இரு அவளுக்கு ஒரு அவன்

Filed under , , by Prabhu on 9/23/2009 12:32:00 AM

19

அவர்கள் இருவரும் பிங் பாங் ஆடிக் கொண்டிருந்தார்கள். அது அவர்கள் ஊரின் விளையாட்டு அரங்கம். அந்த காலியான கூடத்தில் அவர்கள் பந்தை அடிக்கும் சப்தம் மட்டும் பேசிக் கொண்டிருந்தது.
டொக்! டொக்!
"அவகிட்ட பேசுறத பத்தி என்ன நினைக்கிற?", ஷான் என்ற ஷண்முக வேல்.
டொக்!
"அப்படி வா. எவ கிட்ட?"
டொக்!
"ம்ச்ச்... உன்கிட்ட யாரப் பத்தி பேச போறேன்? எல்லாம் அன்ஷு கிட்டதான்."
டொக்!
"நீ அதப் பத்தி மட்டும் என்கிட்ட பேசாதடா! எவ்வளவு காலமா இதப்பத்தி பேசிக்கிட்டே இருக்க? அவகிட்ட போய் பேசுடான்னா, அவகிட்ட பேசுறதப் பத்தியே மணிகணக்கா பேசிக்கிட்டிருக்க!"
டொக்!
.........
டொக்!
"என்ன?"
டொக்!
"ம்ம்..." என்றபடியே ஷான் முனையில் பட்டு தெறிக்க இருந்த பந்தை தூக்கி கொடுக்க அஜய், "சிக்கிட்ட. smashடா!" என ஓங்கி அடிக்க, பந்து ஷானின் கையை தாண்டி போனது.
"Fuck!"
"விடுடா. ஆனால் நாளைக்கு அந்த வாய்ப்ப விட்டுடாத!", என்றான் அவனது நீண்ட கால நண்பனும் சக ஆராய்ச்சியாளனுமான அஜய்.
டேபிளின் ஓரத்தில் இருந்த பட்டனை தட்ட, டேபிள் தனது இயந்திர குரலில் அஜயின் வெற்றியை உறுதிபடுத்தியது.
"ஒரு Rally போடுவோமா?"
"இன்னைக்கு இது போதும்" என்றபடியே முழங்கையில் இருந்து உள்ளங்கை வரை வந்து முடியும் அந்த வினோத சாதனத்தின் புறங்கை பகுதியில் உள்ள அஜய் எலக்ட்ரோடைத் தட்ட கையில் இருந்த 3-D sim Bat மறைந்தது. அப்படியே டேபிளையும் தட்ட, அது ஹாலோகிராபிக் டேபிள், மறுப்பு சொல்லாமல் மென்மையாக மறைந்தது.

-------------------------------------------------------------------------------------------------
வியர்வை துடைத்துக் கொண்டே வெளியே வந்தனர். நிழற்குடையின் கீழ் வந்து "ஹோவோ" என்ற பட்டனை அஜய் அழுத்த, "டேய், எதுக்குடா ஹோவோல போகனும்? வாடகைய ஏத்தி சொல்வான்டா. வெட்டி செலவு."
"களைப்பா இருக்குடா, என்னால கூட்டு உந்துல எல்லாம் ஏறி முன்னூறு பேரோட போராட முடியாது?
"அப்போ என்னால காசெல்லாம் கொடுக்க முடியாது. நீயே கொடுத்துக்கோ"
"மவனே, ராத்திரி இன்னொரு புரோட்டோ பிஸ்கட்வேணும்னு கேக்குறப்ப இருக்குடா" என கறுவிக் கொண்டிருக்கும் போது, ஒரு ஹோவோ கார் வந்து மிதந்தது. ஹோவோ காரில் ஏறி அமர்ந்து, "புறநகர் 67ம் குடியிருப்பு, 47ம் கட்டிடம், 23ம் மாடி, எவ்ளோ ஆகும்". "300ரூபா ஆகும் சார்"
"என்னய்யா இது அநியாயமா இருக்கு. வரும் போது 150க்கு தானயா வந்தோம்"
"என்ன சார் சொல்றீங்க! கூட்டு உந்து நிலையத்துக்கே100 ரூபா வாங்குறோம்."
"150னாதான் வருவோம்"
"சார் ஹைட்ரஜன் கேட்ரிட்ஜ் விக்கிற விலையில........ 250 ரூபா கொடுங்க"
"150 தாங்க. டேய் ஷான், இறங்குடா. வேற ஹோவோ பாத்துக்கலாம்"
இறங்க முற்பட, "200 ரூபா சார்"
"150ரூபா"
"சரிங்க சார், உட்காருங்க"

