சில பயணங்கள்

Filed under , by Prabhu on 2/05/2010 11:58:00 PM

21

சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4
சில பயணங்கள் - 5
எங்கள் வீட்டில் முடிவு செய்த பொழுது அவர்களுடன் பெங்களூர் போக விருப்பமில்லை. ஆனால், என் அம்மா அப்பாவுக்கு பேத்தியை பார்க்கனும் என பேரார்வம். அவர்கள் முடிவை ஒண்ணும் செய்வதற்கு இல்லை. ஆனால் மூன்று நாட்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வது எனற பிரச்சனையும் இல்லையென்றால் சித்தப்பா வீட்டுக்கு சென்று சாப்பிட வேண்டிய கட்டாயத்தின் பயமும் காரணமாக நான் ஊருக்கு கிளம்ப முடிவு செய்துவிட்டேன். சித்தப்பா வீட்டுக்கு சென்றால் இன்னும் சாப்பிடு என புளிமூட்டை அடைக்கிறாற் போல சாப்பிட வைத்து விடுவார். அத்துடன் அடுத்த வீட்டிற்கு சென்று சாப்பிடும் போது அவர்கள் நேரத்திற்கு நாம் உடன்பட வேண்டும், பசிக்கவில்லையென்றாலும். அதனால் பெங்களூர் சென்று நாலு பெண்களையாவது பார்த்து வரலாம் என கிளம்பிவிட்டேன்.

பொங்கல் அன்று காலை நாலரைக்கே அடித்து எழுப்பி, போய் குளி என விரட்டினார்கள். பயண அவசரம் காரணமாக பொங்கல் குக்கரில் தயாரானது. பொங்கவில்லையென்றாலும் அது பொங்கல் தானா என நான் யோசித்த பொழுது பொங்கல் வந்து விட அந்த எண்ணத்தை உதிர்த்து விட்டு தட்டில் பொங்கலை கொட்டிக் கொண்டேன். அம்மா எனக்காக அளவாகவே சக்கரை கலந்திருந்தாங்க. வரவர ஒரு சில வகை இனிப்புகள் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டால் சரக்கடித்தாற் போல ஒரு மிதப்பு.

ஆரப்பாளயத்திற்கு ஆட்டோவில் சென்று இறங்கினால் சேலம், ஓசூர் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. என் முடிவின் படி ஓசூர் வண்டியில் ஏறி அமர்ந்தோம். பொங்கலன்று பயணம் செய்ய முடிவு செய்த என் அப்பாவின் புத்தி கூர்மையை மெச்சிக் கொள்ள வேண்டும். பஸ்ஸில் பாதியை நிரப்பக் கூட கூட்டமில்லை. நான் ஒரு மூன்று பேர் அமரக் கூடிய இருக்கையில் படுத்து திண்டுக்கல் வரை தூங்கிவிட்டேன். திண்டுக்கல்லில் ஒரு தோசை சாப்பிட்டுவிட்டு வந்து அமர்ந்த பொழுது டீ-சர்ட், ஜீன்ஸுடன் 20+ மதிக்கத்தக்க ஒருவன் வந்தான். தோளில் இருந்த பையும் ஷூவும் அவன் ஏதோ வெளிநாட்டுக் கம்பெனியில் வேலை செய்கிறார் போலத் தெரிந்தது. போனிலும் அலுவல்களை பேசிக் கொண்டே வந்தான். பெங்களூர் செல்கிறான், ஓசூர் வரை இருப்பான் என கணித்தேன்.

