பதின்மம்

Filed under , , by Prabhu on 2/24/2010 11:22:00 AM

17

பதின்ம வயதுகள் - டீன் ஏஜ்.

சொல்லும்போதே பெருமூச்சு தான் வருகிறது. அந்தப் பருவம் முடிந்து ஒன்பதாவது மாதம். எனக்கென்னவோ டீன் - ஏஜ் முடிந்ததும் ஒரு மாதிரி உடைந்துவிட்டேன். சின்னப் பையன் என்ற சாக்கில் அனுபவித்த சலுகைகள் கிடையாது. ஏன் என்னை நானே இன்னும் வயசு இருக்கு, என்ன அவசரம் என்று சமாதானப்படுத்திக் கொள்ள முடியாது. என்ன தான் என் அப்பா நான் செய்யும் விஷயங்களுக்கு, ‘சின்னப்பையன் தானே’ என்றாலும், உலகம் அவ்வாறு பார்க்கப் போவதில்லை. ம்ஹூம்.

டீன் - ஏஜின் அருமை புரியாதவர்கள் பல. இழந்தபிறகு வருத்தப்படுவர். நான் நிகழும் போதே அதன் அருமை புரிந்து கொண்டேன். ஆனால் சரியாக பயன்படுத்தவில்லை. நான் தெரிந்தே இழந்துவிட்ட சில விஷயங்கள் பல. இன்னும்  50-100 புத்தகங்கள் உபயோகமானவையாக படித்திருக்க வேண்டும் அந்த வயதிற்குள். இன்னும் அதிக அளவில் பலவிதமான இசை தொகுப்புகளைக் கேட்டிருக்க வேண்டும். விளையாண்டிருக்க வேண்டும். எட்டாம் வகுப்பில் அறைகுறையாக பயின்ற டேபிள் டென்னிஸைத் தொடர்ந்திருக்க வேண்டும். நன்றாக அடுத்தவரிடம் பேசும் கலையை கற்றிருக்க வேண்டும். இது போல இன்னும் பல எனக்கு வேண்டியிருக்க, நான் மட்டும் வருடங்களுக்கு வேண்டாதவனாகிப் போய் விட்டேன். அவை என்னை விட்டு உருண்டோடி விட்டன.

அட, இழந்ததை ஏன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். நான் பெற்றதும் பலவே. அனுபவித்த தருணங்களின் அருமையும் இனிப்பவையே. 

பதிமூன்றாம் வயதில் தவளையின் இனப்பெருக்க உத்தியைப் படித்த பொழுது ‘சைக்கிள் பம்ப்’ போன்ற அதன் முறையை கிண்டல் செய்து சிரித்தது நினைவில் இன்னும் இருப்பது என் ’அபார’ ஞாபக சக்திக்கு ஆச்சரியம்தான். 
முதன்முதலாக ஆங்கில புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து, Nancy Drew, Hardy Boys என ஓடிக் கொண்டிருந்த வருடம்.

ஒன்பதாம் வகுப்பில் எதேச்சையாக சொல்லிய வார்த்தையில் இருந்து ‘ப்ரீத்தி’ என்ற பெயரை வைத்து என்னை நண்பர்கள் ஓட்டியதும், நிஜமாலுமே அப்படி ஒருத்தி வேறொரு வகுப்பில் இருந்ததும் நினைவில் இருக்கிறது. அதன் பிறகு அந்த பெண் எந்த ஆசிரியரையாவது காண எங்கள் வகுப்பிற்கு வந்தால் என் பெயரைக் கூவி நாராசமாக்குவார்கள். என்னவோ, கடைசி வரை அந்தப் பெண்ணுக்கு நான் ஒருவன் இருந்ததே தெரியாது. நான் கவலைப்பட்டதில்லை. நான் அப்ப எல்லாம் சைட் அடிச்சதில்லைங்கிறது உண்மைன்னாலும் நம்பவா போறீங்க?