-------------------------------------------------------------------------------------------------
ஹோவோவில் ஏறி அமர்ந்ததும் அது மெல்ல காற்றில் ஏறி விரைந்தது.
"இன்னைக்கு எப்போ ராமசாமியின் ஆராய்ச்சி நிலையத்துக்கு போற? ராமசாமி தான? இல்ல ரங்கசாமியா?", என்றான் அஜய்.
"ரங்கநாதன் டா. 5 மணிக்கு."

"எனக்கும் ஆராய்ச்சி நிலையத்துல வேலை இருக்கு. ஒண்ணா போகலாம்.... சரி...கூட்டு உந்துல போகலாம். நீயே காசு போடு, நான் ஏன்னு கேக்கல. என் மாடுயுல்ல கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சு குடுக்கலைன்னா ஐன்ஸ்டீன் கொன்னுடுவான்."

"அடுத்தவன் காசு போட்டா குளிருமே! சரி போடறேன். ஏன்டா அந்த ஆள ஐன்ஸ்டீன்னு கூப்பிடுறீங்க?"

"ஐன்ஸ்டீன்னா அந்த ஆளு அறிவாளின்னு நெனச்சயா? அந்த ஆளு முடி ஐன்ஸ்டீன் மாதிரி நட்டுக்கிட்டு நிக்கும், அதான். நாங்க தான் எல்லா வேலையும் பண்ணுவோம். அந்த ஆளு பேர போட்டுக்குவான்"

நகைத்த ஷான், "இப்போ எதுல ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கீங்க?"

"நவீன மிண்ணனுவியல எப்படி உயிர் தொழில்நுட்பவியலிலுக்கு ஏற்றாற் போல மாற்றிக் கொடுக்கலாம்னு ஆராய்ச்சி"

"டேய், ஏன் அரசியல்வாதிகள் சொல்லுற மாதிரி சொல்லுற? நானும் அறிவியல் மாணவன் தானடா"

"Nanotech ஐ மனிதனுக்குள் புகுத்த முடியும் என்ற கணிப்பு பொய்யா போனதால, அதிலும் சிறிய picotech உபயோகப்படுத்தி picobotsஐ மனிதனிக்குள் infuse செய்தால், உயிர்வேதியியல் மாற்றங்களை கத்தியின்றி, ரத்தமின்றி, க்ளோரோஃபார்ம் யத்தனங்கள் இன்றி, நுணுக்கமான அளவில காட்டும். இது ஆதார உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை ஆராய்ச்சி செய்ய உதவும்"

"முடிச்சிட்டயா, இப்போ இதனால என்ன சொல்ல வர்றீங்க?"

"உனக்கு கோபம், காதல், பசி, மகிழ்ச்சி, பிழைக்கும் மனப்பான்மை ஆகியவை ஆதார உணர்ச்சிகளை ஆராய முடிவதோடு, ஏதேனும் வெளிப்பொருட்கள் உடலில் நுழைந்தால் மூளைக்கு தெரிவதற்கு முன் நமக்கு தெரியும்"
"ஓஹோ"

--------------------------------------------------------------------------------------------------
வீடு. நுரை பொங்கும் காப்பியுடன் மேஜையில அமர்ந்த அஜய், "எந்நேரமும் ஏதாவது சிக்கலை கிறுக்கித் தீர்த்து கொண்டிருக்கிறாயே, ஏன்?"
நிமிராமல், "ஆராய்ச்சியின் இறுதி கட்டம். சாவகாசத்துக்கு நேரமில்லை." என்றான் ஷான்.

"உனக்கு ஓய்வு தேவைப்படுது."

"நீ டாக்டரா?"

"உன் கண்ணைச் சுற்றி இருக்கும் கருவளையங்களைப் படிக்க டாக்டராக இருக்க வேண்டிய அவசியமில்லை. காபி வேண்டுமா? இல்லை சில்லுன்னு ஏதாவது குடிக்கறாயா? குடிச்சிட்டு வேற ஏதாவது பண்ணு. இதுல முடங்கிடாத."