திண்டுக்கல் தாண்டியதும் அகன்ற தேசிய நெடுஞ்சாலையை கண்ட ‘ஆழி அகல் வீதி’ என மதுரையை சங்க இலக்கிய நூல்  விளக்குவாதாக சிறு வயதில் படித்தது ஞாபகத்துக்கு வந்தது. மதுரை வீதியில் ஒரே நேரத்தில் இரு தேர் அநாயசமாக செல்லுமாம். இப்பொழுது இரு கார் சென்றாலே அந்தத் தெருவில் வாகனங்களின் ஹெட்லைட் கண்கள் முறைத்துக் கொள்கின்றன. இந்தக் கட்டத்தில் அவ்வளவு அகண்ட சாலைகளைக் காணும் போது ஆச்சரியமே.  Free way, Express way, Autobahn என வெளிநாடு சென்று வந்த நம்மவர்கள் கூறும் சாலைகளுக்கு சிறிதும் குறைந்ததில்லை. சுத்தமாக, சீராக அகலமாக பல லேன்களுடன் இருந்தது. சுங்கச் சாவடிகள் அருகே அதன் பிரம்மாணடம் புரிகிறது. சாவடி அதிகாரிகள் மஞ்சள் சட்டையும் டையுமாக இருந்தனர். தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கலாம் என அப்பா கூறினார்.


அடுத்து வந்த ஊர் கரூர். பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளைக் காணும் போது அகன்று, கட்டுமான அமைப்புகளும் நன்றாக இருந்தது. தமிழ்நாட்டில் முக்கிய ஊரான மதுரையில் இப்படி இல்லையே வீதிகள் என ஆதங்கம். கரூரில் எல்லா சாலைகளும் இப்படி இருக்கிறது என்றால் அது நல்ல விஷயம் தான். எனக்குத்தான் புகைச்சல். இதைத் தாண்டி செல்லும்போது மீண்டும் ஒரு சாவடி. ஓட்டுநர் என்னவோ பேசினார், தடுப்பை திறந்துவிட்டார்கள். பின்னர் தெரிந்து கொண்டேன் வாராந்திர பாஸ் வசதி உண்டு. ஒரு தடவைக்கு 50 ரூபாயாம். பெங்களூர் செல்வதற்குள் 5,6 சாவடிகள் பார்த்து விடுவோம். ஒரே வழி, அதிலும் இப்படி அதிக சுங்கம் என்பது அநியாயம்.

அதைத் தாண்டி நாமக்கல் பேருந்து நிலையத்தினுள் நுழைந்த பொழுது அருகில் ஒரு மலையும் அதன் மேல் ஒரு கோட்டைச் சுவரைப் போன்றும் இருந்தது. என்னவென்று கேட்டதற்கு கோட்டைடா என்று விளக்க முற்பட்டார். அம்மா இடைமறித்து, ’சும்மா குழப்பாதீங்க. மேலே ஒரு கோவில் இருக்கிறது’ என்றார். அதைத் தான் சொல்ல வருகிறேன் என்ற அப்பா, ‘அந்த காலத்தில் கீழே போர் புரிந்து கொண்டிருக்கையில் பலவீனமடைந்தால் தப்பி ஓடி உள்ளே ஒளிந்து கொண்டு ‘தற்காப்பு போர்’ செய்வார்கள். வெளியே முற்றுகை நடக்கும். யார் அதிகநாள் தாங்குகிறார்களென்பது போரின் முடிவை நிர்ணயிக்கிறது’ எனறு விளக்கினார். அந்த மாதிரியான அரண்களிலெல்லாம் ஒரு கோவில் இருப்பது வழக்கம் என நான் படித்ததுண்டு. தஞ்சையின் பழைய கோட்டையினுள் இருந்த காளி கோவில் இன்னும் உண்டென கேள்வி. சரியான தகவல் நினைவிலில்லை. தமிழனின் வீரம் பற்றி அதிகம் பேசி நம்மை ஏமாற்றும் அளவு நம் ஊரில் வீரம் இருந்திருக்காது, போர்தந்திரம் தான் வெற்றியை நிர்ணயம் செய்கிறது என்பது திண்ணம். புறநானூற்று வீரமெல்லாம் தமிழ் சினிமாவின் கதாநாயகனின் வீரம் போல்தான் என ஒரு எண்ணம் தோன்றுகிறது.