ஒன்பதாம் வகுப்பு சரித்திர வகுப்பின் போது கூரையில் இரண்டு அணில்களின் சில்மிஷம் கண்டு சிரித்து மாட்டிய பொழுது, எழுந்து பேந்த பேந்த முழித்தோம். அப்பொழுது என்னுடன் திவாகர் என்று ஒரு நண்பன் உண்டு. எங்கள் தீம் சாங் ஊமை விழிகளில் வரும் ஒப்பனிங் பாடலான ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ தான். இது இப்படியானதுக்கு ஒரு பெரும் காரணமொன்றுமில்லை. அந்தப் படத்தின் முன்பாதி கதை நான் அதுவரை பார்த்ததே இல்லாத காரணத்தால் அதைக் கூறுகையில் அந்த பாட்டுக்கு ’நங்கன நங்கன’ ஒரு வித்தியாசமான பிண்ணனி இசை கொடுத்துக் கொண்டே பாடுவான். அதனாலே பலமுறை வகுப்பில் அந்த சத்தத்தைக் குடுத்து சிரித்து மாட்டியிருக்கிறோம்.


பத்தாம் வகுப்பில் கவலையின்றி இருந்தது மார்க்கில் பளிச்சிட, அந்த மதிப்பெண்களை நான் கேரளா சுற்றுலாவை சுசீந்திரத்தில் துவக்கும் சமயத்தில் தொலைபேசியில் கேட்டுக் கொண்டேன். பிறகு சுற்றுலா முடிந்து வந்து நிதானமாக பள்ளி தேட முற்பட்டேன். கால தாமதம் காரணமாக பெரிய பள்ளிகளில் கிடைக்காத போதும் வருத்தப் படவில்லை. காலத்துடன் வந்திருந்தாலும் என் மதிப்பென்களுக்கு கிடைத்திருக்கப் போவதில்லை.

எனக்கு எட்டாம் முதல் பத்தாம் வகுப்பு வரை வகுப்பில், ‘பருப்பு’ என்பது பட்டப் பெயர். அப்பவே நான் பெரிய பருப்பு எனத் தெரிந்திருக்கிறது என்று பொய் சொல்லாமல் சொல்ல வேண்டுமென்றால், என் பெயரை வேகமாக சொன்னால் ‘பருப்பு’ என திரிகிறது என்று புது இலக்கண விதியை கண்டுபிடிக்க என் பெயர் பயன்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் அசிங்கமான பெயர்களை நான் இன்னும் யாருடன் பகிர்ந்ததில்லை. போவதில்லை.

பதினோராம் வகுப்பில் புதிதாக சேர்ந்த பள்ளியில் அப்போழுதே பிரசவித்திருந்த எலியைக் காணும் அரிய சந்தர்ப்பம். ரோமம் ஏதும் இன்றி அம்மா தேங்காய் கொழுக்கட்டை செய்யும் போது மீந்து போன மாவை குட்டியாக பிடித்து வைத்து வேக வைக்கும் கொழுக்கட்டையை போன்று இருந்தna மூன்று குட்டிகளும் . சிறிது ரத்தத்துடன் பிறந்து கிடந்த அவற்றில் ஒன்று இறந்தது, எப்படி என இப்பொழுது நினைவில் இல்லை.

பன்னிரண்டாம் வகுப்பில் முடிந்த பொழுது என் வீட்டிலேயே, அப்பொழுதுதான் தயாநிதி மாறன் அறிமுகப் படுத்திய அகலவரிசை(Broadband)யில் பார்த்து, குறைந்த மதிப்பெண்கள் தான்(76% - ரொம்ப மட்டமில்லை) என்று பார்த்ததும் காரணமின்றி எனக்கு சிரிப்பு. தொலைபேசியில் அதை என் அப்பாவிடம் கூற, அவரும் அதே போல சிரிக்க, நானும் சேர்ந்து சிரித்த விந்தையான தருணம் யாருக்கும் அமைந்திராது.

இதன் பிறகு என் வாழ்க்கையில் நான் எடுத்த முக்கிய, நல்ல முடிவு, அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தது. உயிரியலுக்கு விண்ணப்பம் போட்டு கிடைத்த பிறகு இயற்பியலுக்கும் விண்ணப்பம் போட்டு இயற்பியலில் சேர்ந்தேன். பிறகு 10 நாளுக்கு பிறகு உயிர்தொழில்நுட்பவியலின் ஆர்வம் காரணமாக உயிரியலுக்குத் தாவினேன். அது மட்டுமல்ல இயற்பியல் படித்தால் நமக்கு வெவ்வேறு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எம்.பி.ஏ தவிர பிற வாய்ப்புகள் எதுவும் இருந்து திசை மாறவிடக் கூடாது என்றும் உயிரியல் படித்தால் எம்.பி.ஏ படிக்க முடியாதா என்றும் தெனாவட்டுடன் உயிரியல் எடுத்தேன். அதன் பிறகு என்னைப் பார்தது இந்தியாவிற்கு ஒரு ஆறு, ஏழு விஞ்ஞானிகள்(அ) இழப்பாகிவிட்டது.