"சரி. ஆங்.. டிஜிலைப்ரரிக்கு போகலாம். ரிலேட்டிவிட்டி டிஜிபுத்தகம் ஒன்றை ரெனுவல் செய்யனும்"

"அதற்கு மூன்று நாட்கள் இருக்கிறதே.", என்றான் சந்தேகப் பார்வையோடு.

"முன்னதாக முடித்துக் கொள்வது நல்லதுதானே. இனி சிறிது காலத்திற்கு இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை."

"இன்று வியாழக்கிழமை"

"அதனால்?"

, நீ யாரென எனக்குத் தெரியும். என்னைப் பற்றி உனக்குத் தெரியும்.", என்று சிரித்துக் கொண்டே அஜய் சொன்னான்.

உதட்டோர சிரிப்புடன் முறுவலுடன், "சரி, காபி எடு போ!", பக்கத்தில்ருந்த பந்தை அஜய் மேல் வீசி விரட்டினான் ஷான்.

------------------------------------------------------------------------------------------------
லைப்ரரி அருகில் ஒரு பெட்டிக்க்டை. அஜய் கடையில் ஏதோ வாங்கினான்.
"சிகரெட்?"
"நான் பிடிக்கறதில்லை. உனக்குத் தெரியாதா?",என்றான் ஷான்புருவத்தை சுருக்கியபடி.
அஜய் கண்களை இடுக்கி தலையை சாய்த்து நக்கலாக, "நான் பிடிக்கற மாதிரியா தெரியுறேன். இது சிகரெட் இல்ல. புகை மட்டும் வரும். எலக்ட்ரானிக்ஸ் மாற்று. சென்ற நூற்றாண்டில் புகைப் பழக்க அடிமைகளுக்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டு தோல்வி அடைந்த ஒரு வஸ்து, இந்த நூற்றாண்டின் இளைஞர்களின் ஸ்டைல். History repeats as a parody of pasts."
"அவள் வரும் நேரம். அந்தக் கருமத்தை அணை!"
"எப்படித் தெரியும்? டெலிபதியில் சொன்னாளா?"
"இல்லை, கடிகாரம் சொல்கிறது"
"இவள் லைப்ரரிக்கு ஏன் வியாழக்கிழைமையே வருகிறாள்?"
"தோஷ பரிகாரம்?"
"வந்துவிட்டாள். போய் பேசிடேன்"
"இல்லை வேணாம். அதற்கு காலம் வரவில்லை."
"காலம் வண்டியில் வருவதில்லை நண்பா. நாம் உண்மையை எதிர்கொள்ளத் தயாராகும் நேரம்தான், சரியான நேரம். போய் பேசு. இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டிருவோம். நூற்றாண்டுகள் கடந்தும் ஆண்கள் கற்றுக்கொள்ளாத வித்தை ஒரு பெண்ணை எதிர்கொண்டு காதலை சொல்வதுதான்."
"இதுதான் இப்பொழுது எனது கேள்வியே. இதற்கு உன் picobot கள் என்ன காரணம் கற்பிக்கிறது? கூட்டுந்து வந்து விட்டது".

------------------------------------------------------------------------------------------------
இருவருக்கும் சீட்டு ஓட்டுநரின் அருகிலிருக்கும் இயந்திரத்துடன் பேசிப் பெற்றுக் கொண்ட பிறகு அஜயின் அருகில் அமர்ந்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கத் துவங்கினான் ஷான்.

பார்வையை வெளியிலிருந்து உள்ளிழுக்காமல் அஜய் பேசத் துவங்கினான், "நீ வெளியே சொன்ன விஷயங்கள் எனக்கு விளங்கவில்லை. எதற்கான விளக்கங்களை நீ எனது கண்டுபிடிப்பகளிடம் கேட்கிறாய்?"

"காதலுக்கான விளக்கத்தை. ஒரு ஆண் ஒருபெண் பின்னால் சுற்றுவதன் சூட்சுமத்தை. "

"சாத்தியமுள்ளது. வயரில்லா செயற்கைக்கோள் தொழில்நுட்பம் என்பதால் ஒருவன் தனது தின அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கவனிக்க இயலுவதால் அவனது ரசாயன வேறுபாடுகளை வைத்து அவன் காதலிக்கிறானா எனக் கண்டுபிடிக்க முடியும்.", நிறுத்தியவன் யோசித்து, "2 சதவீத வாய்ப்புண்டு".

