சில பயணங்கள் - 2

Filed under , by Prabhu on 2/23/2010 11:20:00 AM

10

மடிவாலாவில் இறங்கியதும் ஆட்டோவாலாக்கள் மொய்க்கிறார்கள். எல்லோருக்கும் தமிழ் தெரிகிறது. நீங்கள் அங்கே இறங்கி, ’ஐயா நான் சிரம பரிகாரம் செய்து கொள்ள ஒரு நல்ல விடுதிக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்றால் கூட புரிந்து கொள்வார்கள். சிறிதே தடுமாறும் தமிழ் பேசவும் செய்கிறார்கள். மீட்டருக்கு மேல் பத்து கேட்கிறார்கள். நான் நான்கு வருடங்களுக்கு முன் முதன்முதலில் போன பொழுது மீட்டரே வேத வாக்கு. சமீப வருடங்களாக சென்னைக் காரர்களைப் பார்த்துக் கற்று கொண்டிருக்கிறார்கள. மீட்டருக்கு மேல் பத்து கேட்டார், ஐந்தைக் கொடுத்து சமாளித்தோம்.

கோரமங்களாவில் என் அண்ணன் வீட்டுக்கு போய் கதவைத் திறக்கவும் ஓடி வந்து எட்டி கண்ணை உருட்டிப் பார்த்துவிட்டு பின்வாங்கினவள், என் அண்ணன் மகள் சுகிதா. சுகிதா  என்றால் ஒளி கீற்று என்பது போன்ற அர்த்தம் வரும். என்னடா புதுசா வாயில் வராதபடி வச்சிருக்கீங்கன்னு எங்க அத்தை கூட கேட்டாங்க. வாயில் நுழையுற மாதிரி வைக்கனும்னா வாழைப்பழம்னு தான் வைக்கனும் என கவுண்டமணி சொல்வார். பெயர் வைக்கும் போது யாரும் அதிகம் பயன்படித்தாத பெயராக இருக்க வேண்டும் என்பது எனக்கு ஒரு obsession. என் பெயரை சொல்லி அடுத்தவனைக் கூப்பிடும் போது ஏற்படும் அசூயைக் கூட காரணமாக இருக்கலாம்.

அண்ணன் வீட்டிற்குப் போனதும் கடமையாக கொட்டிக் கொண்ட பிறகு குசல விசாரிப்புகளும் குழந்தையுடன் விளையாட்டும் தொடர்ந்தது. சுகிதா துறுதுறுவென வருகிறாள். அவளுக்கு உட்காரத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன். உட்கார்ந்து பார்த்ததில்லை, ஒரே ஓட்டம் தான். ஒரு வயது தான் ஆகிறது. அதற்குள் அநியாய அடம். அம்மா, ப்பா என்று எப்பயாவது பாசம் பொங்கும் போது மட்டும் வருகிறது. நான் சொல்லச் சொல்லி சொன்னால் வாயில் விரல் வைத்துக் கொண்டு கேவலமாக நம்மை பார்க்கிறாள், ‘வெட்கமாயில்ல’ என்பது போல். நான் அவளைத் தூக்கி வெளியே வந்த பொழுது, bbaa, bbaa என சத்தம் எழுப்பி கையை அழைத்தாள். அந்த திசையில் பார்த்தால் மாடு. மாடி வீட்டு நாய் ராமு வந்தால் ட்டா,ட்டா என அழைக்கிறாள். காதைப் பிடித்து இழுக்கிறாள். நான் நாய் இருக்கும் தெருவில் நடக்க ஆரம்பித்ததே காலேஜ் வந்த பிறகு தான். அதற்கு முன் சித்தப்பா வீட்டிற்குக் கூட சுத்தி தான் செல்வேன், அந்த குட்டி பொமரேனியன் நாய்க்காக.

இப்படிபட்ட சாகச வீராங்கனை பயப்படும் விஷயம் உணவு. ம்ஹூம்.. ஒரு வாய் உண்ணேன் என்கிறாள். அதனாலேயே வத்தலாக இருக்கிறாள். மடியில் போட்டு பாலோ அரைத்த உணவோ கொடுக்கும் முன் நடு விரல் இரண்டை சூப்பிக் கொண்டு வெளியே எடுக்க மாட்டாள். மேஜையில் இருக்கும் பொருளை எல்லாம் சூறையாட அவள் ஓடி வந்தால், ஒரு புட்டி பாலை வைத்து அவளை விரட்டி விடுவேன்.  இந்த தடவை அவளுக்கு டயாபர்  அண்ணன் பெரிதாக வாங்கி விட அவள் டெண்டுல்கர் போல அதை அப்பப்போ அட்ஜெஸ்ட் செய்து கொண்டே ஒரு முழி முழிப்பாளே பார்க்கனும். சிரிப்பாக இருந்தது. அவள் தத்தக்க தத்தக்க என நடந்து விழும் அழகு... வாய்ப்பே இல்லை.

அன்று ட்வீட்டில் நான் பெங்களூர் வந்ததை கேட்காதவர்களுக்கும் கூவி சொல்லிவிட்டு தூங்கச் சென்றேன். அடுத்த நாள் ஊர் சுற்ற வேண்டி இருந்தது. அதிகபட்ச அலம்பல்களுடன் பெங்களூர் வாழ் நண்பன் என்னுடன் வர ஒப்புக் கொண்டான். வேறு எங்கு செல்லத் தெரியாமல் என் நண்பன் கூப்பிட்ட இஸ்கான்(ISKCON) செல்வதற்காக மெஜஸ்டி பேருந்து நிலையத்தில் சந்திக்க முடிவு செய்யப்பட்டது. போகும் வழியில் இருக்கும் லேண்ட்மார்க்குகளைப் மனப்பாடம் செய்யும் முயற்சியில் அயற்சியடைந்து FM கேட்கத் துவங்கினேன். சென்ற முறை போல இந்த முறை நெடுக கன்னடம் கேட்கப் பிடிக்கவில்லை. தண்டவாளத்தின் நடுவே ஓடி மின்சார ரயில் பிடிப்பவனைப் போல நடுவிலிருந்த கன்னடத்தைத் தாண்டி இந்தி மற்றும் ஆங்கில ஸ்டேஷன்களில் ஓடிக் கொண்டிருந்தேன்.

