12 Angry Men (1957)

Filed under , by Prabhu on 12/12/2009 01:19:00 PM

12

16x24 அறையில் பன்னிரண்டே பேர் அமர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள், படம் முழுக்க. சுவாரஸ்யமாக இருக்க முடியமா எனக் கேட்டால், இருக்க முடியும் என்று கூறுகிறது இந்தப் படம். சில வழக்குகளில் அவன் தவறுதான் செய்தான் என்றாலும் அதற்கு மனிதாபிமானக் காரணங்களை நோக்காமல் சட்டப்படி தண்டனை குடுக்கப் படுகிறது. ஆனால் இது போன்ற மனிதாபமான் நோக்கில் சில வழக்குகளை சிந்திக்கவே ஜூரிக்கள்(Jury) நியமிக்கப் படுகிறார்கள் என நினைக்கிறேன். இப்படி நியமிக்கப்படுகிற 12 ஜூரிக்கள் ஒரு வழக்கின் தீர்ப்பைத் தீர்மானிக்க விவாதம் செய்ய முற்படுவதே இந்தப் படம். இது முதலில் டிவியில் வந்த மேடை நாடகம் போன்ற ஒன்றின் திரைவடிவம்.


 
ஒரு சேரி பையன் மீது அவன் தந்தையைக் கொன்ற குற்றம் சுமத்தப் படுகிறது. அதனை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பு மரணம் அல்லது விடுதலை என்பதில் ஒன்றாகவே இருக்க வேண்டும், ஜூரிக்களை எந்த முடிவு எடுத்தாலும் பன்னிருவரும் ஒத்த முடிவெடுக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளோடு ஒரு தனி அறைக்குள் அனைவரையும் அனுப்புவதுடன் இத்திரைப்படம் ஆரம்பிக்கிறது. அத்தனை பேரும் அவன் குற்றவாளி என முடிவு செய்யும் போது Henry Fonda மட்டும் குற்றவாளி அல்ல என ஓட்டளிக்கிறார். ஏன் எனக் கேட்ட்கும் பொழுது,  ‘எனக்கு தெரியல. ஆனா வாங்க பேசுவோம்’ என்கிறார். எல்லோரும் கோபமாக  இவனை எதிர்கொள்ளும் போது, ‘ஒரு மனிதனின் உயிரை அவ்வளவு எளிதாக பறிக்க முடிவு செய்துவிடுதல் எனக்கு சரியாகப் படவில்லை. வாங்க பேசுவோம்’ என சாலமான் பாப்பையா ரேஞ்சுக்கு அழைக்கிறார்.
 
 மெல்ல விவாதம் வழக்கின் ஆதாரங்கள், சாட்சிகள், அதன்
நம்பகத்தன்மையை பற்றி திரும்புகிறது. 11-1 என்று குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது, இவருடைய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற வாதம் நியாயமாகப் பட ஒருவர் மாரல் சப்போர்டுக்காக மட்டுமே ஓட்டளிக்க 10-2 என மாற சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக 10-2, 9-3, 8-4 என சரியத் தொடங்குகிறது.  அவர்கள் ஒவ்வொருவரும் பேசப் பேச ஒரு குற்றச் சம்பவத்தையே நம் கண் முன்னே நிகழ்வது போல கொண்டு வந்து நிறுத்துகிறது.  ஆரம்பத்தில் ஒன்றும் சொல்லாமல் ஆரம்பித்த அந்தக் கேஸ், படம் போக போக மெல்ல நம் கண் முன்னே consrtuct ஆகிறது.  இறுதியில் Henry Fonda  யாரென்றே தெரியாத அந்த சிறுவனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரா? அந்த சிறுவன் நிஜமாலுமே கொலைகாரனாக இருந்து விடுதலை கொடுத்துவிட்டால்? என்பது போன்ற விஷயங்களுக்கு rational ஆக பதில் சொல்லியிருக்கிறார்கள்.

கொலையை காட்டாமலே க்ரைம் த்ரில்லர் பார்த்த மாதிரியான உணர்வு. கடைசி வரைக்கும் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கும் காட்சியமைப்புகள்.