"இல்ல, சில கேள்விகளை எழுப்பி பார். உதாரணத்துக்கு காதல் என்ற கேள்விக்கு விடை அறிந்தால்தானே உன்னால் அது இருக்கா, இல்லையா என தீர்மானம் செய்ய முடியும். காதல் hormonal interplay என நினைக்கிறாயா? அது தப்பான பதிலத்தான் கொடுக்கும். உன் முழுமையடையாத ஆராய்ச்சியை வைத்து முடிவு செய்யாத. அப்ப ஒருத்திய பாத்து வரக்கூடிய செக்ஷுவல் அட்ராக்ஷனயும் இதயும் பிரிக்கக் முடியுமா? அதே ஹார்மோன்கள்தான். காதல phyisicalஆக பாக்காத, அதுல பாதி metaphysical."

"உன் கதைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

"நான் எனக்கும் சில கேள்விகளை வைத்திருக்கிறேன்."

"சபாஷ், நீ க்விஸ் போட்டியே நடத்தலாம்."

"ஷட் அப்"

"நீ cynicஆ? ஒன்றை புரிந்துகொள். நீ கி.மு 5ம் நூற்றாண்டில் துண்டை சுற்றிக் கொண்டு ரோம் தெருக்களில் திரியும் துறவி அல்ல. ஏன் இவ்வளவு cynicalஆக பேசுற? இப்போ அன்ஷு விஷயத்தில உனக்கு என்ன பிரச்சனை?"

"cynical இல்லை. நான் ஏன் பேசனும் என யோசிக்கிறேன். எனக்கு அவள பிடிச்சிருக்கு. அதற்காக பேசனும் என்ற கட்டாயத்தை உருவாக்கிக் கொள்ள் விரும்பவில்லை. நான் பேசுவதால் என்ன புதிதாக கிடைத்து விடப் போகிறதென்று புரியவில்லை. சரி, பார்க்கறேன், பிடித்திருக்கு, பேசுகிறேன், மிஞ்சி போனால் உறவு கொள்கிறேன், பிறகு? நாளை இன்னொருவளைப் பிடித்தால்? இரண்டிற்கும் வித்தியாசம் இருக்குமென்கிறாயா? அதை உணரும் நாள் எனது பயத்தையும் மீறி அவளிடம் பேசுகிறேன். அவளிடம் பேச வேண்டுமென்பது எனது உள் மனதின் நிஜ எண்ணமா அல்லது இந்த சமூகத்தினால் திணிக்கப்பட்ட ஒரு பாவ்லோவ் உணர்ச்சியா என்பதை கண்டறியும்வரை அவளிடம் பேசுவதில் பயன் இருப்பதாக தெரியவில்லை. Man's path and nature is made by the choices he make."

"எனக்கு இப்ப புரிகிறது. My god! My friend is a fuckin existentialist!"

"ஹேய், பகவத் கீதையில் கூட மனிதனின் தேர்வுகள்(choices), செயலின் விளைவுகள் பற்றிப் பேசும் போது எக்ஸிஸ்டென்ஸியலிஸ வாடை அடிக்கிறது. அப்ப நம்ம கிருஷ்ணர் கூட ஒரு existentialist தான். ஆனா நான் அப்படியெல்லாம் இல்லடா. சிம்பிளா, குழப்பமடைய கூடிய சாதாரண இளைஞன்".

"உன்னோட blasphemyக்கு நான் தயாரில்லை. உனக்கு ஆராய்ச்சிக் கூடத்தில் Material physicsல ஆராய்ச்சியா? இல்ல Metaphysicsல ஆராய்ச்சியா?"

"ரெண்டும்தான்", என்றான் ஷான் புன்னைகையோடு.

"நல்லாதானடா இருந்த? ஏன் இப்படி? என்ன ஆராய்ச்சிதான் அது."