மெஜஸ்டியில் நண்பனுக்காக காத்திருக்கும் சமயத்தில் இயற்கை ’அன்னை’ ’ஃபோன் போட’, சேலம் பேருந்து நிலையம் நினைவுக்கு வர, தயக்கத்துடன் சென்றால், கழிப்பறை இலவசம். கழிப்பறை சுத்தமாகதான் இருந்தது. பிறகு எங்கிருந்துதான் அப்படி முக்கைத் தட்டிக் குடலை வாய் வழியே வெளியே கூப்பிடும் நாற்றம் வருகிறது எனப் புரியவில்லை. வெளியேறிய சிறிது நேரத்தில் சொன்னபடி ஒன்றாம் நடைமேடையில் சந்தித்தோம். ’இஸ்கான்’ செல்லும் பஸ்ஸைப் பிடித்து நடத்துனரிடம், ‘இஸ்கான் வந்தா சொல்லுங்க’ என தமிழில் சொல்லிவிட்டு ஒரு நாள் சீட்டு வாங்கினான். 32 ரூபாய்க்கு டிக்கட் வாங்கினா வோல்வோ பஸ் தவிர எல்லாவற்றிற்கும் ஒரு நாள் முழுக்க எங்கு வேணுமென்றாலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம். ’இங்க தைரியமா தமிழில பேசு. நிறைய பேருக்குத் தெரியும்’, என விளக்கினான். அவனிடம், ‘நீ முதலில் தமிழில் பேசு’ என்றது அவனுக்கு புரியவில்லை. நான் அதன் பிறகு சில பல சமயங்களில் தமிழ்  பேசியிருக்கிறேன். நிறைய புரிந்து கொள்கிறார்கள்.

 இஸ்கானுக்கு இங்கு இறங்கி நடக்கனும் என்று சொன்னதும் இறங்கி நடந்த எங்களுக்கு நீண்ட வரிசையில்லாத இஸ்கானைக் கண்டதும் புத்துணர்வுடன் சென்றால், ‘சூரிய கிரகணத்தின் காரணமாக மாலை வரை இஸ்கான்’ மூடப்பட்டிருக்கும் என்ற பலகை எங்களைப் பார்த்து பல் இளித்தது. சரி Forum போகலாம் என முடிவு செய்த பொழுது, எனக்கு என் வேலை தோன்றியது. போகும் வழியில் ஒரு காலேஜில் இறங்கி எவன் வாயையாவது பிடுங்கிவிட்டு செல்லலாம் என சொல்ல பேருந்து நிறுத்ததிற்கு கிளம்பினோம். எந்த பேருந்தில் வந்தோமோ அதே பேருந்தே கிடைத்தது. போதும், தொடர விடுவோம். அடுத்த பதிவில் எனக்கு பெங்களூர் பற்றித் தெரிந்த கொஞ்ச விஷயங்களை வளவள என்று பேசுவோம்.

Comments Posted (10)

mmm nice journey pappu. go ahead...

அசூயைன்ற ஒரு வார்த்தை போதும்ய்யா..! நீர் இலக்கியாவாதி.

//இந்த தடவை அவளுக்கு டயாபர் அண்ணன் பெரிதாக வாங்கி விட அவள் டெண்டுல்கர் போல அதை அப்பப்போ அட்ஜெஸ்ட் செய்து கொண்டே ஒரு முழி முழிப்பாளே பார்க்கனும்.//

என்ன ஒரு உதாரணம்!
:)

அழகு

@ஆதவன்
முன்னதான போயிருவோம்...

@ராஜூ
அய்யோ, எனக்கு எந்த வியாதியும் இல்லைங்க... :) பொறாமைக்கு வேற ஒரு வார்த்தை போட்டா இப்படியா?

இப்படித் தான் பல பேரக் கவுத்துறீங்களா?

@வாலு
டெண்டுல்கர் அப்படி இமேஜ உருவாக்கி வச்சிருக்காருங்க...

@நிகே
என்ன பெயர் இது? சுருக்கியதா?

வருகைக்கு நன்றி!

பயணக்குறிப்பு அருமை..
பெங்களூர் இன்னும் அப்படியே தான் இருக்கா..கடைசியா ஒரு 'ரெண்டு' வருஷத்துக்கு முன்னால போனது..

இன்னும் ஊரை சுத்துறத விடலியா நீ? நல்ல இருக்கு அனுபவம்..

@வினோத்
மாறிடுச்சானு நீங்க தான் திரும்பப் போய்ப் பார்த்து சொல்லனும்.

@கிஷோர்
நான் ஒரு வளவள கேஸுங்க!

ரொம்ப நாள் பிறகு என் பதிவு பக்கம் கல்லா கட்டிருக்கு. நன்றி... ஓட்டு விழலை, கமெண்ட் விழலைன்னாலும் நிறைய பேரு படிச்சுட்டு சொல்லிக் கொள்ளாமல் ஓடிருக்காங்க... சந்தோஷம் :) மேலும் இது போன்ற அப்பாவிகள் தினமும் சிக்க எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக் கொள்கிறேன்.

பயணக் கட்டுரையா? ரைட்டு..

உயிரை பணயம் வச்சு படிச்சிடுறோம்

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!