 பன்னிரண்டு பேரும் பன்னிரண்டு விதமான பாத்திரப் படைப்புகள்.
ஒருவனுக்கு நியாயத்தினாலான தார்மீகக் கோபம், ஒருவனுக்கு prejudiceனால் வந்தக் கோபம்,
 ஒருவனுக்கு சொந்த அனுபவங்களின் வெறுப்பினால் வந்த கோபம், ஒருத்தனுக்கு தானும் சேரிப் பிண்ணனி என விமர்சிக்கப்படும் போது கோபம், தான் பேஸ்பால் விளையாட்டுக்கு போவது கெட்டது என ஒருவனுக்குக் கோபம் என வெவ்வேறு வகையில் கோபம் பிரதிபலிக்கிறது. அசட்டை, prejudice, பயம், சந்தேகம், விரக்தி, தன்னம்பிக்கை, இரக்கம், எரிச்சல், பொறுமை  என பன்னிரெண்டு குணநலன்கள்.

சில சமயங்களில் நம்மை அசரவைக்கும் விவாதங்கள் உண்டு. சில மாதங்கள் முன்பு இரவு ஒன்றரை மணிக்கு ஒரு காட்சி பார்க்கலாம்  என ஆரம்பித்து மூட முடியாமல் பார்த்தேவிட்ட பிறகுதான் தூக்கம் வந்தது. நான் பழைய ஆங்கில படங்கள் பார்த்தது ஒன்றிரண்டே. ஒரு கருப்பு வெள்ளை படம் இவ்வளவு intense ஆக இருக்குமென கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

சட்டென்று ஒரு பாயிண்ட்டால் மற்றவரை மடக்கும் போது அந்தக் கதாபாத்திரம் திணறுவது வேடிக்கை. சில சமயங்களில் அது பின்னிரவு என்று கூட யோசிக்காமல் சிரித்திருக்கிறேன், தனியே. கத்திக் கூர்மை வசனங்கள். . பேப்பரில் எழுதும் போது திரைக்கதையாளர் என்ன நினைத்து எழுதினாரோ அதை நேரில் காட்டுகிறார்கள். வாரக் கணக்கில் நொங்கெடுத்ததால் மிக நேர்த்தியான் நடிப்பு. அளவான பட்ஜெட்டும் அதற்கு காரணமாக இருக்கலாம்.

படத்தில் ஆரம்பத்தில் வைட் ஆங்கிளில் ஆரம்பித்து முடியும் போது நெருக்கமாக வைத்து எடுத்திருப்பது டென்ஷனை அதிகரிக்க உதவியிருக்கிறது.  ஆரம்பத்தில் வெப்பாமாக இருப்பதால் வெந்து வழிகிறார்கள், போகப் போக பெருமழை அடித்து படம் முடியும் போது ஓய்கிறது. அந்த காலத்தில் சன்னலுக்கு வெளியே கட்டடங்களாக செட் போடும் போது, மட்டமா இருக்கு என Fonda குறைபட்டுக் கொண்ட போது இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாத்துக்குவார் என பதில் கூறியது சால நிஜம். நம்மை அவை கன்வைன்ஸ் செய்கிறது. எடிட்டிங் கத்தி சுத்தம். ஓட்டையே இல்லையான்னு கேட்டா உண்டு, சின்ன லாஜிக். அட, அது கூட இல்லைன்னா எதுக்கு படம். டாகுமெண்ட்ரிதான் எடுக்கனும்.

 96 நிமிடப் படத்தில் 93 நிமிடங்கள் ஒரே அறையில் நடக்கிறது. படம் அந்தக் காலத்திலிருந்து இப்பொழுது வரை சிறந்த நீதிமன்றம் சார்ந்த படமாகக் கருதப் படுகிறது. இப்பொழுது ஒரு வாக்கெடுப்பில் அந்தப் பிரிவில் இரண்டாவது ரேங்க். கண்டிப்பாக Rotten tomatoesல் 100 தேறும். ஆனாலும் இந்தப் படம் பெரிதாக ஓடவில்லை. இந்தப் படத்தை தானே தயாரித்த Fonda இத்துடன் தயாரிப்பை விட்டுவிட்டார். (Fondaவைப் பற்றி சிறு குறிப்பு வரைய பாலாவை அழைக்கிறேன். எனக்குத் தெரியாததால்.. இந்தப் படம் பாத்திருக்கீங்களா?).

மொத்ததில் ஒரு புத்துணர்வான, க்ளாஸிக் அனுபவத்திற்கு உத்தரவாதம். 

12 Angry Men - See if you are a smart 1.

Comments Posted (12)

ஆஹா இன்னொருத்தர் கிளம்பிட்டாருப்பா. :)

ஆனா செம இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும் போலிருக்கே. கண்டிப்பா பார்க்கிறேன். :)

படத்தின் இயக்குனர் ஸிட்னி லுமெட் பற்றி நீங்கள் ஒரு வார்த்தை கூட குறிப்பிடாத காரணம் என்னவோ?