அதற்குள் தேசிய ஆராய்ச்சி நிலைய நிறுத்தம் வர, இறங்கிய ஷான், "காலம்தான் பதில் சொல்லும்" , என விஷம புன்னகையோடு அவனது பிரிவிற்கு பிரிந்து செல்ல, அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த அஜய் முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்தான், "காலம்தான் பதில் சொல்லும், *&%$#".
------------------------------------------------------------------------------------------------
இரவு- வீடு. "என்ன தலைவா, ரொம்ப தாமதமா வருகிறீர்கள்? உங்க ஆய்வுக் கூடம் பக்கத்துல இருக்குற பழைய பதிவுகள் காப்பதுக்குள்ள உன் இதயத்த தேடிட்டுவந்தயா? அவளை அழைத்து உன் கைப்பையில வச்சிருக்கயான்னு கேக்கலாம் என இருந்தேன்." , என்ற அஜய் புரோட்டோ ஒன்றை கடித்துக் கொண்டே பாட்டு ஒன்றை ஹோலோவிஷனில் பார்த்துக் கொண்ட்ருந்தான்.

பல்வலி வந்தவன் போல பல்லை கண்பித்துக் கொண்டு, "டேய், புரோட்டோ ஒண்ணு கொடுடா. இன்னைக்கு பசி கொல்லுது. சமையலயும் நீயே பண்ணு. களைப்பா இருக்கு" என்றான் ஷான்.

"ஏன் அய்யா பல மைலுக்கு அப்பால இருந்து வர்றீங்களோ? இம்புட்டு நேரம்?"

ஏதோ ஜோக் கேட்டது போல, "இல்லை, பல வருடங்களுக்கு அப்பால் இருந்து வருகிறேன்" எனக் கூறி சிரித்தான்.

அவனை ஒருமாதிரியாக பார்த்துவிட்டு, "லூசுப் பய" என்பது போல என்னவோ முனகிக் கொண்டே சென்றான்.
----------------------------------------------------------------------------------------------
தட்டு நிறைய உணவை கொட்டிக் கொண்டே, "புரோடோடைப் தயாராகிடுச்சு", என்றான் ஷான்.

"....."

"என்ன? அவ்வளவுதானா?"

"எதுக்கு? கேட்டா ராணுவ ரகசியம்னு சொல்லுவ. எனக்கு தேவையா?"

சிரித்த முகத்துடன்,"சரி. கேளு?"

"உன் ஆராய்ச்சி? என்ன அது?"

"காமிக்ல படிச்சிருப்பயே, டைம் டிராவல்"

"Are u shitting me?"

" இல்ல, நிஜமாகத்தான்."

"எப்படி?"

"காமிக் போல wormhole தான்"

"அது சாத்தியமா. ரொம்ப ஹைபோதெடிகல் இல்ல?"

"ம்ஹூம். ரிலேட்டிவிட்டி தியரில தான் இதுக்கு பதில் இருக்கு. பொதுவா காலத்தை பிரபஞ்சத்துக்கும் பொதுவா, மாற்றமில்லாததா வைத்தே போன நூற்றாண்டு வரைக்கும் கணக்கு பண்ணிக் கொண்டிருந்தோம், ரிலேட்டிவிட்டி அதற்கு ஒரு நூற்றாண்டு முன்பே கண்டுபிடித்திருந்தாலும்..."

"தொழில்நுட்ப விளக்கங்களை விடு".

"சரி. போன நூற்றாண்டுகள் வரை மூன்று பரிமாணங்கள்(dimensions)தான் என எண்ணிக் கொண்டிருந்த போது fractals அதை மாற்றிக் காட்டியது. பிறகு மூன்றுக்கும் மேற்பட்ட பரிமாணங்களை ஏற்றுக் கொண்டபிறகு, காலத்தையும் ஒரு பரிமாணமாக ஏற்று..."

"இன்னும்..."

"பொறு. Spacetime/ time space conitnuum எனக் காலத்தையும் ஸ்பேஸயும் ஒரே பிளேனில் வைத்த கதை குழந்தைக்குக் கூட தெரியும். அதுல கறுப்புத் துளை(black hole), வெள்ளைத் துளை(white hole)யும் உனக்குத் தெரியும்."

"யாரு அந்தக் குழந்தை? நீயா?"

"சரி, ஸ்பேஸும் காலமும் இரண்டறக் கலந்ததாக அனுமானித்துக் கொள். இப்ப புரியுதா?"

" கறுப்பு துளை எதையும் உள்ளிழுக்கும் தன்மைக் கொண்ட ஒரு இடம். ஒளியை கூட விழுங்கும் அரக்கன். வெள்ளை?"