(சில நாட்கள் ஆனதால் ஞாபகங்கள் தப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த பயணக் கட்டுரை எழுதுவதற்குள் பல தடங்கல்கள். 3 வாரங்கள் ஆகப் போகிறது. நினைவிற்கு வந்ததை இட்டு நிரப்புகிறேன்.)

இவ்வாறு யோசித்துக் கொண்டே பராக்கு பார்த்துக் கொண்டிருக்கையில் சேலத்தினுள் நுழைந்தது. முதல் ஆளாக அந்த அந்த டீசர்ட்-ஜீன்ஸ் இளைஞன் இறங்கினான். ஒரு ஆளைப் பார்த்து கணிக்கும் முயற்சியில் அடுத்த தோல்வி. சிறிது நேரம் உண்டு என நடத்துனர் சொன்னதும் கழிப்பறையை தேடத் தொடங்கினேன். பேருந்து புறப்பட்டு விடுமோ என வேகமாக சென்றேன். நுழைய 3 ரூபா கேட்டான். பிஸ்ஸுக்கு இது ரொம்ப அதிகம் தான் என நினைத்துக் கொண்டே கொடுத்து விட்டு போய் வெளியேறும் போது ஒருத்தன் தலைய சொறிந்தான். வெளியே கொடுத்தாகிவிட்டது என்றதற்கு தான் கழுவுபவன் எனக் கூறினான்.  அந்த புண்ணியவானுக்கு ஒரு இரண்டு ரூபாய் அழுதுவிட்டு வந்தேன். இத்தனைக்கும் நடுவில் வந்த விஷயம் ஆகவில்லை என்பது தான் வயிற்றெரிச்சல். வருது ஆன வரலைன்னு போக்கு காட்டிவிட்டு 5 ரூபா நட்டம் தான் மிச்சம். பெங்களூரில் என்னவெல்லாம் வேட்டு வைக்க இருக்கோ. பெங்களூர் செல்லும்வரை தண்ணீர் குடிக்கக் கூடாதென முடிவெடுத்துக் கொண்டேன்.

அடுத்து தர்மபுரியில் ஒருவன் கையில் ஜீன்ஸ் ஜாக்கெட்டுடன் நின்றிருந்தான். இவன் ஏறுவான் என நினைத்தேன். ஓசூரில் மாலை நேரக் குளிருக்கு அது உதவும் என்றெல்லாம் கணக்கு போட அவன் வாளாவிருந்தான். ச்சே, வெத்து வேட்டு என நினைத்துக் கொண்டே க்ரீம் பிஸ்கட் சாப்பிடத் தொடங்கினேன். பக்கத்தில் பாக்கெட்டில் இருந்து தூள் போல ஒன்றை கொட்டி கசக்கிக் கொண்டிருந்தான். புகையிலையோ என்னவோ போல, கணேஷ் போன்ற பிராண்டுகள்(Brands) சொல்வார்களே, அது தான். கான்சரை கையில் கசக்கி வாயில் வைத்துக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்ததும் என் உதட்டில் ஊட்டச் சத்துக் குறைபாட்டினால் வந்த குழிப் புண்ணை பார்த்து ’கஞ்சா அடிப்பயா’ எனக் கொடைக்கானலில் கேட்டவன் நினைவிற்கு வந்தான்.