கல்லூரி வாழ்க்கையில் அனுபவித்தற்கே தனிப் பதிவு போடலாம். ஷான்சி க்ளப்(இப்பொழுது இல்லை), கல் பெஞ்சுகள் [இதற்கும் அதே கதி :( ] , மரத்தடி வட்ட சுவர், காண்டின், டி.பி.எம் நூலகம், நிறைய மரங்கள், மாணவர்-ஆசிரியர் நட்புறவில் ஒரு வித்தியாசமான துறை என அனுபவித்தது ஏராளம், தாராளம். நான் கல்லூரியில் சேர்ந்த பொழுது ஹாரி பாட்டரில் வரும் பள்ளி போல் புரியாத பாதைகளாக காடு போல இருக்கும். இதை சிறிது அழித்த கோபம் இன்னும் எங்களுக்கு அபரிமிதமாக உண்டு. இப்பொழுது இந்தக் கல்லூரியில், என் துறையில் தலைவராக இருந்தவரை இவ்வளவு சாதாரணமாக, பேசி, கிண்டல் செய்து சிரிக்கும் அளவுக்கு ப்ளாக்கர் ஆக்கியிருக்கிறது. அவர் தருமி(link).

அதன் பிறகு கல்லூரியில் ஸ்ட்ரைக் நடந்து அதிலும் நாங்கள் கவலைப் படாமல், கடலையும் கூத்துமாக நன்றாக பொழுது கடத்தினோம். வருடத்திற்கு ஒரு பெண்ணாக கடமையாக சைட் அடித்தோம். நாங்கள் எல்லோரும் ஏக பத்தினி விரதனோட முன்னோடிகள். ஒரு பெண்ணை குறித்துக் கொண்டு அவளை மட்டுமே சைட் அடிப்போம். கடைசி வரைக்கும் அவளிடம் சரியாக பேசவில்லை என்ற வருத்தத்தைத் தவிர ஹார்மோன் விளையாட்டுகள் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் நகக்கடிப்பு வெற்றியடையும் இந்திய கிரிக்கெட் போல சுவாரஸ்யமாகவே இருந்தது. 

இவ்வளவையும் சொல்லிவிட்டு அஜய்(link) பற்றி சொல்லவில்லை என்றால் சாமி கண்ணைக் குத்தாவிட்டாலும் அவன் குமட்டில் குத்துவான் என்பதால் சொல்லிவிடுகிறேன். மேற்கூறிய அனைத்து சமயங்களிலும் என் உற்ற தோழன். என் குடும்பத்திலொருவன் போல என்றெல்லாம் ஓவராக சொன்னால் அவனுக்கு அரிப்பு ஏற்படுமென்ற காரணத்தால் மேற்கொண்டு விளக்கம் வேண்டியதில்லை.

மூன்றாம் ஆண்டின் இறுதியில் அஜயால் ப்ளாக்கர் எனக்கு அறிமுகமாகிய ஒரே வாரத்தில் எழுத நுழைந்து விட, அந்த ப்ளாக்கை சரியாக எனது பிறந்த நாளுக்கு சில நாட்கள் முன்பு ப்ளாக்கர் பிடுங்கிவிட்டது. எனது டீன் - ஏஜ் முடிந்தது, ப்ளாக்கரின் மூடு விழாவுடன் தான். அது நடந்து இப்பொழுது ஒன்பது மாதமாகி இதை கிஷோரின்(link) அழைப்பிற்கிணங்கி எழுதிக் கொண்டிருக்கிறேன். பொதுவாக எனக்கு தொடர் பதிவுகளில் நம்பிக்கை இல்லை. இதை கிஷோருக்காகவே எழுதுகிறேன். அப்புறம், சூர்யாவுக்கு(link) ஒரு தொடர் பதிவு கடன்பட்டிருப்பதை மறக்கவில்லை என்பதை கூறிக் கொள்கிறேன். யாராவது இதற்கு முன்னர் என்னை தொடர் பதிவிற்கு கூப்பிட்டு நான் எழுதவில்லை என்றால் மன்னிக்கவும், ஒருவேளை அந்த தலைப்பில் நான் வறண்ட கருத்துக்களுடையவனாக இருந்திருக்கலாம்

ஐயா, யாரு இந்த மாதிரி தொடர் பதிவுகளைத் தொவக்குபவர்?நான் யாரையும் அழைக்கவில்லை. ஒரு அளவுக்கு மேல் இதே மாதிரி சரக்கை எல்லாரிடமும் படித்தால் சலிப்பு தட்டிவிடாது?