"சரியே. வெள்ளை என்பது கறுப்பு உள்ளிழுத்தவற்றை வெளியிடும் ஒரு துளை. புரியுதா?"

"இதன் மூலமாக பிரபஞ்சத்தின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் நொடியில் பயணம் செய்ய முடியும். ஆனால்?"

"இங்கே புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அது பிரபஞ்சத்தில் நடுவிலான குறுக்குப் பாதை மட்டுமல்ல. Spacetime இழைகளில் ஏற்பட்ட ஒரு பிழை. ஒரு ஓட்டை. அதனால் அது நமக்கு பிரபஞ்சத்தின் ரகசியங்களை எட்டிப் பார்க்கும் சாவித் துவாரம். இங்க குவாண்டம் கம்ப்யூட்டிங் தெரியனும்".

"அய்யோ, ஏன் கெஸ்ட் லெக்சர் மாதிரி கொல்லுற?"

"படம் பாத்திருக்கேல்ல்? இவன் இதை செஞ்சா என்ன ஆகும், இல்ல செய்யலைனா ஆகும் என விதவிதமாக எடுத்திருப்பார்களே? அதுதான் குவாண்டம் கம்ப்யூண்டிங். ஆனால் கொஞ்சம் சிக்கலானது. நீ எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு ரியாலிட்டி உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்ப இங்கே வந்து கொண்டிருக்கும் போது நான் அடிபட இருந்தேன். இப்பொழுது நான் அடிப்பட்டிருந்தால் என்ன ஆகியிருப்பேன், படாததால் என்ன ஆகியிருக்கேன். இதெல்லாம் alternate reality(மாற்று நிகழ் உலகம்) என சொல்லுவோம். பல ரியாலிட்டி இருக்கு. பல பிரபஞ்ச சாத்தியக் கூறுகள் இருக்கு. ஸோ, பல நிகழ் உலகங்கள் இருக்கு. ஒண்ணுல நீ பிரதமரா இருக்கலாம். ஒண்ணு இதைவிட முன்னேறிய சமுதாயமா இருக்கலாம். இல்லை காட்டுமிராண்டித்தனமாக இருக்கலாம். ஒண்ணுல நீ செத்துக்கூட போயிருக்கலாம்."

"டைம் டிராவல்னு சொன்ன மாதிரி இருந்தது".

"அங்கதான் வரேன். காலம் மற்ற பரிமாணங்களைப் போல அல்லாததால ரிவர்ஸ் கியரில போய்விட இயலாது. வார்ம் ஹோல் வழியாக வேறு ஒரு நிகழுலகத்திற்(ரியாலிட்டி)க்கு போய் அங்கிருந்துதான் இந்த நிகழுலகத்தின் முற்காலத்திற்க்கு வர முடியும்."

"இன்னும் இதற்கு சூயஸ் கால்வாய் கண்டுபிடிக்கலையா? இதனால எந்தப் பிரச்சனையும் இல்லயா?"

"இல்ல. ஆனால் பொதுவா கதைகளில் சொல்லுவது போல அங்க போனா மியூசியம்குள்ள போனமாதிரியா எதையும் தொடாம வரணும். நீ அங்க போய் தும்மல் போட்டால் கூட டைம் லைன் மாறிடும்ங்கிற கட்டுப்பாடு இருந்தாலும் யாரும் பின்பற்றுவதில்லை. மிரக்கிள் சொல்லப்படுறதில பாதி விஷயங்கள் வெவ்வேறு டைம்லைனில் இருந்து சென்றவர்கள்தான் என ஒரு தியரி இருக்கு. கிருஷ்ணர் வேறு ரியாலிட்டியாத்தான் இருக்கனும். யோசி, நீல நிறம், மனித வடிவம், உருவ மாற்று சக்திகள், டெலிபோர்ட்டேஷன் வசதிகள், அந்தப் போர்கூட ஒரு நவீன யுத்தமாக இருந்திருக்கக் கூடிய அடையாளம் தெரிவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏசுவுக்கும் அதே கதைதான்"

"என்னால நம்பவே முடியல. மனித சமுதாய்த்தின் நம்பிக்கை வேர்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதன் விளைவு? ரொம்ப இம்மாரல் ஆகிடாது?"