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து வெளிவரும் இடத்தருகில் ஒரு பிச்சைக்காரன் ஒரு சிறுவனைக் கிடத்தி சாட்டையால் தரையை அடித்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். வருகிறவர்களை கபடி வீரனின் லாவகத்துடன் மடக்கி பிச்சை எடுத்தான். இவனின் வேகத்தைக் கண்டு ரக்பி விளையாட்டைப் போல முட்டித் தூக்கிவிடுவானோ என்று பிச்சை போட்டவர் ஏராளம். இப்படி ஒருத்தனை மடக்கிய பொழுது விரலை ஆட்டி மிரட்டியபடியே ஒருவன் சென்றான். இன்னொருவன் ட்ராஃபிக் போலீசைப் பார்த்த லாவகத்துடன் சுத்தி விலகிச் சென்றான். இத்தனைக்கும் நடுவில் வெயில் சுரீரென உரைக்காமல் அந்தச் சிறுவன் எப்படி உறங்குகின்றான் எனத் தெரியவில்லை.

கடைசி சீட்டில் ஒருவனிடம் சீட்டு கொடுக்க நடத்துனர் சென்றார். அவன் ‘டிக்கட் வச்சிருக்கேன்’ எனக் கூற சொல்ல தகராறாகி விட்டது. பின்னர் தான் தெரிந்தது ஐயா ’உண்மை விளம்பி’யை அளவுக்கு அதிகமாக உட்கொண்டிருக்கிறார் என்றும், இதற்கு முன்பு பயணித்த வண்டியில் சீட்டு வாங்கியிருக்கிறார் என்பதும். முடிவில் அவன் தலையில் ’சொத்’தென அடித்து காசைப் பிடுங்கி சீட்டும் சில்லறையும் கொடுத்தார், நடத்துனர்.

ஓசூரை நெருங்க நெருங்க போகும் வழியிலெல்லாம் மிகவும் சுத்தமாகவும் பராமரிக்கப் பட்டதாகவும் இருந்தது. சாலை நடுவெங்கும் அலங்காரத்திற்கு வளர்க்கப்பட்ட செடிகளின் மேற்பரப்பு வெட்டப்பட்டு சாப்பிடும் மேசை போல அழகாக இருந்தது. சாலையோரங்களில் 'Cafe day' தென்பட ஆரம்பித்தது.

ஓசூர் வந்த பொழுது மாலையாகிவிட்டிருந்தது. இறங்கியதும் ஒரு பஸ் பெங்களுருக்கு கிடைத்தது. ஓசூர் தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கிறது. ஒரு கலப்படக் கலாச்சாரத்தை பார்க்க இயலுகிறது. ’மஞ்சநாதா’வில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘அதூர்ஸ்’ ரிலீஸ். பட போஸ்டர்கள் பார்த்த வரையில் ஒன்றிரண்டு தமிழும், மற்ற படி அதிகப்படியாக தெலுங்கு படங்களே ஓடிக்கொண்டிருந்தன. கன்னட படம் மருந்துக்குக் கூட இல்லை. இந்தக் குழப்பம் தீருவதற்குள் கர்நாடக எல்லைக்குள் நுழைந்தது வண்டி.

அங்கே எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மனஹல்லி எல்லாம் தாண்டி மடிவாலாவில் இறங்க வேண்டியிருந்தது.  ஹல்லி என்பது நம் ஊர் பட்டி போன்ற ஒட்டு போல. பொம்மனஹல்லி, பிலஹல்லி, இன்னபிற ஹல்லிகளையும் உள்ளடக்கி இருக்கிறது பெங்களூர். இப்படி இன்னபிற பகுதிகளை கடந்து மடிவாலாவில் பெங்களூர் மண்ணில் கால் வைத்த பொழுது மதுரை மைந்தர்கள் சென்னையில் வழக்கமாக இறங்கும் போது ஏற்படும் அதிர்வு ஏற்படாததால் ஏமாற்றம். இந்த ஊரில் ரவுடிகள் இல்லை போலும்.
 - பயணங்கள் தொடர்ந்தது. இது?
----------------------------------------------------------------------------------------------------------------------
இதை எழுதவே பல வாரமாகிவிட்டது. இதற்கு மேல் பெங்களூரில் நடந்தது, பிறகு சென்னை சென்றது, மீண்டும் பெங்களுரில் நடந்த சந்தோஷத் தருணங்கள் எல்லாம் இதற்கு வரும் கருத்துக்களைப் பொறுத்து எனக் கூறி வரவேற்பு பெற நான் இளைஞர்களுக்கான எழுத்தாளனா இல்லை பிரபல பதிவரா? இருந்தாலும், நீங்க எவ்வளவு வேகமா கருத்துரைகள் இடுகிறீர்களோ அவ்வளவு வேகமாக அடுத்த பதிவை இது போல் வளவளக்காமலும் இதில் உள்ள ஆயிரக்கணக்கான குறைகளை நூற்றுக்கணக்காக குறைத்தும் வெளியிட உறுதியளிக்கிறேன்.