இது இவரது முதல் படம் ஆகும்! பின்னர் அல் பசினோவுடன் இனைந்து DOG DAY AFTERNOON, SERPICO என பல க்ளாஸிக் படங்களைக் கொடுத்துள்ளார்! இது மட்டுமல்லாது NETWORK, THE VERDICT போன்ற இவரது பிற படங்களும் அற்புதமானவை! எனது ஃபேவரைட் இயக்குனர்களில் ஒருவர்!

இப்படம் ஒரு நாடகத்தை எவ்வாறு சுவை குன்றாமல் மெருகேற்றி திரை வடிவம் கொடுக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாகும்! மூலக்கதை ஒரு நாடகம் என்பதால் சம்பவங்கள் முழுவதும் ஒரே அறையில் நடைபெறுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்! ஆனால் படம் பார்க்கும் போது அதை உங்களால் உணர முடியாது! இதுவே இயக்குனரின் வெற்றியாகும்!

தலைவர்,
அ.கொ.தீ.க.

ஹென்றி ஃபோண்டா நடித்து சஸ்பென்ஸ் மன்னர் ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக் இயக்கிய THE WRONG MAN திரைப்படத்தையும் இந்த சமயத்தில் பரிந்துரைக்கிறேன்!

தலைவர்,
அ.கொ.தீ.க.

அண்ணன் ஹாலிவுட் பாலாவுக்கு போட்டியா பப்புவா? ரைட்டு.... நமக்கு நல்ல படங்கள் அறிமுகம் கிடைச்சா நல்லது தானே :)

பார்த்ததில்லை.பார்க்க முயற்ச்சிக்கிறேன்.

விமர்சனம் நல்லா தான்கீது..இது என்னா திடிர்னு புது ரூட்ல போறியே..

@கார்த்திக்
கண்டிப்பா பாரு!

@பயங்கரவாதி
உங்க பேர டைப் செய்யவே ஒரு மாதிரி டெரரா இருக்கு. என் தப்புதான். அவரோட மற்ற வரலாறு தெரியாது. serpico எடுத்தவரா? அதுதான் பொம்மலாட்டம்னு கேள்விபட்டேன்?

@ஆதவன்
போட்டி இல்ல. சும்மா ஒரு சீசனுக்கு :)

@ஸ்ரீ
முயலுங்கள் :)

@வினோத்
எல்லாம் ஒரு நப்பாசைதான் :)

//serpico எடுத்தவரா? அதுதான் பொம்மலாட்டம்னு கேள்விபட்டேன்?//

நிச்சயமா இல்லை! செர்பிகோ ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் உண்மைக் கதை!

தலைவர்,
அ.கொ.தீ.க.

12 கோபக்காரர்கள் இல்ல பப்பு...
ஒன்னுதான்! அதுவும் நான்தான்!!

நீ பழையபடியே எழுது நண்பா....

@பயங்கரவாதி
நீங்க சொன்னா சரி! எவனோ al pacino ரசிகன் என்கிட்ட கதை விட்டிருக்கான்.

@கலையரசன்
அவ்வளவு மோசமாவா இருக்க்க்கூஊஊது! முதல் எதிர்ப்பு. ஹீ..ஹி.. சும்மா இதெல்லாம் சீசனல் ஃபீவர்ங்க, உடனே போயிடும். அடுத்து கலாச்சாரம் இழந்த மனித நேயம் தெரியாத ஒருவனின் காதல் கதை எழுதுறேன். நீங்களே ஓடும்படி செய்யுறேன். கதை நல்லா இல்லாம இருக்க நான் கியாரண்டி. இப்படி மோசமான ஐடியா எனக்கு எங்க இருந்து உதிக்குதுன்னே தெர்ல :)

படத்தை 2 முறை பார்த்தாச்சிங்க பப்பு. Fonda பத்தி எனக்கு தெரியாதுங்க. வேணும்னா.. கொஞ்சம் குடையலாம்.

இந்தப் படம் behind the scene மேட்டர் இன்னும் பார்க்காம்லேயே வச்சிருக்கேன். நேரம் கிடைக்கும் போது பார்க்கனும்.

கொஞ்சம். கேப் கொடுத்தா... எல்லாரும்.. ஆங்கிலப் படத்தை பத்தி எழுத ஆரம்பிச்சிட்டீங்க. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? ஹா???

ரொம்ப நல்ல படம் இது, கருப்பு வெள்ளை காவியம்,இன்று வரும் படங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல.

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!