"இந்த ஆராய்ச்சி இத்துடன் புதைக்கப்பட்டு விடும். வேறு ஒரு ஆராய்ச்சியின் பெயரில் அரசாங்கம் விருது கொடுத்துவிட்டு ராணுவ ரகசியக் காப்பகத்தில் சேர்த்துவிடும்".

"அதைத் தயாரிப்பானேன்? மறைப்பானேன்?"

"எந்தக் காலத்திலும் இல்லாத அளவு இப்பொழுது ஆராய்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கியுள்ளது. வேறு டைம் டிராவலர்களால் எந்த ஆபத்தும் வராமல் காப்பதற்கான இறுதி ஆயுதம்".

"..."

"என்ன?

"ஒண்ணுமில்ல. கதைல படிக்கிற அளவு நல்லாயில்ல. கொஞ்சம் கேனத்தனமா இருக்கு".

"ஏன் சொல்ல மாட்ட? ஒருத்தன் இத்தனை வருசமா கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சிருக்கான்ல, கேனப் பயதான்".

"எத்தன தடவ பயணம் பண்ணிருக்க? இதுக்கு தகுதி எதுவும் இருக்கா?"

"15.விண்வெளிவீரன் மாதிரிதான். ஆனா எங்க புரொபசர் நிறைய மெடாஃபிசிக்ஸ்(இருத்தல் தத்துவம்) படிக்க வச்சார்"

"Satre படிக்க சொன்னாரா?"

"அது எக்ஸிஸ்டென்ஸியலிஸ்ட். இது கொஞ்சம் பழசு. கிரேக்க ஞானிகள் உருவாக்கினது. பிரபஞ்சத்தப் பத்தி பேசுவாங்க ".

"ஹெ... கோமணாண்டிஸ்! Cynic! "

"Shit!"

"சரி எனக்கு ஏதாவது ஞாபகச் சின்னம் கொண்டு வந்தயா?"

"உனக்கில்ல. அன்ஷுவுக்குதான் இருக்கு."

"அடப்பாவி, மங்கையென்று வாழ்வில் வந்துவிடில் நட்பும் சுற்றமும் நாட்டில் கேலியென்பார்னு கம்பர் 7ம் நூற்றாண்டிலயே சொல்லிருக்கார். நீ கொண்டு வந்தயே அவளுக்கு, என்ன அது?"

"ஒரு புத்தகம். கிடைப்பதற்கரிய காகிதப் புத்தகம். அது இன்னும் புழக்கத்துல இருக்குற வேற ஒரு நிகழ் உலக(alternate reality)த்துல எனக்கு கொடுத்தது, அன்ஷுகிட்ட போய் பேசு என்ற அறிவுரையுடன்".

"யாரு அது? உனக்கு உருப்படியான அறிவுரையெல்லாம் கொடுக்குறது." என்றபடியே அஜய் பிரித்து பார்த்தான், பவுண்டைன் பேனாவின் குழிகளில் வழிந்த மை காகிதத்தில் அழகாக பரவியிருந்தது, 'இரு அவளுக்கு ஒரு அவன்' என்ற தலைப்பின் கீழ்,"அன்புடன் An.D".

"and? யாரு அது conjunctionல பேரு வச்சிருக்கது?", என்றவன் விழிகள் விரிந்தது ஷான் அந்தப் பக்கத்தின் கீழே எழுதியிருப்பதைக் காட்டிய பொழுது,
"Anshu Devi"

-------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி - முதலில் இது விஞ்ஞானப் புனைவு என்பதை என்னைப் போன்ற அறிவாளிகள்(!) புரிந்து கொள்ள கூறுகிறேன். இக்கதையில் பல குறியீடுகள்(அப்படியென்றால் என்னவென்றே தெரியாவிட்டாலும்!) ஒளித்து வைத்திருக்கிறேன், கண்டுபிடியுங்கள் ஈஸ்டர் முட்டை போல எனக் கூறும் வேளையில் எனது கைபேசி கூவி, நீ அனுப்பிய மெயிலில் கதையை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என நண்பன் கேட்கிறான். நீங்களாவது அதைக் கண்டுபிடுத்து ஒப்படையுங்கள். கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு என்றால் அதுவும் வேண்டாமென்கிறான் நண்பன், அவனுக்கு தெரியும் கண்டுபிடிப்பவர்களுக்கு அதையே பரிசளித்துவிடுவேன் என்று. அதான் வேணாமென்கிறான் (அவன் என் நாறிப் போன சாக்ஸை கண்டுபிடித்துக் கொடுத்தவன், பரிசுக்காக!)