Comments Posted (21)

சீக்ரம் எழுதுங்க... ப்ரதர்

செம்ம ஃப்ளோ...!

நல்லாத்தான் இருக்கு. அதெப்படி பதிவு நடு ராத்திரியிலெ போட்டாலும் உடனே பின்னூட்டங்கள் போடுகிறார்கள். பதிவுலகத்திலே தூங்கவே மாட்டாங்களோ?

@அண்ணாமலையான்
எழுதிருவோம்! :)

@ராஜு
நன்றிண்ணே!

@டாக்டர் கந்தசாமி
நீங்க எந்த நேரத்தில் கண்ண வச்சீங்களோ, அடுத்து 10 மணிநேரம் தாண்டியும் ஒரு பின்னூட்டம் வரல. நல்லா இருங்க சாமி!

தமிழ்ப் படம் பார்த்ததில் இருந்து டாக்டர் என்ற வார்த்தை ‘டோக்டர்’ எனதான் வாயில் வருகிறது

எழுத்து நடை அருமை....பப்பு..

சீக்கிரம் அடுத்த பார்ட்ம் எழுதுங்க...

//பெங்களூர் சென்று நாலு பெண்களையாவது பார்த்து வரலாம் என கிளம்பிவிட்டேன்//

என் இனமடா நீ...........

வோட்டு போடலாம்னு பாத்தா...இன்னும் தமிழிஷ்ல இணைக்கவே இல்லை...

தமிழ்மணம் பட்டையும் இணைக்கவில்லை...


என்னப்பா வியாபாரம் பாக்குற....?

தமிழிஸில் ரெண்டு ஓட்டு கூட இருந்ததே. என்ன ஆச்சு? நாசமாப் போச்சு!

பப்பு நோ டென்ஷன்...

தமிழிஷ்லதான் ஏதோ பிராப்ளம்னு நினைக்கறேன்..இப்போ ஓக்கே..


ஓட்டு போட்டாச்சு :)

nice blog

travel blog superba pogudhu... awaiting the next release.. awaiting the bangalore section...

பெங்களூரில் நடந்த சந்தோஷத் தருணங்கள் - சரக்கா . . அப்படி இருந்தா, இங்க பெங்களூர்ல வந்து சரக்கடிக்கிற குஷியே தனி பப்பு . .இந்தக் குளிர்ல அது சூடா உள்ள இறங்கும் . . :-) . . ஒரு வேளை அது சரக்கா இல்லாம வேற எதாவதா இருந்தா, . . இங்க பெங்களூர்ல எது செஞ்சாலும் நல்ல இருக்கும் . .:-) அனுபவங்களை சீக்கிரம் எழுதவும் . . :-)

@கருந்தேள்
ஃப்ரண்ட்ஸோட சுத்துனது, பொண்ணுகளப் பார்த்தது, என் அண்ணனோட குட்டி பொண்ணைப் பார்த்தது போன்ற விஷயங்கள் தான். நீங்க விவகாரமா சிந்திக்கிறீங்களே!

@கிஷோர் எங்கயுமே கண்ணுல படலயே. யாராவது இவர் எங்கேன்னு சொல்ல முடியுமா?