Comments Posted (17)

நல்ல வாசிப்பனுபவம்..!

நன்றி :)

இது ஒரு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல
பகிர்வு..

நல்லா எழுதிருக்கீங்க.. :)

அந்தநாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே.....!
இந்தநாள் அன்று போல் இல்லையே அது ஏன் ஏன் ஏன் நண்பனே..?
நிகழ்ச்சிகளை நன்றாக தொகுத்துள்ளீர்கள் பப்பு..!

@கிஷோர்
ஏன் முக்குறீங்க? வயிறு சரியில்லயா?

@வெற்றி
நன்றி

@அறிவு
பாட்டெல்லாம் பாடிட்டீங்க

உம் எழுத்து நல்லா இருக்குறது. வாழ்த்துக்கள்.

இவ்ளோ ஸ்பீடா பதிவா..???

ரைட்டு...நடத்து....

இதுல கடைசி லைன்ல சொம்ப வேற தூக்கிட்டு வந்தாடார்ப்பா...நாட்டாம...

//சூர்யாவுக்கு ஒரு தொடர் பதிவு கடன்பட்டிருப்பதை மறக்கவில்லை//

அட ஞாபகம் இருக்கா :))

உன் பதினென்மம் இன்னும் சுவாரஸியமா இருக்க வேணாமா? கலகலப்பா நிறைய எதிர்பார்த்தேன். ஏன்ன இப்ப தான் கடந்து வந்திருக்க. ஆனா எழுத்துகளில் முதிர்ச்சி தெரியுது :)

வாழ்த்துகள்

கலக்குறீங்க.

@கலியுகன்
நன்றி!

@ஆதவன்
வரவர நகைச்சுவை உணர்வே வர மாட்டேங்குது. :(

@ஸ்ரீ
நன்றிங்க!

நல்லா வருவிங்க தம்பி..
நல்லா எழுதியிருக்கிங்க..இன்னுன் கூட கொஞ்சம் எழுதியிருக்கலாம்..

என்ன பப்பு, முதல் ரெண்டு பாராவுல புலவர் எட்டிப் பாக்குறார். ஏன் இவ்ளோ பெருமூச்சு....

”ப்ரீத்தி...........” - உங்களை நேர்ல பார்க்கும் போது எனக்கும் பயன்படும். ;)

நல்ல பதின்ம நினைவுகள் தான்.

ஒரு அளவுக்கு மேல் இதே மாதிரி சரக்கை எல்லாரிடமும் படித்தால் சலிப்பு தட்டிவிடாது? //
அந்த சலிப்பு தோணாத மாதிரி வித்தியாசமா எழுதும் கலை கத்துக்கத் தான் தொடர்பதிவுகளோ?

@வினோத்

இன்னுமா? இதுக்கு மேல என்னத்த எழுத? எனக்கே படிக்கப் பிடிக்காம போய்விடும்

@விக்னேஷ்வரி
விக்னேஷ்வரின்னு பேர் வச்சிருக்கவங்கள எல்லாம் நான் நேரில பாக்குறதில்லங்க..

அட போங்கப்பா... தொடர்பதிவாம்./... மூணு பேருகிட்ட படிச்சாலே மண்ட காயும் போல...

நல்ல பதிவு... படிக்கும் அனைவருக்கும் பதின்ம நினைவுகளை....
ஒரே ஒரு கேள்வி... உங்க தங்கமணி பேரு ப்ரீத்தியா? (ஏதோ நம்மால ஆன ஒரு நல்ல காரியம்)

@அப்பாவி

தங்கமணியா? அய்யோ... இன்னும் 8 வருஷமாவது ஆகனும். சின்னப் பையன் நான்.

எட்டு வருசமா? அட கடவுளே... கொழந்தைங்க எல்லாம் எழுத வந்தாச்சா? (எழுத்தில் இருந்த முதிர்ச்சி பார்த்து வயசாசோணு நெனைச்சுட்டேன்...நல்லா எழுதறீங்க)

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!