:)

Comments Posted (19)

கொஞ்சம் பெருசா போயிடுச்சுங்க.. ஹி... ஹி..:)

தெய்வமே...! முடியல தெய்வமே..!
கண்ணுல தாரை தாரையா ஊத்துது.

இத நான் இப்போ கீழ இருந்து படிச்சுட்டு இருக்கேன்.
அது நல்லாருக்கு. படிச்சு பாருங்களேன்.
:-)

ரொம்ப நாள் கழிச்சு போஸ்ட் போட்டிருக்கீங்க. படிச்சிட்டு வரேன். கொஞ்சம் பெரிசா இருக்கே?!

ஏன் இப்படி.. முடியல..

//Karthik said...
ரொம்ப நாள் கழிச்சு போஸ்ட் போட்டிருக்கீங்க. படிச்சிட்டு வரேன். கொஞ்சம் பெரிசா இருக்கே//

போனவரை ஆள காணோம் :))

இம்புட்டு பெரிசா???அவ்வ்வ்வ் ரூமுக்கு போய் படிக்கிறேன்.

@ராஜு
நோ, அழக்கூடாது. கண்ண மூடிட்டு மருந்தக் குடிக்குற மாதிரி ஒரு வேகத்துல கண்ணைத் திறந்து படிச்சிரனும்.

@கார்த்திக்
கொஞ்சம் பெருசா இருந்தா எல்லாரும் குழம்பி, 'கதை நல்லாருக்கு. நீ பெரிய எழுத்தாளர்தான்னு" சரண்டைஞ்சுருவாங்கன்னு ஒரு நம்பிக்கை :)

@கார்த்திகைபாண்டியன்
வாத்தியாரே, இத விட பல பயங்கரமான சயின்ஸ் ஃபிக்ஷன் பரிட்ச்சை பேப்பர்ல எழுதுவாங்க பாருங்க!

@ஆதவன்
மனசத் தளரவிடாதீங்கண்ணே! இந்தக் கதைக்கு பல பாகங்கள் எழுதலாம்னு இருக்கேன்.!

இதை நான் எப்படியும் படிச்சிட்டு சொல்றேன்..

அய்யோ, ஒருத்தர் கூட படிக்கலயா? உ.த.விட நாலு பக்கம் கம்மியாதான இருக்கு? :0

பாப்பு வெச்சிட்டியப்பா ஆப்பு...

75% படிச்சேன் ஒன்னும் பிரில. இன்னொரு தபா try பண்ணறேன்....!?

yeah.. well..how to say.. actually..what i meant to say is.. theme of the story.. oh.. no words to say you know? i want to say something but the words are...ok.. you know.. i.. i.. felt something new but i cant.. so i will tell you later..எப்பா தப்பிச்சேன்டா சாமி..

@அஷோக்
புரியுது. ஏன் டா இப்படின்னு கேக்குறீங்க!

@கிஷோர்
இதுக்கு அசிங்கமாவே திட்டிருக்கலாம்.

இதை விட அசிங்கமா எப்படி திட்றது...?

யோவ் கிஷோரு, உன்னைய வச்சுகுறேன்யா.

இது என்ன ஒரு வரி கதையா? கடைசி வரில கதைய வெச்சிட்டு எங்களை கிமு, பாரலல் யுனிவர்ஸ் நு அலையவுடுறீங்களே! அவ்வ்வ்!!

//☀நான் ஆதவன்☀ said...
//Karthik said...
ரொம்ப நாள் கழிச்சு போஸ்ட் போட்டிருக்கீங்க. படிச்சிட்டு வரேன். கொஞ்சம் பெரிசா இருக்கே//
போனவரை ஆள காணோம் :))//

பாதிலயே தலை தெறிக்க ஓடி எஸ்கேப் ஆனோம்ல?! இப்பதான் தைரியம் வந்து முடிச்சேன். :))

கதை நல்லாருக்கு. நீங்க பெரிய எழுத்தாளர்தான்.

கதை நல்லாருக்கு. நீங்க பெரிய எழுத்தாளர்தான்./////

எனக்கேவா?

அருமை .
நன்றாக இருக்கிறது .
சூப்பர்.
கலக்கிட்டீங்க.

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!