@என் பாசத்துக்குரிய ஃபாலோயர்ஸ் வழக்கமா முறை செய்யுறவங்களக் கூட காண்லயே? ஒரு மாசம் பதிவிடலைன்னா பதிவ காத்தாட விட்டுடறீங்களே!

எழுத்து நடை நல்லா இருக்கு பப்பு.. சின்ன விஷயம்.. கொஞ்சம் ட்ரிம் பண்ணலாம்.. ஒரு சில விஷயங்கள் சொல்லாமையே விட்டுருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும்.

//@டாக்டர் கந்தசாமி
நீங்க எந்த நேரத்தில் கண்ண வச்சீங்களோ, அடுத்து 10 மணிநேரம் தாண்டியும் ஒரு பின்னூட்டம் வரல. நல்லா இருங்க சாமி!//

/pappu said...
தமிழிஸில் ரெண்டு ஓட்டு கூட இருந்ததே. என்ன ஆச்சு? நாசமாப் போச்சு!//

//
@என் பாசத்துக்குரிய ஃபாலோயர்ஸ் வழக்கமா முறை செய்யுறவங்களக் கூட காண்லயே? ஒரு மாசம் பதிவிடலைன்னா பதிவ காத்தாட விட்டுடறீங்களே!//

சிரிச்சுகிட்டே இருக்கேன்..:-)))))

டியர் கானா பானா,
என் புலம்பலப் பார்த்தா சிரிப்பா? நீங்களும் என்னை காமெடி பீஸாக்கிவிட்டீர்களே?
பதிவை ரசிக்கச் சொன்னால், கமெண்டை படித்து கமெண்டுகிறீர்கள்!
அநியாயம்... பதிவஹத்தி தோஷம் உங்களை பீடிக்கும்!

எங்க ஊரைப் பத்தி.. சரியா சொல்லாம.. மலையை பார்த்தேன்.. கோட்டையை பார்த்தேன்னு சொல்லிகிட்டு...

தமிழிஷ்-ல.. மைனஸ் ஓட்டு குத்திட்டேன்.

===

எங்க ஊரு ரோடு எப்படி இருந்தது.. பப்பு??

@ஹாலி பாலி
நாமக்கல் ரொம்ப போகல... பரவாயில்லங்க... உங்க ஊரு அவ்வளவுதான் தேறும். அந்தக் கோட்டையோட எஸ்.டிடி சொல்லுங்களேன்....

எங்கம்மாவுக்கு அந்த ஊர் ஆஞ்சநேயர் கோவில் போக ரொம்ப ஆசை!

கொஞ்சம் நாள் ஊர்ல இல்ல அதான்.. இப்போ வந்துட்டோம்ல.. நல்லா தான் ஊருக்கு போயிருக்க பப்பு நீ ..

கொஞ்சம் பிஸி அப்புறம் சென்னை விசிட்டுன்னு சரியா வர முடியல பப்பு.

பதிவு கலக்கல். அருமையான ப்ளோ. கண்டினியூ பப்பு.

@கிஷோர்
வினோத் மேல பிராது குடுக்குறேன்!

@ஆதவன்
அட, இந்தியா வந்திருந்தீங்களா? அதான் பெங்களூரில க்ளைமேட்லாம் நல்லா இருந்தது! :)

பப்பு ரொம்ப அழகாக எழுதினீர்கள்,நல்ல வர்ணனை உங்களுக்கு கைகூடி வருகிறது,வித்தியாசமான சிறுகதைகளை முயற்சி செய்யுங்கள்.
=====
ஐந்து ரூபாய் குடுத்து ஒன்னுக்கு போனது தான் கொஞ்சம் ஒவராயிருக்கு!

=====

ஐந்து ரூபாய் குடுத்து ஒன்னுக்கு போனது தான் கொஞ்சம் ஒவராயிருக்கு!
///

அய்யோ, அஞ்சு குடுத்தும் போகாதது தான் பிரச்சனையே! :(

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!