கள் கிடப்பில் கிடந்து, உள்ளயே ஏன் வைத்திருப்பானேன், படிக்கறவங்க கஷடம் என வெளியிட்டுட்டேன்.

Comments Posted (13)

பாதி படிக்கும்போதே புரிந்து விட்டது.

@ஸ்ரீ
:) எதிர்பார்த்தேன். என் பதிவப் படிக்கறவங்க எல்லாம் புத்திசாலின்னு தெரிஞ்சதுதானே!

ஹி..ஹி..கதை பல திருப்பங்களை கொண்டுள்ளது.பல சந்துகளில் பயணமாகிறது.கடைசியில் காக்கிசட்டைக்கு பயந்து ஓடிவிடுகிறது.எப்படிங்க உங்க கதைக்கு என் விமர்சனம் :)

ச்சு... ச்சு...ச்சு...ச்சு...

அட! உன்ன கூப்பிடல பப்பு....
நாயை பார்த்து பரிதாபப்படுறேன்!!

நல்லாயிருக்குப்பா!! Take a crack at like these folk stories...

அவ்வ்வ்வ் நாயிக்கெல்லாம் நாயே பேரு வச்சுக்குது போல... பட் நான் ஒன்னு சொன்னா நான் புத்திசாலின்னு சொல்லிடுவ.... இருந்தாலும் சொல்லிடுறேன். படிக்கும் போதே தெரிஞ்சுடுச்சு. அதுவும் நீ காக்கிசட்டைகாரன், காக்கிசட்டைகாரன்னு சொல்லும்போது கன்பார்ம் ஆகிடுச்சு :)

பட் குட் ட்ரை பப்பு. பின்னால பெரிரிரிரிரிரிரிரிய எழுத்தாளனா வருவ பாரு!

@பூங்குன்றன்
ஆமா, அடுத்த கதையில் ஒரு கொண்டை ஊசி திருப்பம் வைக்கலாம்னு இருக்கேன் :)

@கலையரசன்
நல்லாயிருக்குன்னு சொல்லிட்டீங்க... சந்தோஷம்!

@ஆதவன்
எல்லோரும் யூகிச்சிருவாங்கன்றத எதிர்பார்த்தேன். நீங்க புத்திசாலின்னு நான் வேற சொல்லனுமா? ஊரே சொல்லுதே!

எல்லாம் உங்க ஆசிதான்.

நல்ல முயற்சி பப்பு. நல்லாருக்கு.

ஜெஃப்ரி ஆர்ச்சர் ஒரு கதை எழுதியிருப்பார். கடைசி வரியில்தான் தெரியும் அது நாயின் பார்வையில் எழுதப்பட்டதுன்னு.

நானும் இந்த மாதிரி ஒண்ணு டிரை பண்ணினேன் முன்னானாடி - ’முங்காவின் முத்தம்’னு. அதிக வரவேற்பு பெறலை ஆனா :)

கதை வழக்கம்போல் சூப்பர்..கொஞ்சம் இரு படிச்சிட்டு வரேன்..

தலைப்பிலயே பைரவர்னு சொல்லாம இருந்திருந்தா கொஞ்சம் சஸ்பென்ஸ் இருந்திருக்குமோன்னு தோணுது

\\அதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு அந்தாளு மருத்துவமனைல படுத்துக்க, அவ பொண்டாட்டி ஊரெல்லாம் ஒப்பாரி வச்சிட்டாள்.\\

இந்த இடத்துல இடிக்கிதே..! மருத்துவமனைக்கு பதிலா "ஆஸ்பத்திரி"யும் வச்சிட்டாளுக்கு பதிலா "வச்சுட்டா"வும் போட்டு பாருங்க.சும்மா தூக்கும்.

கத செம டெரரா இருந்துது,
ஆமா,என்ன சிங்கம் ? கோவில் உண்டியல் மாதிரி ஓட்டுப்பட்டை கீழ ஒண்ணு மேல ஒண்ணு?
:)))உங்களுக்கும் ஃபார்மாலிட்டி பண்ணியாச்சி.

நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு வீட்டிலும் மனைவிக்கு சமைக்க வேண்டிய கவலையுடன் செல்லும் கண்வனைப் போல கலையிழந்த சூரியன் மேற்க்கில போய் பொத்தென விழுந்தான். //
பப்பு, எங்கேயோ போயிட்டீங்க. எதிர்காலம் பிரகாசமா இருக்கு உங்களுக்கு.

உங்க நடை நல்லா இருக்கு பப்பு. மதுரையில் இருப்பதன் பயனாய் ஒரு கரு.

அன்பின் பப்பு - மதுரையா - தெரியாமப் போச்சே

கத நல்லாவே போகுது - இயல்பாப் போகுது . சூரியன் மேற்கே பொத்தென விழுவதற்கு ஒப்புமை - மனைவிக்கு சமைத்துப் போடும் கணவன். அடாடா -எவனிடத்திலும் பயமில்லை - டாஸ்மாக்கில் இருந்து வருபவனைத் தவிர .......

ஜான்சி ராஜூ ம்ம்ம் - இக்கதையின் நாயகன் ஒரு நாயா .....

//அப்படி போயிட்டா கேங் வார் தவிர்க்க முடியாததா ஆகிடும். இல்ல ரெண்டு குரூப்பும் ஒரு கூட்டம் போட்டு முடிவெடுக்கிறேன்னு சொல்லிட்டு நடு ரோட்டில காட்டு கத்து கத்திட்டு ஓரமா ஒண்ணுக்கு அடிச்சிட்டு போயிருவானுங்க // இவ்வரிகள் தான் நாய் தான் கதாநாயகன் என உறுதிப்படுத்துகிறது.

நல்லாவே போகுது கத - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!